Wednesday, January 20, 2010

அறிவியல் துறை வேலைவாய்ப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு

புதுடில்லி : அறிவியல் பாடங்களை எடுத்துப் படிப்போர் எண்ணிக்கை 21 சதவீதம் என்ற அளவில் நிலையாக இருந்தாலும், அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் 17 சதவீதம் அதிகரித்துள்ளன என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைக்காக, "மனிதவள மேலாண்மை மையம்' என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது.



அந்த ஆய்வில் தெரியவந்துள்ள விவரங்கள் வருமாறு: அறிவியலை பாடமாக எடுத்துப் படிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கவே இல்லை. 21 சதவீதம் என்ற அளவில் நிலையாக உள்ளது. அதேநேரத்தில், இந்தத் துறையில் 17 சதவீத அளவுக்கு வேலை வாய்ப்புகள் கூடியுள்ளன.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில், 27 ஆயிரத்து 791 பணியிடங்கள் காலியாக இருப்பதாக 2005ம் ஆண்டில் விளம்பரம் வெளியிடப்பட்டது. 2006ம் ஆண்டில், இந்த காலியிடங்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 362 ஆக அதிகரித்துள்ளது.
பள்ளிகளில் அறிவியல் கல்வியை மேம்படுத்தவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகளை மேம்படுத்தவும், மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததே, இந்த அதிகரிப்புக்கு காரணம். குறிப்பாக, பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீட்டை அதிகரித்தது, ஐ.ஐ.டி.,க்கள் உட்பட பல வகையான கல்வி நிறுவனங்களை அமைக்க நடவடிக்கை எடுத்தது போன்றவையும் வேலைவாய்ப்புகள் கூட காரணம்.

கடந்த 2003 -04ம் ஆண்டில், 5,612 பேரும், 2004-05ம் ஆண்டில் 5,549 பேரும் அறிவியல் பாடங்களில் பி.எச்டி., பட்டம் பெற்றுள்ளனர். பல்கலைக் கழக மானியக் குழுவின் அறிக்கைகள் மூலம் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.
இருந்தாலும், சதவீத அடிப்படையில் பார்த்தால், அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்கள் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 2003 -04, 2004-05 மற்றும் 2005 -06 ஆகிய ஆண்டுகளில் பெருமளவு அதிகரிக்கவில்லை.
கடந்த 2005ம் ஆண்டில், 3,751 விஞ்ஞானிகள் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், 2006ல் 4,381 பணியிடங்களும் காலியாக இருப்பதாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.
அதேபோல், 536 அறிவியல் ஆசிரியர்கள் தேவை என, 2005ம் ஆண்டிலும், 644 ஆசிரியர்கள் தேவை என, 2006ம் ஆண்டிலும் அறிவிப்பு வெளியானது. மொத்தத்தில், ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் 15 முதல் 18 சதவீதம் அளவுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment