Sunday, January 31, 2010

தமிழ்ச் சமூக வரலாறு

சங்க காலம்

தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய முறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதனால் இக்காலத்தை மாறுதல் நிகழும் காலம் (TRANSITION PERIOD) என்பர். உணவு தேடி வாழும் இனக்குழு வாழ்க்கை, கால்நடை வளர்ப்பினை மையமாகக் கொண்ட மேய்ச்சல் நில வாழ்க்கை, உணவு உற்பத்தி செய்யும் ஒரு விதமான நிலவுடைமைச் சமுதாய வாழ்க்கை என மூன்று வகையான சமூக அமைப்புகள் வெவ்வேறு நிலப்பகுதிகளில் ஒரே நேரத்தில் நிலவின. இதனடிப்படையில் வெவ்வேறு வகையான பொருளாதார நடவடிக்கைகளும் சமூக அமைப்புகளும் கொண்ட ஓர் அசமத்துவ வளர்ச்சி (UNEVEN DEVELOPMENT) சங்ககாலத்தில் நிலவியது.

நிலப் பாகுபாடு

மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி, காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லை, ஆறும் ஆறு பாயும் சமவெளிப் பகுதிகளும் மருதம், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என அழைக்கப்பட்டன. குறிஞ்சியும் முல்லையும் கோடையின் வெம்மையால் தம் நிலையிலிருந்து மாறுபட்டு நிற்கும். இது தற்காலிகமான ஒன்று. இந்நிலப்பகுதி பாலை எனப்பட்டது.

மக்களும் பண்பாடும்
குறிஞ்சி நில மக்கள் சிலம்பன், குறவன், வெற்பன், வேட்டுவர், கானவர், குன்றவர் என அழைக்கப்பட்டனர். தொடக்கத்தில் வில், அம்பு, வேல் ஆகியவற்றின் துணையுடன் வேட்டையாடி வாழ்ந்தனர். மூங்கிலரிசி, திணை, மலை நெல், தேன், கிழங்குகள் ஆகியனவும் உணவாகப் பயன்பட்டன. உணவு தேடி வாழும் வாழ்க்கை இங்கு நிலவியது. பின், புன்புல வேளாண்மை உருவாகியது. சேயோனாகிய முருகன் இவர்களுடைய கடவுளாக இருந்தான். பறை, தொண்டகப்பறை, குறிஞ்சியாழ் ஆகியன இங்கு வழங்கிய இசைக் கருவிகள். வள்ளிக்கூத்து குறிஞ்சி நிலத்துக்குரிய ஆட்டக் கலையாகும்.

ஆடுமாடுகளை மேய்க்கும் மேய்ச்ச்சல் நில வாழ்க்கையை மையமாகக் கொண்டது முல்லை நிலம். வரகு, சாமை, கேழ்வரகு, கடலை, அவரை, துவரை ஆகியன மழையை நம்பி மேற்கொண்ட வேளாண்மையில் கிட்டின. மாயோனாகிய திருமால் முல்லை நிலத்தின் கடவுள். ஏறுகோட்பறை, குழல், முல்லையாழ் ஆகியன இந்நிலத்துக்குரிய இசைக் கருவிகள். உணவு தேடும் வாழ்க்கையைக் கடந்து உணவு உற்பத்தி செய்யும் நிலையும் நிரைகளை சொத்துக்களாக கொள்ளும் நிலையும் இங்கு உருவாகின.

மலையிலும் காட்டிலும் அலைந்து திரிந்த நிலையிலிருந்து வளர்ச்சி பெற்று ஆற்றங்கரையில் நிலையாக வாழத் தொடங்கிய இடம் மருத நிலமாகும். இங்கு உழு தொழிலின் மூலம் உணவு உற்பத்தி நிகழ்ந்தது. ஆற்று நீரை நேரடியாகவும் நீர்நிலைகளில் தேக்கி வைத்தும் பயன்படுத்தினர். செந்நெல், வெண்நெல், கரும்பு, மஞ்சள் (பிற்காலத்தில் வாழை) ஆகியன முக்கிய உற்பத்திப் பொருளாயின. கரும்பிலிருந்து வெல்லம் தயாரிக்கும் கரும்பாலைகளும், உபரி நெல்லை மூலதனமாகக் கொண்டு பண்டமாற்று வாணிபத்தை மேற்கொண்ட வாணிப குழுக்களும் உருவாயின. சிற்×ர்கள் பேரூர்களாக வளர்ச்சி பெறத் தொடங்கின. நெல்லரிப் பறையும், மருதயாழும் இந்நிலத்தின் இசைக் கருவிகளாகயிருந்தன. தச்சர், கொல்லர், குயவர் ஆகிய கைவினைர்களின் தோற்றமும் இங்குதான் உருவாகியது.

நெய்தல் நிலப்பகுதியில் மீன்பிடித்தலும், உப்பு உற்பத்தி, உலர்மீன் உற்பத்தி செய்தலும், இவற்றை பிற நிலப்பகுதிகளுக்குக் கொண்டு சென்று பண்டமாற்று செய்தலும் முக்கிய தொழில்கள். இதன் வளர்ச்சி நிலையாகக் கடல் வாணிபம் உருவாகியது. நெய்தல் குடியிருப்புகள் பட்டினம், பாக்கம் என்றழைக்கப்பட்டன. வருணன் (வண்ணன்) இந்நிலத்தின் தெய்வம். நாவாய்பறையும், நெய்தல் யாழும் இசைக் கருவிகள்.

வளமற்ற நிலப்பகுதியான பாலையில் வழிப்பறியும் கொள்ளையும் மக்களின் துணைத் தொழில்களாயின. இங்கு வாழ்ந்த மறவர்களின் குடியிருப்பு, கொல் குறும்பு எனப்பட்டது. கொற்றவை, இந்நிலத்தின் தெய்வம். நிறைகோட்பறை, சூறைகோட்பறை, வாகையாழ் ஆகியன இந்நிலத்தின் இசைக் கருவிகள்.

சங்ககால அரசியல்

சங்ககாலத் தமிழகம் மன்னராட்சியின் கீழ் செயல்பட்டது. ஆட்சி புரிவோர் குறுநில மன்னர்கள். வேந்தர் என இரண்டு வகையாக அழைக்கப்பட்டனர். குறிஞ்சி முல்லை நெய்தல் பாலை ஆகிய நான்கு நிலப் பகுதிகளிலும் வாழ்ந்த குறவர், ஆயர், பரவர், மறவர் ஆகிய மக்கட் பிரிவினர் தத்தமக்கென சுயேச்சையான ஆளுவோரைக் கொண்டிருந்தனர். இவர்களையே குறுநில மன்னர்கள் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடும். குறுநில மன்னர்களுக்கும் அவர்களால் ஆளப்படும் மக்களுக்குமிடையே ஆழமான வேறுபாடுகள் நிலவவில்லை. மருதநில அல்லது நெய்தல் நில நகர் ஒன்றினை மையமாகக் கொண்டு பரந்த நிலப்பகுதியை ஆட்சிபுரிந்தவர்கள் வேந்தர் எனப்பட்டனர். சேரர், சோழர், பாண்டியர் என மூன்று வேந்தர்கள் மட்டுமே பெருநிலப் பகுதியை ஆண்டனர். வாய்ப்பு நேரிடும் போது குறுநில மன்னர்களின் நிலப் பகுதியையும் தங்களுடன் இணைத்துக் கொண்டனர்.

மூவேந்தர்களுக்கு துணை புரிய 1. அமைச்சர், 2. புரோகிதர், 3. சேனாதிபதி, 4. தூதர், 5. ஒற்றர் என்போரைக் கொண்ட ஐம்பெருங் குழுவும், 1. கரணத் தலைவர், 2. கருமகாரர், 3. கனகச்சுற்றம், 4. கடைகாப்பாளர், 5. நகரமாந்தர், 6. படைத் தலைவர், 7. யானை வீரர், 8. இவுளிமறவர் என்போரைக் கொண்ட எண்பேராயம் என்ற அமைப்பும் இருந்தன. ஆயினும் இவ்விரு அமைப்புகளும் மன்னனைக் கட்டுப்படுத்தும் தன்மையன அல்ல. குறுநில மன்னர்கள் ஆண்ட பகுதிகளில் பொதியில் மன்றம் என்ற அமைப்புகள் செயல்பட்டன.

சமயம்

ஆவிகளின் மீது நம்பிக்கை கொண்ட ஆவி உலகக் கோட்பாடும் (Animism)‘குலக்குறி’ (Totem) வழிபாடும் மூத்தோர் வீரர் வழிபாடும் சங்ககாலச் சமயத்தில் செல்வாக்கு செலுத்தின. போரில் இறந்துபட்ட வீரர்களுக்கு நடுகல் நட்டி வழிபடும் நடுகல் வழிபாடு பரவலாக இருந்தது. கடிமரம், காவல்மரம் என்ற பெயரில் குறிப்பிட்ட மரங்கள் புனித மரங்களாகக் கருதப்பட்டன. பாம்பு வழிபாடும் வழக்கிலிருந்தது. திருமால், முருகன், கொற்றவை ஆகியன சங்ககாலத்தில் முக்கிய தெய்வங்களாக விளங்கின. இன்று பரவலாக உள்ள பிள்ளையார் வழிபாடு சங்ககாலத்தில் இல்லை. சிவனைப் பற்றிய குறிப்புகள் சங்க நூல்களில் இடம் பெற்றாலும் மேற்கூறிய தெய்வங்களைப் போல் செல்வாக்கு பெற்றிருக்கவில்லை. வாலியோன் என்ற பெயரில் பலராமர் வழிபாடு இருந்துள்ளது. சமணம், பௌத்தம் ஆகிய வடபுல சமயங்கள் இங்கு பரவின. வடமொழித் தாக்கத்தின் விளைவாக வேள்விகள் நிகழ்ந்தன. சங்ககால கவிஞர்கள் சிலர் இவ்விரு சமயங்களையும் தழுவியிருந்தனர். இவ்வுலக வாழ்க்கையை வெறுத்தொதுக்கும் நிலையாமைக் கோட்பாடு செல்வாக்குப் பெறவில்லை. வாழ்க்கை உவப்புக் கொள்கையே மேலோங்கியிருந்தது.

பொருளியல்

நாட்டில் அடிப்படைத் தொழிலாக வேளாண்மை அமைந்தது. மருதநிலப் பகுதியில் நெல்லும், கரும்பும் பயிர் செய்யப்பட்டன. எள், கொள், துவரை ஆகியன குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகளில் பயிர் ஆயின. சாமை, வரகு, திணை ஆகியன முக்கிய புன்செய் நிலப் பயிர்களாகும். தேனெடுத்தல், கிழங்குகளை அகழ்ந்தெடுத்தல், மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் ஆகியன ஏனைய பொருளாதார நடவடிக்கைகளாகும். நெசவு, கொல்வேலை, தச்சு வேலை, கருப்பஞ் சாற்றிலிருந்து வெல்லம் எடுத்தல், சங்கறுத்தல், கூடை முடைதல் ஆகியன முக்கிய கைத்தொழில்களாக அமைந்தன. பண்டமாற்று முறையில் வாணிகம் நிகழ்ந்தது. பெரிய நகரங்களில் அங்காடி என்ற பெயரில் சந்தைகள் இருந்தன. பகற்பொழுதில் செயல்படுபவை நாளங்காடி என்றும், இரவு நேரத்தில் செயல்படுபவை அல்லங்காடி என்றும் அழைக்கப்பட்டன. கடைத்தெரு நியமம் என்று அழைக்கப்பட்டது. பொருட்களைக் கொண்டு செல்ல எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகள் பயன்படடன. வணிகர்கள் சாத்து என்ற பெயரில் குழுக்களாகச் செயல்பட்டனர். மிளகு, அரிசி, இஞ்சி, ஏலம், மஞ்சள், இலவங்கம் ஆகிய உணவுப் பொருட்களும் சந்தனம், அகில் ஆகிய மணப் பொருட்களும் தமிழகத்திலிருந்து அரேபியா, எகிப்து, உரோம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. குரங்கு, மயில், யானைத்தந்தம், முத்து ஆகியனவும் ஏற்றுமதியாயின. கடல் வாணிகத்திற்குப் பாய்கள் கட்டப்பட்ட மரக்கலங்கள் பயன்பட்டன.

இலக்கணம்

தமிழ் மொழி தொன்மையான நூலாக இன்று நம் பார்வைக்குக் கிட்டுவது தொல்காப்பியமாகும். தனக்கு முன்னால் வாழ்ந்த நூலாசிரியர்களின் நூல்களை கற்றுத் தேர்ந்து தொல்காப்பியர் இந்நூலை உருவாக்கியுள்ளார். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பிரிவுகளாக இந்நூல் அமைந்துள்ளது. பொதுவாக மொழிகளின் இலக்கணம் என்பது எழுத்து, சொல் யாப்பு சார்ந்ததாக மட்டுமே இருக்கும். ஆனால் தொல்காப்பியம் இவை மூன்றுடன் மட்டுமின்றி மனித வாழ்க்கையின் இலக்கணத்தை உணர்த்தும் வகையில் பொருளதிகாரம் என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளது.

இலக்கியம்

தமிழ் இலக்கியத்தின் பொற்காலமாக சங்ககாலம் அமைந்தது. இக்காலத்தில் தோன்றிய பெரும்பான்மைப் பாடல்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற பெயரில் பிற்காலத்தில் தொகுப்பு நூல்களாகத் தொகுக்கப்பட்டன. 1. நற்றிணை, 2. குறுந்தொகை, 3. ஐங்குறுநூறு, 4. பதிற்றுப்பத்து, 5. பரிபாடல், 6. கலித்தொகை, 7. அகநானூறு, 8. புறநானூறு என்ற எட்டு நூல்களும் எட்டுத்தொகை என்ற தொகுப்பில் அடங்குகின்றன. இந்நூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பல்வேறு கவிஞர்களால் பல்வேறு கால கட்டங்களில் பாடப்பட்டவை. 1. திருமுருகாற்றுப்படை, 2. பொருநராற்றுப்படை, 3. சிறுபாணாற்றுப்படை, 4. பெரும்பாணாற்றுப்படை, 5. முல்லைப்பாட்டு, 6. மதுரைக் காஞ்சி, 7. நெடுநல் வாடை, 8. குறிஞ்சிப் பாட்டு, 9. பட்டினப்பாலை, 10. மலைபடுகடாம் என்ற பத்து நூல்களும் பத்துப்பாட்டு எனப் பெயர் பெற்றன. இவற்றுள் திருமுருகாற்றுப்படையும், நெடுநல்வாடையும் நக்கீரராலும், எஞ்சிய எட்டு நூல்களும் எட்டு கவிஞர்களாலும் இயற்றப்பட்டன. இவ்விலக்கியங்களின் தனிச்சிறப்பு இவை அகம் புறம் என்ற பொருள் பாகுபாடுகளைக் கொண்டிருப்பதாகும். மனிதர்களின் அகம் (மனம்) சார்ந்த காதல் தொடர்பான செய்திகளைக் கூறுவது அகத்திணை ஆகும். இதற்குப் புறத்தேயுள்ள கல்வி, வீரம், கொடை, நீதி அறமல்லன போன்றவற்றைக் குறிப்பது புறத்திணையாகும். அகநூல்களில் இடம்பெறும் காதலர்களை, இயற்பெயர் சுட்டிக் குறிப்பிடக் கூடாது, என்ற தொல்காப்பியர் விதியை சங்ககாலக் கவிஞர்கள் உறுதியாகக் கடைபிடித்தனர்.

சங்ககாலத்தை அடுத்து வரும் காலம் சங்கம் மருவிய காலம் எனப்படும். இக்காலத்தில் உருவான பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு எனப்படுகின்றன. இவற்றுள் திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை ஐம்பது, கார் நாற்பது, கைந்நிலை என்ற ஆறு நூல்களும் சங்ககால அகத்திணைமரபு சார்ந்தவை. எஞ்சிய நூல்களில் திருக்குறள் தவிர்ந்த, நாலடியார், பழமொழி, ஏலாதி, திரிகடுகம், நான்மணிக்கடிகை, ஆசாரக் கோவை, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக் காஞ்சி என்ற பதினொறு நூல்களும் புறத்திணை சார்ந்தவை. குறள் அகமும், புறமும் சார்ந்த நூலாகும்.

பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் தலையான இடத்தைப் பெறுவது திருக்குறள். 1330 குறள் வெண்பாக்களைக் கொண்ட இந்நூல் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. எச்சமயத்தையும் சாராது வாழ்வியல் நெறிகளைக் கூறுவது இதன் தனிச் சிறப்பாகும். சங்க காலத்தில் வாழ்வியலின் பகுதியாகக் கருதப்பட்ட கள்ளுண்டல், பரத்தையற் பிரிவு, புலால் உண்ணுதல், சூதாடல் ஆகியன வள்ளுவரால் கடிந்தொதுக்கப்படுகின்றன. திருக்குறளுக்கு அடுத்த இடத்தைப் பெறும் நாலடியார் சமண முனிவர்கள் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பாகும். இந்நூல் குறளுக்கு மாறாக உலகியல் வாழ்க்கை மீது வெறுப்பை வெளிப்படுத்தி துறவறத்தை வற்புறுத்துகிறது. இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்ற இரு நூல்களும் வைதீக சமயச் சார்பானவை. ஒழுக்கங்களின் தொகுதி என்ற பொருளைத் தரும் ஆசாரக் கோவை என்ற நூல் வடமொழி நீதிநூல்கள் சிலவற்றின் சாரமாக அமைகின்றது. பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகியன சமணம் சார்ந்து நீதி கூறுகின்றன.

பல்லவர் காலம் (கி.பி. 3 முதல் 9 வரை)

சங்ககாலத்துக்குப் பின் களப்பிரர் என்ற அரச மரபினரின் ஆட்சி நடைபெற்றது. இவர்கள் சமண சமயத்தைச் சார்ந்தவர்கள். இவர்களது காலத்தை இருண்ட காலம் என்று சொல்வது பொதுவான மரபு. ஆனால் திரமிள சங்கம் என்ற பெயரில் சங்கம் ஒன்றை அமைத்து தமிழ் வளர்த்தமையை சதாசிவபண்டாரத்தார் சுட்டிக்காட்டி, தமிழ் மொழிக்கு இது இருண்ட காலமல்ல என்பதைச் சான்றுகளுடன் நிறுவியுள்ளார். களப்பிரர் ஆட்சிக்குப் பின் பல்லவர் ஆட்சி தமிழகத்தில் நிலவியது. கி. பி. 260 தொடங்கி 450 ஆண்டுகள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பல்லவர் ஆட்சி நிலை பெற்றிருந்தது.

சமயம்

சைவமும், வைணவமும் எழுச்சி பெற்ற காலம் பல்லவர் காலம் ஆகும். சைவநாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் தோற்றுவித்த சமய இயக்கம் பக்தி இயக்கம். இவ்விரு சமயத்தினரும் சமணத்துடனும், பௌத்தத்துடனும் மாறுபட்டு அவற்றின் செல்வாக்கை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தேவார ஆசிரியர்களான திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தமிழ் நாடெங்கும் பயணம் செய்து சைவ சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டினர். இவர்களால் பாடப்பெற்ற சைவக் கோயில்கள் பாடல் பெற்ற தலங்கள் எனப் பெயர் பெற்றன. இவர்களைப் போன்றே ஆழ்வார்களும் வைணவக் கோயில்களுக்குச் சென்று பக்திப் பாசுரங்கள் பாடினர். இவர்களால் பாடப்பெற்ற வைணவக் கோயில்கள் மங்களா சாசனம் செய்த திருப்பதிகள் எனப்பட்டன.

பௌத்த சமணத் துறவிகள் வாழும் சமய மடங்களில் சமய நூல்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன. காஞ்சிபுரம் பௌத்த மடத்தில் பயின்ற போதிதருமர், போதிருசி என்ற இரு துறவிகளும் சீனா, ஜப்பான் நாடுகளுக்குச் சென்று சென் புத்தமதப் பிரிவை பரப்பினர். பீகாரில் இருந்த உலகப் புகழ் பெற்ற நாலந்தா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும், துணை வேந்தராகவும் இருந்த தருமபாலர் காஞ்சியில் பிறந்து பயின்றவர்தாம். வெளிநாட்டுப் புத்ததுறவிகள் இங்கு வந்து சமய நூல்களைக் கற்றுச் சென்றனர்.

பல்லவர் அரசு

சங்ககாலத்தைப் போன்றே பல்லவர் காலத்திலும் ஆட்சிமுறை பிறப்பு வழி உரிமையாய் இருந்து வந்தது. மன்னருக்குத் துணைபுரிய அமைச்சர்கள் இருந்தனர். ஆட்சிப் பகுதியானது கோட்டம், நாடு, ஊர் என்று மூன்று பிரிவுகளாக பகுக்கப்பட்டது. நாட்டின் நிர்வாகத்தைக் கவனித்து வந்தவர் நாட்டார் என்றும், ஊரின் ஆட்சிக்குப் பொறுப்பான வேளாளர்கள் ஊரார் என்றும் அழைக்கப்பட்டனர். இவை தவிர பிரம்மதேயம் என்ற பெயரில் பிராமணருக்கு தானமாக வழங்கப்பட்ட ஊர்களைப் பிராமணர்களே நிர்வகித்து வந்தனர். இம்மூன்று வகையான நிர்வாகிகளும் கோவில் மான்யங்கள், நீர்ப்பாசனம், நீதி விசாரணை, நிலவுரிமை போன்றவற்றை கவனித்து வந்தனர். இதன் பொருட்டு வாரியங்கள் பல உருவாக்கப்பட்டன. இவ்வாரியங்கள் அதற்கென்று விதிக்கப்பட்ட பணியினைச் செய்து வந்தன. சான்றாக வேளாண்மைக்கு ஆதரவான ஏரிகளைப் பராமரிக்கும் வாரியம் ஏரி வாரியம் என்றும் தோட்டங்களைப் பராமரிக்கும் வாரியம் தோட்ட வாரியம் என்று அழைக்கப்பட்டதைக் குறிப்பிடலாம்.

கலை

பல்லவர் காலத்தில் கட்டிடக் கலையும் சிற்பக் கலையும் வளர்ச்சியடைந்தது. கருங்கற்களினால் கட்டிடங்களை கட்டும் பணி பல்லவர் காலத்தில்தான் உருவாகியது. குகைகளை உருவாக்கி அமைக்கப்பட்ட குடைவரைக் கோவில்கள் பல்லவர் காலத்தில் செல்வாக்கு பெற்றன (பல்லவர்களுக்கு முன்னர் பாண்டியர்கள் குடைவரைக் கோவில்களை உருவாக்கி உள்ளனர் என்பது தொல்லியல் வல்லுநர் நாகசாமியின் கருத்து). கல்லிலே கலை வண்ணம் கண்ட பல்லவர் கால சிற்பக்கலைக்கு காஞ்சியிலும், மாமல்லபுரத்திலும் உள்ள கோவில் சிற்பங்கள் சான்று பகர்கின்றன. இவை தவிர இசையும், நடனமும் பல்லவர் காலத்தில் தழைத்தமைக்கு, குடுமியான்மலை, திருமெய்யம் ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்களும் சித்தன்ன வாசலில் தீட்டப் பெற்றுள்ள நடன மங்கையரின் ஓவியங்களும் சான்று.

பல்லவர் காலத்தில் வடமொழி செழித்து வளர்ந்தது. பல்லவர்கள் வடமொழி ஆர்வலர்களாக இருந்தமையே இதற்குக் காரணமாகும். பல்லவ மன்னர்கள் அவையில் நடிப்பதற்காக பாஷகவி என்பவர் வடமொழி நாடகங்கள் சிலவற்றை எழுதியுள்ளார். பௌத்த துறவிகளைப் பகடி செய்யும் வகையில் மத்த விலாச பிரகசனம் என்ற எள்ளல் நாடகத்தை மகேந்திர வர்மன் வடமொழியில் எழுதியுள்ளான். அணி இலக்கண அறிஞரான தண்டி என்னும் கவிஞர் எழுதிய காவிய தரிஸனம் என்ற வடமொழி அணி இலக்கண நூல் தண்டியலங்காரம் என்ற பெயரில் தமிழில் வெளியாயிற்று. பாரதக் கதையைக் கூறும் பாரத வெண்பாவும் நந்திக் கலம்பகம் என்ற சிற்றிலக்கியமும், பெருங்கதை என்ற காப்பியமும் பல்லவர் காலத்தில் உருவான குறிப்பிடத்தக்க தமிழ் இலக்கியங்கள் ஆகும்.

சோழர் காலம் (கி.பி. 10 - கி.பி. 13)

பல்லவர் காலத்துக்குப் பின் தமிழ்நாட்டில் உருவான ஒரு வலிமையான அரசு சோழப் பேரரசு கும். சோழர் ஆட்சியிலும் மன்னனே ஆட்சி மையமாக அமைந்தான். சோழநாடு மண்டலங்கள் என்ற பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மண்டலத்துள்ளும் வளநாடுகள் பல இருந்தன. பல கிராமங்களின் தொகுப்பாக கூற்றம் என்ற அமைப்பு இருந்தது. இதை கோட்டம் அல்லது நாடு என்றும் குறிப்பிட்டனர். பல கூற்றங்களை உள்ளடக்கியதாக வளநாடு அமைந்தது. சுப்பாராயலுவின் கருத்துப்படி 10 முதல் 300 சதுரம் வரை பரப்பைக் கொண்ட நிருவாகப் பிரிவாக நாடு இருந்தது. நாடுகளின் பொருப்பாளர்களாக நாட்டார், நாடுகண்காணி என்போர் இருந்தனர். வேளாண்மை காவல் வரிவசூல் ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொண்டனர். மன்னனுக்கு உதவி புரிய இருக்கும் அரசு அலுவலர்கள் உடன் கூட்டம் என்று அழைக்கப்பட்டனர். வாய்மொழியாக மன்னன் பிறப்பிக்கும் ஆணைகளைக் கேட்டு அவற்றை எழுத்தில் பதிவு செய்து உரியவர்களிடத்தில் அனுப்பி வைக்கும் பணியைச் செய்பவன் திருவாய்க்கேள்வி திருமந்திர ஓலை எனப்பட்டான்.

கலை இலக்கியம்

சோழர் காலத்தில் கட்டிடக் கலையும் சிற்பக்கலையும் செழித்து வளர்ந்தன. தன் நிழலைத் தனக்குள்ளே தருக்குடனே தாங்கி நிற்கும் தஞ்சைப் பெருங்கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம், தராசுரம் ஆகிய ஊர்களிலுள்ள கோவில்களும் அங்குள்ள சிற்பங்களும் சோழர்காலக் கட்டிடக் கலைக்குச் சான்றுகளாய் உள்ளன.

சோழர் கால இலக்கியங்களில் சைவ சமயச் சார்புடைய இலக்கியங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உருவாயின. உமாபதி சிவாச்சாரியார் என்பவர் எட்டு சைவ சித்தாந்த நூல்களை இயற்றியுள்ளார். சைவ சமயத்தின் 63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் திருத்தொண்டர் புராணம் சேக்கிழாரால் இயற்றப்பட்டது. சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைக் கூறும் திருவிளையாடற் புராணம் என்ற நூலைப் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் எழுதியுள்ளார்.

ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவால நடையில் ஈடு எனப்படும் விரிவுரை இக்காலத்தில் உருவாகியது.

சமண சமயத்தைச் சார்ந்த திருத்தக்கத்தேவர் எழுதிய சீவகசிந்தாமணி, கொங்குவேளிர் எழுதிய பெருங்கதை ஆகிய காவியங்களும் வளையாபதி, நீலகேசி என்ற சமணக் காப்பியங்களும் குண்டலகேசி என்ற பௌத்த காப்பியமும் தோன்றின. திவாகரம், பிங்கலந்தை என்ற நிகண்டுகளும், நன்னூல், யாப்பருங்கலக்காரிகை, புறப்பொருள் வெண்பா மாலை, வீரசோழியம், வெண்பாப் பாட்டியல் ஆகிய இலக்கண நூல்களும் உருவாயின.

செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி ஒட்டக்கூத்தரின் மூவருலா, கம்பரின் இராமாயணம், புகழேந்தியின் நளவெண்பா ஆகியன சோழர் காலத்தில் தோன்றிய பிற இலக்கியங்கள் ஆகும். இளம்பூரணர், சேணாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார் ஆகியோர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதினர். சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும், பரிபாடலுக்கும், திருக்குறளுக்கும் உரை எழுதிய பரிமேலழகரும் சோழர் காலத்தவரேயாவர்.

சோழர் காலத்தில் வடமொழிப் பயிற்சியளிக்கும் கல்வி நிறுவனங்கள் (கடிகா) பல நிறுவப்பட்டன. நூல்களைச் சேகரித்து வைக்கும் நூலகம் போன்ற அமைப்பு சோழர் காலத்தில் இருந்தது. இதை சரஸ்வதி பண்டாரம் என்றழைத்தனர்.

கிராமசபை

சோழர் ஆட்சியின் சிறப்பியல்பாக கிராம சுய ஆட்சி முறை நிலவியது. பிராமணர்களுக்கு உரிய நிலங்களுக்கு வரி வாங்கப்படவில்லை. இவை இறையிலி எனப்பட்டன. இறையிலி நிலங்களைக் கொண்ட பிராமணர் குடியிருப்புக்கள் கிராமங்கள் எனப்பட்டன. குடும்பு என்ற சிறு பிரிவுகளாக கிராமம் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடும்புக்கும் ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடும்புக்குரிய வேட்பாளர்களின் பெயர்களைப் பனை ஓலைத் துண்டில் தனித்தனியாக எழுதி அவ்வக் குடும்புக்குரிய குடத்தில் இடுவர். பின்னர் குடத்தை நன்றாக குலுக்கி அறியாச் சிறுவன் ஒருவனைக் கொண்டு ஓலைத்துண்டு ஒன்றை எடுக்கும்படி செய்வர். அவனால் எடுக்கப்படும் ஓலையில் காணப்படும் பெயருக்குரியவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். குடும்பில் உறுப்பினராவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டிருந்தன. சொந்த மனையில் வீடு கட்டியிருத்தல், குறைந்தது கால்வேலி நிலமுடையவராய் இருத்தல், 35 வயதிற்குக் குறையாதிருத்தல், 70 வயதிற்கு மேற்படாதிருத்தல், நான்கு வேதத்தில் ஒரு வேதத்தையோ, ஒரு பாஷியத்தையோ ஓதும் ஆற்றல் பெற்றிருத்தல் என உத்திரமேரூர் சாசனம் குறிப்பிடுகிறது. அடித்தள மக்கள் கிராம சபைகளில் நுழைய விடாமல் தடுப்பதில் இத்தகுதிகள் முக்கியப் பங்காற்றின. மேலும் ஒரு குழுவிலோ, வாரியத்திலோ உறுப்பினராக இருந்து பணியாற்றிய போது ஒழுங்காகக் கணக்கு காட்டத் தவறியவர்கள், அவருடைய உறவினர்கள், ஒழுக்கமற்றவர்கள், வேட்பாளராகத் தகுதியற்றவர்கள் என்றும் இச்சாசனம் தெரிவிக்கின்றது.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு வாரியங்கள் அமைக்கப்படும். ஏரி வாரியம், தோட்ட வாரியம், பஞ்சவார வாரியம், பொன் வாரியம், கலிங்கு வாரியம் கழனி வாரியம் ஆகியன முக்கிய வாரியங்களாகும். இவ்வாரியங்களின் உறுப்பினர்கள் வாரியப் பெருமக்கள் என்றழைக்கப்பட்டனர். ஒவ்வொரு வாரியங்களும் தமக்குரிய பணிகளைச் செய்து வந்தன.

பிராமணர் அல்லாதோர் வாழ்ந்த குடியிருப்புக்கள் ஊர்கள் எனப்பட்டன. இவற்றை ஊரவை நிறுவகித்தது. அவையின் நிர்வாகக்குழு, ஆளும் கணம் என்றழைக்கப்பட்டது. வணிகர்கள் மிகுதியாக வாழ்ந்த நகரங்களின் சபை நகரத்தோம் எனப்பட்டன.

சமூகம்

சோழர் காலச் சமுதாயத்தில் சாதி வேறுபாடுகள் ஆழமாக இருந்தன. பிராமணர்கள் ஏற்றம் பெற்றிருந்த சாதியினராக விளங்கினர். அகரங்கள், அக்கிரகாரங்கள், சதிர்வேதி மங்கலங்கள் என்ற பெயர்களில் பிராமணர்களுக்குத் தனிக்கிராமங்கள் உருவாக்கப்பட்டன. கோவில்கள், மடங்கள் ஆகியன இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. இலவச உணவும் உறையுளும் நல்கி வேதக்கல்வி புகட்டும் வேதபாட சாலைகளும் இவர்களுக்கென்றே மன்னர்களால் நிறுவப்பட்டன.

பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் நிலக்கிழார்களாக விளங்கிய வேளாளர்கள் இருந்தனர். கோவில் நிலங்களின் மீது பிராமணர்களுடன் இணைந்து இவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இவ்விரு சமூகத்தினரையும் தவிர பல்வேறு கைவினைத் தொழில் செய்து வந்தவர்களும், உழுகுடிகளான, பள்ளர், பறையர் ஆகியோரும் தனித்தனி சாதிகளாக அழைத்திருந்தனர். சோழர் காலச் சாதிகள் வலங்கையர், இடங்கையர் என்ற இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இவ்விரு பிரிவுகளின் உருவாக்கம் குறித்து வினோதமான புராணக் கதைகள் உருவாகியுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 98 குலங்கள் இடம் பெற்றிருந்தன. வலங்கையர் இடங்கையரிடையே சில நேரங்களில் பூசல்களும் மோதல்களும் நிகழ்ந்தன. பெரும்பாலும் இடங்கையினர் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்தனர். சில நேரங்களில் வலங்கையினர் இடங்கையினர் ஆகிய இரு வகுப்பினரும் வேறுபாடுகளைத் துறந்துவிட்டு பிராமணர்களையும், வேளாளர்களையும் எதிர்த்துப் போராடியுள்ளனர். பெரும்பாலும் இப்போராட்டம் வரி எதிர்ப்பை மையமாகக் கொண்டேயிருந்தது.

தீண்டாமை சோழர் காலத்தில் வேர்விட்டு வளர்ந்திருந்தது. பறையர்களுக்கென்று தனிக்குடியிருப்புகள் இருந்தன. தீண்டாச்சேரி என்று இக்குடியிருப்புகள் அழைக்கப்பட்டன. ஆயினும் இவர்களில் சிலர் சொத்துரிமை உடையவர்களாகவும் இருந்தனர்.

ஆடலிலும், பாடலிலும் வல்ல பெண்டிரை விலைக்கு வாங்கியும், வன்முறையில் கைப்பற்றிக் கொண்டும் கோவில் பணிகளில் ஈடுபடுத்தினர். கோவிலைப் பெருக்கி மெழுகுதல், மாலை தொடுத்தல் தேவாரம் ஓதுதல், நடனமாடுதல், நாடகங்களில் நடித்தல் ஆகியன இவர்களின் முக்கியப் பணிகளாக அமைந்தன. தலைக்கோலிகள், தளிச்சேரிப் பெண்டுகள், பதியிலார், தேவரடியார் என்று இவர்களுக்குப் பெயர்கள் வழங்கின.

அடிமைமுறை சோழர் காலத்தில் நிலை பெற்றிருந்தது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கினர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் எனப் பெயர் பெற்றது. வறுமையின் காரணமாகத் தம் குடும்ப உறுப்பினர்களை விற்பதும் தம்மைத்தாமே விற்றுக் கொள்வதும் நிகழ்ந்துள்ளன. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டது. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசூலச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன. நெற்குற்றுதல், வேளாண் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கிய பணிகளாகும். தங்களை மட்டுமின்றி தங்கள் பரம்பரையினரையும் அடிமைகளாக விற்றுக் கொண்டதை இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் பரம்பரை பரம்பரையாக, வழியடிமை, யானும் எம் வம்சத்தாரும் என்று கல்வெட்டுக்களில் காணப்படும் தொடர்கள் உணர்த்துகின்றன.

சமயம்

சோழர் காலத்தில் அரசு சமயமாக சைவம் விளங்கியது. சிவனுக்கு முக்கியத்துவம் இருந்தது. பல்லவர் காலத்தில் வளரத் தொடங்கிய சைவம் சோழர் காலத்தில் வளர்ச்சியின் உச்சத்தை எட்டியது. சைவ சமயத்தின் தத்துவமாக சைவ சித்தாந்தம் உருப்பெற்று செல்வாக்குற்றது. பதி (இறைவன்), பசு (உயிர்), பாசம் (இருள் + தளை) என்ற மூன்றும் சைவசித்தாந்தத்தின் அடிப்படைத் தத்துவமாகும். இதன்படி உலக உயிர்கள் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றையும் உள்ளடக்கிய பாசத்தை நீக்கி பதியாகிய இறைவனை அடைய வேண்டும். சைவசமய இலக்கியங்களாகப் பன்னிரு திருமுறைகள் அமைகின்றன. மறைந்து கிடந்த தேவாரப் பாடல்கள் ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்டு கோவில்களில் ஓதப்பட்டன. இதைக் கண்காணிக்க தேவார நாயகம் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். கோவில்களில் நாள்தோறும் விளக்கேற்றவும், தேவாரம் பாடவும், திருவிழாக்கள் நிகழ்த்தவும் மன்னர்களும் பொதுமக்களும் மானியம் வழங்கினர். சைவ வைணவ கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலமானியங்கள் தேவதானம் எனப் பெயர் பெற்றன.

தமிழ் வைணவர்களின் புனித நூலான நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற தொகுப்பு சோழர் காலத்தில்தான் உருப்பெற்றது.

பாண்டியர் காலம் (கி. பி. 13ம் நூற்றாண்டு)

சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருவான பாண்டியப் பேரரசு சோழப் பேரரசைப் போன்றே மண்டலம், நாடு, கூற்றம் ஆகிய ஆட்சிப் பிரிவுகளைக் கொண்டிருந்தது. பல்லவர் காலத்தைப் போன்றே சோழர் காலமும் வேளாண்மையை மையமாகக் கொண்ட பெருமளவிலான கிராமங்களை அடிப்படை அலகாகக் கொண்டிருந்தது. வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. நெசவு, எண்ணெய் எடுத்தல், வெல்லம் தயாரித்தல், உப்பு விளைவித்தல் கிய தொழில்கள் நிகழ்ந்தன. பாண்டியர் ஆட்சியில் சிறப்புமிக்க தொழிலாக முத்து குளித்தல் விளங்கியது. உரோம் நாட்டிற்கு இம்முத்துக்கள் ஏற்றுமதியாகி தங்கத்தைக் கொண்டு வந்தன. மார்கோபோலோ என்ற இத்தாலி நாட்டு சுற்றுப் பயணி மாரவர்மன் குலசேகரன் என்ற பாண்டிய மன்னன் 1200 கோடி பொன்னைச் சேமித்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொலைத் தண்டனை பெற்ற கைதிகள் முத்து குளித்தலில் ஈடுபடுத்தப்பட்டனர். வாணிபத்தின் பொருட்டு இங்கு வந்த அரேபியர்கள் இங்கே தங்கள் சமயத்தை பரப்பினர். பாண்டிய மன்னனின் அரசவையில் இஸ்லாமியர் சமயத்தைச் சார்ந்த அமைச்சர் ஒருவர் இடம் பெற்றிருந்தார். பாண்டியர்களின் கொற்கை துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பெருமளவில் நிகழ்ந்தது. மணிக்கிராமம், அஞ்சு வண்ணத்தார் என்ற வணிகச் சங்கங்களும் நானாதேசிகன் என்ற பெயரில் அயல்நாட்டு வாணிபம் மேற்கொண்ட குழுவும் இருந்தன. அரேபிய நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி பெருமளவில் நிகழ்ந்தது. இது குறித்து வசப் என்ற அரேபியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

"அந்தக் குதிரைகள் வந்து இறங்கியதும், அவற்றிற்குப் பச்சை வாற்கோதுமையைத் தருவதற்கு மாறாக, வறுத்த வாற்கோதுமையையும் வெண்ணெய் சேர்த்துச் சமைத்த தானியத்தையும் தீனியாகப் போட்டுக் காய்ச்சிய ஆவின் பாலைக் குடிப்பதற்குக் கொடுக்கிறார்கள். இது மிகவும் விசித்திரமான செயல். லாயத்தில் முளைகளை அடித்து, குதிரைகளை அவற்றோடு கயிற்றால் பிணைத்து, அங்கேயே அவற்றை 40 நாள் விட்டு விடுகிறார்கள். அதனால் குதிரைகள் கொழுத்துப் பருத்துப் போகின்றன. பின்னர், அவற்றிற்குப் பயிற்சியளிக்காமலும் அங்கவடி முதலிய குதிரைச் சாமான்களைப் பூட்டாமலும், அவற்றின் மீது ஏறியுட்கார்ந்து இந்திய வீரர்கள் அவற்றைப் பிசாசைப் போல் ஓட்டுகிறார்கள். அவற்றின் வேகம் புரக்கின் வேகத்திற்குச் சமமாயிருக்கிறது. மிகுந்த வலிமையும் வேகமும் சுறுசுறுப்பும் உடைய புதிய குதிரைகளும் வெகு விரைவில் வலிமையற்ற, வேகமற்ற, பயனற்ற, மதியற்ற குதிரைகளாய் மாறிவிடுகின்றன. அதாவது, அவை எதற்கும் உதவாத இழி நிலையை எய்தி விடுகின்றன. சாட்டையடி வாங்காமலே மிக வேகமாக ஓடக்கூடிய வலிமைமிக்க அந்தக் குதிரைகள் இந்நாட்டுத் தட்பவெப்ப நிலையைத் தாங்க மாட்டாமல் வலியிழந்து வாடிப் போகின்றன. எனவே, அவை சவாரி செய்வதற்குப் பயனில்லாமல் போகின்றன. அதனால் ஆண்டு தோறும் புதிய குதிரைகளை வாங்குவது இன்றியமையாததாகி விடுகின்றது. எனவே ஆண்டுதோறும் முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் மாபாருக்குக் குதிரைகளைக் கொண்டு வருகிறார்கள் (நீலகண்ட சாஸ்திரி, தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள் 276). குதிரைக்கு லாடம் கட்டுபவர்களும் இங்கே இல்லை. குதிரை வணிகர்கள் இலாடக்காரர்களை அழைத்துக் கொண்டு வருவதில்லை. லாடக்காரர் யாதேனும் வர முயன்றாலும் அவர்களை வணிகர்கள் தடுத்து விடுகிறார்கள். அப்படிச் செய்யாவிட்டால் குதிரை வாணிகம் குறைந்து போகுமென்று அவர்கள் அஞ்சினார்கள். அந்த வாணிகத்தில் அவர்களுக்கு ஆண்டுதோறும் பெரும் பொருள் கிடைத்தது. அந்த லாபத்தை இழப்பதற்கு அவர்கள் விரும்பவில்லை. குதிரைகளை அவர்கள் கப்பலில் ஏற்றிக் கொண்டு வந்தார்கள் என்று மார்கோபோலாவும் குறிப்பிட்டுள்ளார் (நீலகண்ட சாஸ்திரி, தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள் 273 274).

விஜயநகரப் பேரரசு (கி.பி. 14 - 16)

பாண்டியர் ஆட்சியின் இறுதிக் காலத்தில் அடுத்தடுத்து வடஇந்திய இஸ்லாமியர்களின் படையெடுப்புக்கு ஆளானது. கி.பி. 1311இல் மாலிகாபூரும், 1318இல் குஷ்ருகானும், 1323இல் முகமது பின் துக்ளக்கும் படையெடுத்தனர். துக்ளக் பரம்பரையினரின் ஆட்சி டெல்லியில் நிலவியபோது அதன் 23வது மாநிலமாக தமிழகம் (தென்னிந்தியா) ஆனது. 1378 வரை இந்நிலை நீடித்தது. கி.பி. 1378இல் விஜயநகரப் பேரரசை நிறுவிய இரு சகோதரர்களில் ஒருவராகிய புக்கன் என்பவனின் மகன் குமாரகம்பனன் என்பவன் மதுரையின் மீது படையெடுத்து விஜயநகரப் பேரரசின் ஆட்சியை நிறுவினான். இதன்பின் தமிழகம் விஜயநகரப் பேரரசின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டில் மறைந்து போன சோழப் பேரரசின் ஆட்சிமுறையே பெரும்பாலும் பாண்டியர் ஆட்சியில் தொடர்ந்தது. ஆனால் விஜயநகரப் பேரரசு புதிய ஆட்சியமைப்பையும், நிறுவனங்களையும் தோற்றுவித்தது. மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர் என நான்கு மண்டலங்கள் உருவாயின. இவற்றை நிறுவகிக்க மண்டலாபதி என்ற அதிகாரி நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நிலவிய கிராம ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டது. சாதி வேற்றுமையும், தீண்டாமையும் இறுக்கமாயின. அடிமைமுறை பரவலாகியது. சைவமும், வைணவமும் செல்வாக்குப் பெற்றன. அதே நேரத்தில் சைவர்களுக்கும், வைணவர்களுக்குமிடையே சமயப் பூசல்கள் உருவாயின.

நில அளவுகோலை மாற்றி நிலத்தை அளந்ததன் விளைவாக நிலத்தின் பரப்பு அதிகரித்து வரியளவு உயர்ந்தது. நிலக்குத்தகைத் தொகையை உயர்த்தினர். விஜயநகர ஆட்சிக் காலத்தில் வரிப்பளு அதிகரித்தது. பரம்பரை நிலக்கிழார்களான பிராமணர்களும், வெள்ளாளர்களும் விஜயநகரப் பேரரசின் அதிகாரிகளும் உழுகுடிகளைக் கொண்டு நிலங்களைப் பயிரிட்டனர். ஆனால் உழுகுடிகளுக்கும், கைவினைஆர்களுக்கும் உரிய பங்கைக் கொடுக்கத் தவறினர். இதன் காரணமாக மக்கள் வலங்கை. இடங்கை என்ற பிரிவுகளைக் கடந்து நின்று காணியாளர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் எதிராக கிளர்ந்து எழுந்தனர். தஞ்சை மாவட்டத்தில் கொருக்கை என்ற ஊரில் கிடைத்துள்ள கி.பி. 1429ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் நாம் மண்டலம் சேர இனம் ஒத்து இராதபடி ஆலே அல்லோ இப்படி நம்மை அநியாயம் செய்கிறார்கள் என்று இடம் பெற்றுள்ள செய்தி மக்கள் ஒன்றுபட்டுப் போராடியதைக் குறிப்பிடுகின்றது.

நாயக்கர் காலம்

கி.பி. 1529இல் தொடங்கி 1736 வரை மதுரை நாயக்கர் ஆட்சி நிலவியது. நாயக்கர் ஆட்சியில் பாளையப்பட்டுமுறை என்ற ஆட்சி முறை கி.பி. 1535இல் உருவானது. இதன்படி 72 பாளையங்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு பாளையமும் பாளையக்காரன் ஒருவனால் நிறுவகிக்கப்பட்டது. ஏற்கனவே குறுநல மன்னர்களாக இருந்த தமிழர்கள் மட்டுமின்றி கன்னட, தெலுங்கர் பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு பாளையங்காரரும் தன் ஆளுகைக்குட்பட்ட பாளையங்களில் வரிவசூல் செய்யவும் வழக்குகளை விசாரித்து நீதி வழங்கவும் உரிமையுடையவர்களாயிருந்தனர். நாயக்கர் மன்னர்கள் நிகழ்த்தும் படையெடுப்பின் போது தங்கள் சொந்தப் படையை பாளையக்காரர் அனுப்புவது கட்டாயமாக இருந்தது. பாளையத்திலிருந்து கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பங்கு நாயக்க மன்னருக்கும், மற்றொரு பங்கு பாளையக்காரரின் படைவீரர்களின் செலவுக்கும் எஞ்சிய ஒரு பகுதி பாளையக்காரரையும் சென்றடைந்தது.

நாட்டின் மைய ஆட்சி அதிகாரம் நாயக்க மன்னர்களிடம் இருந்தது. அரசனை அடுத்திருந்த உயர் அதிகாரி தளவாய் என்றழைக்கப்பட்டார். இவரை அடுத்திருந்தவர் பிரதானி, இவர் நீதி வழங்கும் பணியையும் மேற்கொண்டிருந்தார். இவரை அடுத்த பதவி ராயசம் என்பதாகும். இம்மூன்று பதவிகளும் முக்கியமான பதவிகளாக இருந்தன.

நிலவரியே அரசின் முக்கிய வருவாயாக இருந்தது. நிலங்கள் தரவாரியாகப் பிரிக்கப்பட்டு வரி விதிக்கப்பட்டது. வீடு, குடியிருப்பு மனை, தோட்டம், கால்நடைகள் ஆகியனவற்றிற்கு சொத்துவரி விதிக்கப்பட்டது. கருமார் (கொல்லர்), தச்சர், குயவர், நெசவாளர் போன்ற கைவினைஆர்களிடமிருந்து தொழில்வரி வாங்கப்பட்டது. பரத்தையரும் தொழில்வரி செலுத்தியுள்ளார்கள். படைவீரர் பராமரிப்பிற்கென்று அவ்வப்போது வரிவாங்கப்பட்டது. நன்செய் நிலவரி நெல்லாயம் என்ற பெயரில் நெல்லாகவே வாங்கப்பட்டது. புன்செய் நில வரிகளும் ஏனைய வரிகளும் பொன்னாக வாங்கப்பட்டது.

நாயக்க மன்னர்கள் வைணவர்கள், என்றாலும் பிற சமயங்களை மதித்தனர். சைவ, வைணவ வேறுபாடின்றி கோவில்களுக்குத் திருப்பணி செய்தனர். இவர்கள் ஆட்சியில்தான் கத்தோலிக்க கிறித்துவம் தமிழ்நாட்டில் கால் கொண்டது. தத்துவ போதகர் என்றழைக்கப்படும் ராபர்டிநொபிலி என்பவர் தம் சமயத்தை பரப்ப வேறுபாடான ஒரு முறையை மேற்கொண்டார்.

சோழர் காலத்தைப் போன்றே நாயக்கர் காலத்திலும் வடமொழிக் கல்வியே முக்கியத்துவம் பெற்றது. வெற்றி வேற்கை என்னும் நறுந்தொகை, நைடதம், என்ற இலக்கியங்கள் அதிவீரராம பாண்டியன் என்பவரால் எழுதப்பட்டன. வரதுங்கராம பாண்டியன் திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி திருக்கருவைக் கலித்துறை அந்தாதி என்ற நூல்களையும், மாரனலங்காரம் என்ற நூலை திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரும், சுப்பிரதீபக் கவிராயர் கூளப்பநாயக்கன் காதல், கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது என்றும் நூல்களையும் இயற்றியுள்ளனர். 1. அழகர் அந்தாதி, 2. திருவரங்கக் கலம்பகம், 3. திருவரங்கத்தந்தாதி, 4. திருவரங்கத்துமாலை, 5. திருவரங்கத்து ஊசல், 6. திருவேங்கடத்தந்தாதி, 7. திருவேங்கடமாலை, 8. நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி என்ற எட்டு நூல்களும் அஷ்டப் பிரபந்தம் எனத் தலைவர்களால் போற்றப்படுகின்றன. இவற்றை எழுதிய பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் திருமலைநாயக்கர் காலத்தவர். மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் எழுதிய குமரகுருபரர், சீறாப்புராணம் பாடிய உமருப் புலவர், குற்றாலக் குறவஞ்சி பாடிய திருகூடராசப்பக் கவிராயர் ஆகியோர் நாயக்கர் காலத்தில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க கவிஞர்களாவர்.

ஐரோப்பியர் காலம் (1533 -1947)

கி.பி. 1533இல் முத்துக்குழித்துறை கடற்கரைப் பகுதியில் உள்ள தூத்துக்குடி நகரில் வாணிபத்திற்காக வந்து தங்கியிருந்த அரேபிய மூர்களுக்கும் நெய்தல் நிலத் தொல்குடியினரான பரதவர்களுக்குமிடையே மோதல் நிகழ்ந்தது. இம்மோதலில் பரதவர்கள் மிகக் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்டார்கள். இதிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் வழிமுறையாக கொச்சி நகரிலிருந்த போர்ச்சுக்கீசியரின் உதவியைப் பரதவர்கள் நாடினர். பரதவர்களுக்குத் தங்கள் கடற்படை துணையுடன் உதவ முன் வந்த போர்ச்சுக்கீசியர்கள் தங்கள் உதவிக்குக் கைமாறாக கத்தோலிக்கர்களாக மதம் மாறும்படி அவர்களை வேண்டினர். அதற்கு உடன்பட்ட பரதவர்கள் மதம் மாறியதுடன் போர்ச்சுக்கீசிய மன்னனின் குடிகளாகவும் தங்களை மாற்றிக் கொண்டனர். இதன் விளைவாக வடக்கே வேதாளை தொடங்கி தெற்கே கன்னியாகுமரி வரையிலான கடற்கரைச் சிற்றூர்கள் போர்ச்சுக்கீசியரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன.

வெகு திரளான மதமாற்றம் சில புதிய வரவுகளை தமிழ்மொழிக்கு வழங்கியது. அண்டிரீக் என்ற போர்ச்சுக்கீசிய சேசுசபைத் துறவி பரதவர்களின் நிதி உதவி பெற்று கி.பி. 1567இல் தம்பிரான் வணக்கம் என்ற நூலையும், 1568இல் கிறிஸ்டியாவின் வணக்கம் என்ற நூலையும் முறையே அம்பலக்காட்டிலும் கொல்லத்திலும் அச்சிட்டு வெளியிட்டார். இந்திய மொழிகளிலேயே முதன்முதலாக அச்சு வடிவம் பெற்ற மொழி என்ற பெருமையை இந்நூல்களின் வாயிலாகத் தமிழ்மொழி பெற்றது. தூத்துக்குடி அருகில் உள்ள புன்னக்காயல் என்ற கடற்கரைச் சிற்×ரில் அடியார் வரலாறு என்ற நூலை 1586இல் இவர் அச்சிட்டு வெளியிட்டார். போர்ச்சுக்கீசிய மொழியில் தமிழ் இலக்கண நூல் ஒன்றையும் இவர் வெளியிட்டுள்ளார். தற்கால மருத்துவமனை ஒன்றையும் புன்னக்காயலில் இவர் நிறுவினார்.

கி.பி. 1658இல் டச்சுக்காரர்கள் போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து தூத்துக்குடி நகரைக் கைப்பற்றினர். தூத்துக்குடி நகரில் நெசவாளர்களைக் குடியமர்த்தி அவர்கள் நெய்த கச்சைத் துணிகளை இலங்கைக்கு ஏற்றுமதி செய்தனர். ப்ராட்டஸ்டண்ட் பிரிவைச் சார்ந்த டச்சுக்காரர்கள் தங்கள் சமயத்தை இங்கு பரப்ப முயற்சி செய்தனர். ஆனால் இம்முயற்சியில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. "ஐரோப்பாவில் நிகழ்ந்த யுத்தங்கள் இந்தியாவில் டச்சுக்காரர்களின் தலைவிதியை நிர்ணயம் செய்தன என்ற கூற்றிற்கு ஏற்ப இங்கிலாந்திடம் ஐரோப்பிய யுத்தம் ஒன்றில் தோற்றுப் போன டச்சுக்காரர்கள் ஒப்பந்தம் ஒன்றின் மூலம் தூத்துக்குடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களின் உரிமையை ஆங்கிலேயரிடம் தந்தனர்.

மைசூரை ஆண்டு வந்த நிஜாமின் கட்டுப்பாட்டின் கீழிருந்த ஆர்காடு நவாப் அதிலிருந்து விடுபெற்று சுயேச்சை மன்னனாக செயல்படத் தொடங்கினார். முதல் இரண்டு கருநாடகப் போர்களின் வாயிலாகத் தமிழ்நாட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியார் மைசூர் போர்களின் வாயிலாக தென்னிந்தியாவில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். மதுரை நாயக்கர் உருவாக்கிய பாளையக்காரர்கள் சுயேச்சை மன்னர்கள் போல் செயல்படத் தொடங்கினர். இத்தகைய சூழலில் பாளையக்காரரிடம் வரி வாங்கும் உரிமையை கி.பி. 1781இல் நவாப்பிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனி வாங்கியது. இதன் அடிப்படையில் அவர்கள் வரி வாங்கும்போது, பூலித்தேவர், கட்டபொம்மன், ஊமைத்துரை, மருதுபாண்டியர், தீர்த்தகிரி (தீரன் சின்னமலை) ஆகியோர் வரிதர மறுத்துப் போராடி ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர். அந்நிய ஆட்சிக்கு எதிராகத் தெளிவான கொள்கைகளை முன்வைத்துப் போராடவிட்டாலும் இவர்களுடைய உறுதியான வீர உணர்வும், வெள்ளையர் எதிர்ப்புணர்வும் பாராட்டுதலுக்குரியன. 1806இல் வேலூரில் சிறை வைக்கப்பட்டிருந்த திப்புசுல்தானின் மகன்களின் ஆதரவுடன் நிகழ்ந்த வேலூர்க் கலகம் (வேலூர் எழுச்சி) வெள்ளையர் எதிர்ப்புப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்நிகழ்வுகளுக்குப் பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிர்ப்பில்லாமல் போய்விட்டது.

சென்னை மாகாணம் என்ற பெயரில் இன்றையக் கன்னியாகுமரி மாவட்டம், நெல்லை மாவட்டத்திலுள்ள செங்கோட்டைத் தாலுகா, புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் நீங்கலாக ஏனைய பகுதிகள் முழுவதிலும் கிழக்கிந்திய கம்பெனியின் நேரடி ஆட்சி நிலவியது. கன்னியாகுமரி மாவட்டம் செங்கோட்டைத் தாலுகா ஆகியன திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிப் பகுதியாகவும் புதுக்கோட்டை மன்னரின் ஆளுகையின் கீழ் புதுக்கோட்டைப் பகுதியும் விளங்கின. மேலும் இன்றையக் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் பகுதிகள் சிலவும் சென்னை மாகாணத்துடன் இணைந்திருந்தன.

சென்னை மாகாணத்தின் தலைநகராகச் சென்னை விளங்கியது. ஆட்சித் தலைவராகக் கவர்னர் இருந்தார். சென்னை மாகாணம் 25 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு மாவட்டத்தின் தலைவராகக் கலெக்டர் நியமிக்கப்பட்டார். ஒவ்வொரு மாவட்டமும் பல தாலுகாக்களையும் தாலுகாக்கள் பிர்காக்கள் என்ற பிரிவுகளையும் கொண்டிருந்தன. தாலுகாவின் தலைவராக தாசில்தார் நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில் மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட குற்ற விசாரணை பொறுப்பு பின்னர் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பண்டைத் தமிழ்நாட்டைப் போன்று கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியிலும் அரசின் முக்கிய வருவாயாக நிலவரியே இருந்தது. தனி நிலவுடைமை அனுமதிக்கப்பட்டு அவ்வுடையாளர்களிடமிருந்து நேரடியாக வரி வாங்கப்பட்டது. இதை இரயத்துவாரி முறை என்றழைத்தனர். பாளையக்காரர்கள் என்ற பெயர் மாறி ஜமீன்தார்கள் என்ற பெயர் உருவானது. ஜமீன்தார்களும், ஜாகீர்தர்கள், மிட்டாதாரர்களும் குறிப்பிட்ட நிலப்பகுதிகளுக்கு உரிமை பெற்று, பயிரிடுவோரிடமிருந்து வரி வாங்கினர். ஒரு பகுதி வரியை எடுத்துக் கொண்டு எஞ்சியதைக் கிழக்கிந்திய கம்பெனியாரிடம் வழங்கினர்.

ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டல் தமிழகத்தை வெகுவாகப் பாதித்தது. உணவு தானியங்கள் உற்பத்திக்கு மாற்றாகப் பணப் பயிர்களைப் பரந்த அளவில் பயிரிடச் செய்தனர். குறிப்பாக இங்கிலாந்தின் நெசவாலைகளுக்கு அடிப்படைத் தேவையான பருத்தியையும், நூல்களுக்குச் சாயமேற்ற உதவும் அவுரியையும் அதிக அளவில் பயிரிடச் செய்தனர். அதே நேரத்தில் அவற்றிற்கு அவர்களே விலை நிர்ணயம் செய்தனர். தமிழ்நாட்டு உழவன், தான் உற்பத்தி செய்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையை இழந்தான். இதை,

ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா
காசுக்கு ரெண்டா விக்கச் சொல்லி
காயிதம் போட்டானாம் வெள்ளக்காரேன்


என்ற நாட்டார் பாடல் எடுத்துரைக்கிறது.

1857 சிப்பாய் எழுச்சிக்குப் பின்னர் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்குப் பதிலாக இங்கிலாந்து பாராளுமன்றத்தின் நேரடி ஆளுகையின் கீழ் தமிழ்நாடு வந்தது. 1859 ல் இந்திய சிவில் சட்டமும், 1860 ல் இந்தியக் குற்றச் சட்டமும் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தன. 1861 ல் உயர்நீதி மன்றம் சென்னையில் நிறுவப்பட்டது.

பாரம்பரிய கிராம சபைகளுக்கு மாற்றாக தாலுகா போர்டு ஜில்லா (மாவட்டம்) போர்டு, பஞ்சாயத்து ஆகிய நிறுவனங்கள் உருப்பெற்றன. பாரம்பரிய பள்ளிகளுக்கு மாற்றாக நவீனக் கல்விக் கூடங்கள் அரசினராலும், கிறித்தவ மிஷனரிகளாலும், தனிப்பட்டவர்களாலும், சாதியமைப்புகளாலும் நிறுவப் பெற்றன. இக்கல்வி நிறுவனங்களுக்கு அரசு மானியமும் கிட்டியது. சாதிய எல்லைகளைத் தாண்டி அனைவரும் கல்வி கற்கும் வாய்ப்பு இப்போதுதான் முதன் முதலாக உருப்பெற்றது. பெண் கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. மரபுகளை மீறிப் பெண்கள் கல்வி பெறும் நிலை உருவாகத் தொடங்கியது. மாநிலக் கல்லூரி ஒன்றும், 1834இல் பொறியியல் கல்லூரி ஒன்றும், 1835இல் மருத்துவக் கல்லூரி ஒன்றும் சென்னையில் தொடங்கப்பட்டது. 1857 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகம் நிறுவப் பெற்றது. இந்நவீனக் கல்வியானது படித்த மக்கள் கூட்டத்தை உருவாக்கியது. இதன் விளைவாகப் பத்திரிகைகள் சில உருப்பெற்றன. மதராஸ் கெஜட், கூரியர் என்ற பத்திரிகைகள் வெளியிடப்பட்டன. 1878 செப்டம்பரில் இந்து என்ற ஆங்கில நாளேடும் 1878 டிசம்பரில் மதராஸ் மெயில் என்ற ஆங்கில நாளேடும் வெளி வந்தன. 1880 ல் சுதேசமித்திரன் என்ற தமிழ் நாளேடு வெளியானது. செய்யுள் வடிவங்களின் வாயிலாகவே பொதுமக்களிடம் கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்து வந்த முறை மாறி உரைநடை செல்வாக்குப் பெற்று வளரத் தொடங்கியது. அச்சு இயந்திரத்தின் வருகையின் காரணமாகப் பழைய தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் அச்சு வடிவம் பெறத் தொடங்கின. சிறுகதை, நாவல் என்ற புதிய இலக்கிய வடிவங்கள் தமிழில் உருவாயின.

தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் பலரும் வேளாண்மையின் அடிப்படை தாரமான நீர்வளத்தைப் பெருக்குவதிலும், பேணுவதிலும் ஆர்வம் காட்டினர். ஆனால் ஆங்கிலேயர்கள் முழுமையாக ஆர்வம் காட்டவில்லை. மேலும் உணவு தானியங்களை வரைமுறையின்றி ஏற்றுமதி செய்தனர். இதன் விளைவாக 1876 1878 ஆண்டுகளில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. தாது வருஷப் பஞ்சம் என்று மக்கள் இதை அழைத்தனர். பஞ்சமோ பஞ்சம் என்று பரிதவித்து மக்கள் பல்லாயிரக் கணக்கில் மாண்டனர்.

காட்டுப் பக்கம் நூறு பிணம் ஓ சாமியே
வீட்டுப் பக்கம் நூறு பிணம் ஓ சாமியே
ரோட்டுப் பக்கம் நூறு பிணம் ஓ சாமியே
மேட்டுப் பக்கம் நூறு பிணம் ஓ சாமியே


என்று நாட்டார் பாடல் ஒன்று எடுத்துரைக்கிறது.

இப்பஞ்சத்தையும் ஆங்கிலேயர்கள் தங்கள் சுரண்டலுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். பஞ்சத்தில் வாடிய மக்களுக்கு குறைந்த அளவு கூலி கொடடுத்து இரயில் பாதைகளும், கால்வாய்களும் அமைத்தனர். சென்னையில் ஓடும் பக்கிங்காம் கால்வாயின் ஒரு பகுதி இந்த முறையில்தான் வெட்டப்பட்டது. பஞ்சத்தின் துணை விளைவாக ஆங்கிலேயர்களின் இதர குடியேற்ற நாடுகளான இலங்கை, பர்மா (மியாமர்), மலேசியா, பிஜி தீவு, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் ஒப்பந்தக் கூலிகளாகச் சென்று தேயிலை, காப்பி, இரப்பர் தோட்டங்களை உருவாக்கினர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த வளமான பொருள் கிட்டவில்லை. கூலித் தமிழன் என்ற பெயர்தான் கிட்டியது.

19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் தமிழ்நாட்டில் நிலை பெற்றது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வ.உ.சி. பாரதி, சிவா ஆ கியோரின் தலைமையில் சுதேசிய இயக்கம் வீறு கொண்டு எழுந்தது. 1920இல் நிகழ்ந்த ஒத்துழையாமை இயக்கமும், 1930இல் உருவான சிவில் சட்ட மறுப்பு இயக்கமும், 1942இல் நிகழ்ந்த வெள்ளையனே வெளியேறு போராட்டமும், தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவில் நிகழ்ந்தன. வள்ளலார் உருவாக்கிய சமரச சுத்த சன்மார்க்க இயக்கம், வைகுண்ட சாமியின் அய்யாவழி இயக்கம், தென்னிந்திய நலவுரிமைச் சங்கமாக உருவாகி நீதிக் கட்சியாக மாறி சுயமரியாதை இயக்கமாக வளர்ந்த திராவிட இயக்கம், பொதுவுடைமைக் கட்சியினர் உருவாக்கி வளர்த்த உழவர், தொழிலாளர் இயக்கங்கள் ஆகியன தமிழ்நாட்டின் இயக்கங்கள் என்ற தலைப்பில் தனியாக ஆராய்வதற்குரியன.

தமிழர் வரலாறு

26.07.1004 திங்கள் 1. வரலாறு குறித்த வரையறைகள் - வரலாற்று

அணுகுமுறைகள் - தமிழர் வரலாறு - தமிழர் வரலாற்றுக்கான தரவுகள்

2. இனக்குழு வாழ்க்கை

27.07.2004 செவ்வாய் 3. மேய்ச்சல் நில வாழ்க்கை

4. அடிமை முறை

28.07.2004 புதன் 5. நிலவுடைமையின் தோற்றமும் வளர்ச்சியும்

29.07.2004 வியாழன் 6. காலனியத்தின் வருகை - அதன் விளைவுகள்

7. விடுதலை இயக்கமும் தேசிய இயக்கமும்

30.07.2004 வெள்ளி 8. முதலாளித்துவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

31.07.2004 சனி 9. சமூக மற்றும் எதிர்ப்பு இயக்கங்கள் (பார்ப்பனிய

எதிர்ப்பு, அதன் பல்வேறு வடிவங்கள் தலித் எழுச்சி)

கிருஷ்ணர்


கிருஷ்ணர் இந்து சமய கடவுளாவார். இவர் விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக வைணவர்களால் கருதப்படுகிறார். மகாபாரத்திலும் பாகவத புராணத்திலும் இவரைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்து சமய பக்தி நெறியில் இவருடைய பக்தர்களே பெரும்பாலானவர்கள். இவரை தமிழர்கள் கண்ணன் என்ற பெயரிலும், வட இந்தியர் கண்ணையா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இது தவிர, கேசவன், கோவிந்தன், கோபாலன், போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். வருடந்தோறும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நந்நாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப் படுகிறது.

பொருளடக்கம்

1 கிருஷ்ணரின் கதை
1.1 இளமை
1.2 வாலிபம்
1.3 கீதை
1.4 முடிவு
2 சமீபத்திய ஆராய்ச்சி

கிருஷ்ணரின் கதை

இளமை

வசுதேவர், தேவகி தம்பதியினருக்கு எட்டாவது குழந்தையாக மதுராவில் கிருஷ்ணர் பிறந்தார். கொடுமைக்கார அரசனான இவரது மாமன் கம்சனிடமிருந்து காப்பதற்காக இவர் பிறந்த நாளன்றே இவரை வசுதேவர் யமுனைக்கு அப்பால் இருந்த பிருந்தாவனத்தில் யாதவ குலத்தினரான நந்தகோபர், யசோதையிடம் ஒப்படைத்தார். குழல் ஊதி, மாடு மேய்த்து, நண்பர்களுடன் விளையாடி, வெண்ணெய் திருடி குறும்புத்தனம் செய்து காலத்தைக் கழித்த கிருஷ்ணன் பிருந்தாவனத்தின் செல்லப் பிள்ளையானார். மேலும், இவரை தாக்க கம்சனால் ஏவப்பட்டு வந்த கொடிய அசுரர்களையும் வதம் செய்தார்.

வாலிபம்

இள வயதில் பிருந்தாவனத்தில் இருந்த பெண்களின் மனதில் இடம் பிடித்தார். இவர்களுள் ஒருவரான ராதையுடன் தெய்வீகக் காதல் புரிந்தார்.

வாலிப வயதை அடைந்தவுடன் மதுரா சென்று கம்சனை வென்று தன் தாத்தாவான உக்கிரசேனரிடம் ராஜ்யத்தை ஒப்படைத்தார். தனது அத்தை மகன்களான பாண்டவர்களுடன், குறிப்பாக அர்ஜூனனுடன் நட்பு கொண்டார். பின்னர் துவாரகை எனும் ஊருக்கு மதுரா மக்களுடன் குடிபெயர்ந்தார்.

கீதை

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த குருட்சேத்திரப் போரில் தனது சேனையை கௌரவரர்களிடம் கொடுத்துவிட்டு தான் அர்ஜூனனின் தேரோட்டியாக பணிபுரிந்தார். இந்தப் போர் தொடங்கும் முன் இவர் அர்ஜூனனிடம் மேற்கொண்ட உரையாடலே பகவத் கீதை ஆனது.

முடிவு

பின்னர் துவாரகையில் தன் மனைவியான ருக்மணியுடன் வாழ்ந்து யாதவர்களின் அரசராக விளங்கினார். ஒரு நாள் காட்டில் ஒரு வேடனின் அம்பு தாக்கி காலமானார். யாதவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு தங்களை அழித்துக்கொண்டனர். துவாரகை நகரமும் மூழ்கியது.

சமீபத்திய ஆராய்ச்சி

குஜராத்திலுள்ள துவாரகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆராய்ச்சியில் மூழ்கிய நகரம் ஒன்று கண்டெடுக்கப் பட்டுள்ளது. அது மகாபாரத்திலும் பாகவத்திலும் கூறப்பட்டுள்ள துவாரகை நகரை ஒத்துள்ளது, மேலும் அங்கே கண்டெடுக்கப் பட்ட சங்குகள், நாணயங்கள் போன்றவை மகாபாரத்தில் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒத்துள்ளன. இதனால் உண்மையிலேயே கிருஷ்ணன் என்ற மன்னன் வாழ்ந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

சுப்பிரமணிய பாரதி


சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.

தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.
படிமம்:Barathiyar.jpg
சுப்பிரமணிய பாரதியார் 1882-1921
வேறு பெயர்(கள்): பாரதியார்
பிறப்பு: டிசம்பர் 11 1882
பிறந்த இடம்: எட்டயபுரம், மதராஸ், இந்தியா
இறப்பு: செப்டம்பர் 11 1921 (அகவை 38)
இறந்த இடம்: மதராஸ், இந்தியா


பொருளடக்கம்
1 வாழ்க்கைக் குறிப்பு
2 இலக்கியப் பணி
2.1 பத்திரிகைப் பணியும் விடுதலைப் போராட்டமும்
2.2 தேசிய கவி
2.3 புதுக்கவிதைப் புலவன்
2.4 பெண்ணுரிமைப் போராளி
2.5 பாஞ்சாலி சபதம்


வாழ்க்கைக் குறிப்பு


1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்படும் நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொள்கின்றார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் செல்கின்றார். 1898 முதல் 1902 வரை காசியில் தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னனால் அழைத்து வரப்பட்டு காசி அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். இவ்வாறு ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்த பாரதி 1904 ஆம் ஆண்டு மதுரையில் அவர் எழுதும் பாடல் 'விவேகபானு' இதழில் வெளியாகின்றது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?


இலக்கியப் பணி


கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி.

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி

தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என கவிபுணைந்த கவிஞாயிறு. சம்ஸ்க்ருதம், வங்காளம், ஹிந்தி, ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளை தமிழ்மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்ட மாமேதை. தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் தலைசிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர். தமிழின் தன்னிகரற்ற கவியேறு.

குயில் பாட்டு
கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
பாஞ்சாலி சபதம்
ஆகியன அவர் படைப்புகளில் சில.

பத்திரிகைப் பணியும் விடுதலைப் போராட்டமும்

பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியே மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906/செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910),என்ற இத்ழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

தேசிய கவி


விடுதலை போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளை படைத்து மக்களை ஒருங்கினைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.

தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.

ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.

புதுக்கவிதைப் புலவன்

பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவனுக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புணைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையை தமிழுக்குத் தந்தவன்.

பெண்ணுரிமைப் போராளி

தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினான். போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றான். பெண்களின் கல்வியறிவுகாகவும் சட்டங்களை செய்திடவும் கனவுகண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டான்.

பாஞ்சாலி சபதம்

இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும், மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.

பகவத் கீதை

பகவத் கீதை என்பது இந்து சமயத்தினரின் முக்கிய நூல்களுள் ஒன்றாகும். மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அர்ஜூனன் அங்கே தன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தான். இதைக் கண்ட அவன் தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்திற்காக போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்றார். மேலும் அப்போது அவனுடன் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் உரையாடினார். இந்த உரையாடலே பகவத் கீதை ஆனது.

பொருளடக்கம்

1 அர்ச்சுனனின் மதிக்கலக்கம்
2 கண்ணனின் ஐந்து வாதங்கள்
3 வேதாந்த வாதம்
4 சுயதரும வாதம்
5 கருமயோகப்பார்வை
6 பக்தியோகம்
7 பிரகிருதி தான் செய்கிறது
8 சரணாகதி என்ற முத்தாய்ப்பு
9 மானிட சமூகத்திற்கு கீதையின் படிப்பினை
10 கீதைக்கு உரைகள் பல
11 இன்னும் மற்ற கீதைகள்

அர்ச்சுனனின் மதிக்கலக்கம்

18 அட்சௌகிணி சேனைகளும் போருக்கு ஆயத்த நிலையில் நிற்கும்போது பேடிபோல் பின்வாங்குகிறான் அர்ச்சுனன். எந்தப் போருக்காக பல ஆண்டுகளாக வானுலகம் வரை சென்று ஆயத்தம் செய்திருந்தானோ, எந்தப் போரை எதிர்பார்த்து தன் கோபத்தையும் துக்கத்தையும் கட்டுப்படுத்தி வைத்திருந்தானோ, அந்தப் போர் இதோ சங்கு ஊதவேண்டிய தருவாயில் போர் தொடங்கும் நிலையில் இருந்தபோது, கடைசித் தருணத்தில் அம்பையும் வில்லையும் கீழே எறிந்துவிட்டு ‘இந்தப்போர் எனக்கு வேண்டாம், மலர்களால் அர்ச்சிக்க வேண்டிய என் குருமார்களையும், மூத்தோர்களையும் அம்புகளால் அடிக்க மாட்டேன்’ என்று வாதம் பேசுகிறான் அர்ச்சுனன். அவனுடன் நீண்ட நேரம் வேதாந்தம் பேசி, பக்தியின் நெளிவு சுளுவுகளை அலசி, சுயதருமம் என்ற கடமைக்குப் பொருள் கூறி, அவனுடைய அறியாமையைப் போக்குகிறார் கண்ணன். முடிவில், ‘கண்ணா, உன் சொற்படி செய்கிறேன்’ என்று அர்ச்சுனன் போருக்கு ஒப்புக்கொள்கிறான், என்பதுடன் 18வது அத்தியாயத்தில் கீதை முடிகின்றது.


கண்ணனின் ஐந்து வாதங்கள்

அப்படி கண்ணன் என்ன சொல்லி அவனுக்குப் புரிய வைத்தார் என்பதுதான் கீதை. அர்ச்சுனனின் ஐயமென்ற சிடுக்கை அவிழ்த்து விடுவதற்காக் கண்ணன் எடுத்தாளும் வாதங்கள் ஐந்து. ஒவ்வொரு வாதமும் ஒரு குறிப்பிட்ட கோணத்திலிருந்து பார்க்கும் பார்வையோ அல்லது ஒரு குறிப்பிட்ட மனப்போக்கினால் ஏற்றுக்கொள்ளும் போர்வையையோ அடித்தளமாகக் கொண்டது. அவ்வைந்தாவன:

வேதாந்தப்பார்வை
சுயதருமப் பார்வை
கருமயோகப் பார்வை
எல்லாம் அவன் செயல் என்ற பக்திப்போர்வை
அவனும் செயலாளியல்ல, பிரகிருதி தான் செய்கிறது என்ற தத்துவப்போர்வை.

வேதாந்த வாதம்

“வருந்தப்பட வேண்டாததற்கு வருத்தப்படுவது அறிவாளிகளுடைய செயலல்ல. மூன்று காலத்திலும் எந்தப் பொருள் இல்லையோ அதற்கு ஒரு காலத்திலும் இருப்பு என்பதில்லை. இருப்பது போல் தோன்றினாலும் அது நிகழ்காலத் தோற்றம் மட்டும்தான். மூன்று காலத்திலும் எந்தப் பொருள் உள்ளதோ அதற்கு ஒரு காலத்திலும் இல்லாமை என்பதில்லை. புலன்களுக்கு அகப்படாததை இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆன்மா என்ற ஒன்றுதான் அழியாத நிரந்தரமான உட்பொருள். அதை யாராலும் அழிக்க முடியாது. அழிவதாக நமக்கு தெரிவதெல்லாம் உடம்பு தான். அர்ச்சுனா, எதிரிகளின் மீதுள்ள பாசத்தை விட்டுப் போர் புரி. அவர்கள் உடம்பில் குடிகொண்டிருக்கும் ஆன்மா யாரையும் கொல்லாது, அதை யாராலும் கொல்லவும் முடியாது. அதனால் நீ யாருக்காகவும் வருத்தப்பட வேண்டம்” இந்த வாதத்தின் அடிப்படையில் தான் முழு கீதையும் செயல்படுகிறது.

சுயதரும வாதம்

“அர்ச்சுனா, உன்னுடய சுயதருமம் க்ஷத்திரியனுக்குகந்த தருமப்போர் தான். இப்போருக்காக நீ பல ஆண்டுகள் தவமிருந்திருக்கிறாய். போரிலிருந்து பின்வாங்குவது உனக்கு ஒவ்வாத ஒன்று.” ‘சுயதருமமும் உன் சுபாவமும் விதிக்கும் க்ஷ்த்திரிய தருமத்தில் குறை இருந்தாலும் அதைக் கைவிடாதே. எந்தச் செய்கையிலும் நெருப்புக்குப் புகைபோல் ஏதாவதொரு குறை இருக்கத்தான் செய்கிறது’.(18-48)

(அடைப்புகளிலுள்ள குறியெண்கள் கீதையில் அத்தியாய எண்ணையும் சுலோக எண்ணையும் குறிக்கின்றன).

‘பிறிதொருவனுடைய கடமையை ஏற்று அதை நன்றாகச் செய்தாலும் அதைவிடச் சிறந்தது தன்னுடைய கடமையில் ஈடுபட்டிருப்பதே. அது முறையாக ஆற்றப்படாவிடினும் அதுவே சிறந்தது’ (3-35). ‘சுபாவத்தினால் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதில் பாவம் சம்பவிப்பதில்லை’ (18-47). இந்த சுயதருமப் பார்வை எப்படி மற்ற வாதங்களுடன் ஒழுங்காகவும் தர்க்க ரீதியாகவும் பிணைக்கப் படுகின்றது என்பது கீதையின் சிறந்த சாதனைகளில் ஒன்று.

கருமயோகப்பார்வை

இது கருமயோகம் என்று பெயர் கொண்ட புரட்சி மிகுந்த உபதேசம். எளிதில் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடியது. ‘ஒவ்வொரு மனிதனும் செய்யவேண்டிய கடமைகள் பல. அவைகளைச் செய்வதில் விருப்போ அல்லது வெறுப்போ ஒரு பிரச்சினை ஆகக்கூடாது. கடமையைக் கடமைக்காகவே செய்ய வேண்டும். கடமையைச் செய்வதற்குத் தான் உனக்கு அதிகாரம். அவை என்ன பயன் தருகிறதோ, தருமோ என்ற பிரச்சினை உன்னை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது. பயனுக்காகவோ அல்லது பயனை விரும்பியோ, வெறுத்தோ செயலில் ஈடுபடுவது உன்னை கட்டுப்படுத்தும். இந்தப்போர் உன்னுடைய கடமைகளில் ஒன்று. இதை ஆசையோ, நிராசையோ, கோபமோ தாபமோ இல்லாமல், ஆனால் அலட்சியமும் இல்லாமல், நன்றாகவே செய்யவேண்டும்’. ‘உனது செயல்களை யெல்லாம் எனக்கு அர்ப்பணித்து விட்டு என்னில் நிலைத்த மனதுடன், பயனில் பற்றற்று, அகங்காரத்தை விட்டு, மனக் கொதிப்பில்லாமல் போரிடு’ (3 – 30). கீதை 2வது அத்தியாயம் 39 வது சுலோகத்திலிருந்து 5வது அத்தியாயம் முடியும் வரை இதை கருமயோகம் என்ற ஒரு உயரிய யோக நூலாகவே விவரிக்கின்றான் கண்ணன்.

பக்தியோகம்

இதைப்பேசும்போது கண்ணன் தன்னை ஆண்டவனாகவே வைத்துப்பேசுகிறான். ‘எல்லாம் வல்ல இறைவன் நான். என்னை நம்பு. நீயாகச்செய்வது ஒன்றுமே இல்லை. என்னையன்றி ஓரணுவும் அசையாது.’ 11 வது அத்தியாயத்தில் தன் விசுவ ரூபத்தைக் காட்டிவிட்டு கண்ணன் சொல்கிறான்: ‘இவர்களெல்லாம் என்னால் ஏற்கனவே கொல்லப்பட்டவர்களே. நீ என் கருவி மட்டும் தான்.’ (11–33). ‘உன் செயல்களை யெல்லாம் எனக்காகச் செய். இவ்வுலகிலும் சரி, அவ்வுலகிலும் சரி. நான் உன்னுடன் இருப்பேன்.’. இப்படிப் போகிறது இந்த வாதம். இது எல்லாம் ஈசன் செயல் என்ற பக்திப் போர்வையை ஆதாரமாகக் கொண்டு எடுத்தாளப்பட்ட வாதம்.

பிரகிருதி தான் செய்கிறது

ஈசனும் செயலாளியல்ல. பிரகிருதி தான் செய்கிறது. ‘பிரகிருதி’ என்பது மனிதனின் கூடவே பிறந்த சுபாவம். ‘அகங்காரத்தினால் நீ செய்வதாக நினைத்துக்கொண்டு நான் சொல்வதைக் கேளாமல் செயற்படுவாயானால், அழிந்து போவாய்’ (18–58). ‘அகங்காரத்தின் மயக்கத்தினால் நீ போரிட மாட்டேன் என்று நினைப்பது வெற்றுத் தீர்மானம். அது நடக்காது. உன் பிரகிருதி உன்னை அப்படிச் செய்ய விடாது’ (18 – 59). ‘எந்தக் காரியத்தைச் செய்ய மாட்டேன் என்று நீ பின்வாங்குகிறயோ அதையே செய்யும்படி உன் பிரகிருதி (சுபாவம்) உன்னைக் கட்டாயப்படுத்தும்.’ (18-60). இதுதான் பிரகிருதியை ஆதாரமாகக்கொண்டு தத்துவ ரீதியில் எடுத்தாளப்பட்ட ஐந்தாவது வாதம்.

சரணாகதி என்ற முத்தாய்ப்பு

கண்ணன் கடைசியாக ‘உன் சுமையையெல்லாம் என்மேல் இறக்கி வை. தருமம், அதருமம் இரண்டுக்கும் பொறுப்பாளி நீயல்ல என்றறிந்து, என்னையே ஒரே புகலிடமாகக்கொண்டு, உன் கடமையைச்செய்.’ (18-66) என்று முத்தாய்ப்பு வைக்கிறார். இவ்வைந்து வாதங்களின் பலத்தால் தான் அர்ச்சுனன் போரிடத் தொடங்குகிறான்.

மானிட சமூகத்திற்கு கீதையின் படிப்பினை

போர் புரியமாட்டேன் என்ற அர்ச்சுனனை எப்படித் திருத்தினார் என்பதற்காக எடுத்தாளப்பட்ட ஐந்து வாதங்களைப் பிரித்துவிட்ட பின்பும் மானிடரனைவருக்கும் கண்ணனால் கூறப்பட்ட போதனைகளையும் ஐந்தாகச் சொல்லலாம். இவை ஆன்மிகத்தை நாடும் மக்களுக்கு வாழ்க்கைச் செயல் முறைகளாகவும் எக்காலத்திலும் நன்மை பயக்கும் வழிகாட்டிகளாகவும் கலங்கரை விளக்குகளாகவும் விளங்குகின்றன. இவ்வைந்தும் சேர்ந்து இந்து சமயத்தின் சாராம்சமாகவும் அமைகின்றன. அவையாவன:

பற்றுகளை அறு. அதற்காக புலனடக்கம் என்ற யோகசாதனையைச் செய்துகொண்டே இரு.
பலனில் பற்றற்று சுயதருமத்தை ஒழுகு.
ஈசனை மறக்காதே. அந்த இரண்டற்ற பரம்பொருளிடம் சுயநலமற்ற பக்தியைச் செலுத்து.
அம்மெய்ப் பொருளையே புகலிடமாகக் கொள்.
யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்கு அல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல். இதுதான் வேதங்களும் உபநிடதங்களும் இதிகாச புராணங்களும் எண்ணற்ற பெரியோர்களும் மனிதனுக்குப் புகட்டும் முடிந்த முடிவான படிப்பினை.

கீதைக்கு உரைகள் பல

ஆதி சங்கரர், இராமானுஜர், மத்வர் ஆகிய மூன்று மதாச்சாரியர்களும், மற்றும் நிம்பர்க்கர், வல்லபர், ஞானேசுவரர் ஆகியவர்களும் எழுதிய பண்டைய உரைகளே மற்ற பல உரைகளுக்கு வழிகாட்டிகளாக அமைந்தன. இருபதாவது நூற்றாண்டில் சுவாமி சின்மயானந்தா, பக்திவேதாந்த ஸ்வாமி, எஸ். ராதாகிருஷ்ணன், சுவாமி சிவானந்தர், சுவாமி அரவிந்தர், மகாத்மா காந்தி, ஆச்சார்யா வினோபாவே, அன்னி பெசண்ட் அம்மையார், சுவாமி சித்பவானந்தர் யாவரும் இன்னும் பலரும் சிறந்த உரை இயற்றியிருக்கின்றனர். அநேகமாக உலகத்திலுள்ள எல்லா மொழிகளிலும் கீதை மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.

இன்னும் மற்ற கீதைகள்

கீதை என்னும் சொல் பாடப்பட்டது அல்லது உபதேசிக்கப்பட்டது என்ற பொருள் கொண்டது. கண்ணன் அர்ஜுனனுக்கு போர்க்களத்தில் உபதேசித்த பகவத்கீதையைத் தவிர தத்துவத்தை எளிதில் எடுத்துக் கூறுகின்ற் இன்னும் பல கீதைகள் உள்ளன. அவையாவன:

அவதூத கீதை
உத்தர கீதை
பிக்ஷு கீதை
அஷ்டாவக்ர கீதை
ராம கீதை
சுருதி கீதை
குரு கீதை


Friday, January 29, 2010

ஆப்ரிக்காவிலிருந்து பரவிய ஆதிமனிதன்

ஆதி மனிதன் ஆப்பிரிக்காவிலிருந்து பிற கண்டங்களுக்கு பரவியது எப்போது, எப்படி?ஆதிமனிதன் ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் தோன்றினான் என்பது அனைத்து ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்ளும் விடயம். ஆனால், அந்த ஆதிமனிதன் பிற கண்டங்களுக்கு முதன்முதலில் பரவியது எவ்வாறு, எப்போது என்பதில்தான் சர்ச்சை.

ஆப்பிரிக்காவிலிருந்து மனித இனம் முதலில் சென்றது நிலவழியிலா, கடல்வழியிலா என்ற கேள்விக்கு இந்திய விஞ்ஞானிகள் கடல்வழிதான் என்ற பதிலை முன்வைத்திருக்கிறார்கள்.

அதாவது, சுமார் 70,000 ஆண்டுகள் முன்பாக, மனித இனத்தவர், ஆப்பிரிக்காவிலிருந்து கடல்வழியாகப் புறப்பட்டு, இந்தியாவின் மேற்குக் கடற்கரை வழியாகச் சென்று, பிறகு வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் தீவுக்கூட்டத்தை இவர்கள் அடைந்தார்கள் என்று இந்திய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

தற்போது அந்தமான் தீவுகளில் வசித்துவரும் பழங்குடியினரின் மரபணுக்களை ஆய்வு செய்ததில் இந்த முடிவை உறுதிசெய்திருப்பதாக இந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
இந்த முடிவை எட்ட, இந்த அந்தமான் பழங்குடியினரின் மரபணுக்களை ஆய்வு செய்திருக்கிறார்கள், அதாவது, இதே காலகட்டத்தில் ஆசியக்கண்டத்தில் உள்ள மற்ற இனத்தவரின் மரபணுக்கள் அடைந்த மாற்றங்களை விட, அந்தமான் தீவுக்கூட்டத்தில் தனித்தே வசித்துவரும் பழங்குடியினரின் மரபணுக்கள் குறைந்த அளவு மாற்றங்களைப் பெற்றிருக்கிறது என்பது இங்கே முக்கியம்.

எனவேதான் இவர்களின் மரபணுக்கள் – அவற்றில் உள்ள எக்ஸ் மற்றும் ஒய் குரோமசோம் பகுதிகள், பிறகு மிட்டோகோண்ட்ரியா என்று அழைக்கப்படும் மரபணுத் தொடர் மைய மாற்றங்கள் ஆகியவற்றை ஆராய்ந்திருக்கிறார்கள், இந்திய விஞ்ஞானிகள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த முடிவை ஒரு யூகமாக
எட்டியவர்கள், ஹைதராபாதில் இயங்கிவரும் இந்திய மூலக்கூற்று உயிரியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள். அப்போதே, இந்த விஞ்ஞானிகள் குழுவில் ஒருவராக இயங்கிவருகிற தங்கராஜ் அவர்களைத் தமிழோசை செவ்வி கண்டிருந்தது.

இப்போது மேலதிக ஆராய்ச்சியின் மூலம் இந்த முடிவு உறுதியாகியிருக்கிறது, அது மட்டுமல்ல, இங்கே ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் வின்சன்ட் மக்காலே என்ற விஞ்ஞானியும் தம்முடைய ஆராய்ச்சியின் மூலம் இதைப்போன்ற ஒரு முடிவை எட்டியிருக்கிறார். அவர் ஆய்வு செய்தது, ஆஸ்திரேலியா, மலேசியாவில் உள்ள பழங்குடியினர் பற்றி.

இந்த இரண்டு ஆராய்ச்சி முடிவுகளும் ஸயன்ஸ் என்ற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியாகி இருக்கின்றன. இதுபற்றி ஹைதாரபாத் மரபணு விஞ்ஞானி தங்கராஜ் அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் விளக்குகிறார்.

சுனாமிக்குப் பிறகு வெளித்தெரியும் சிற்பங்களின் பொருள் என்ன?


சுனாமிக்குப் பிறகு மாமல்லபுரத்தில் வெளித்தெரியும் பல்லவர் காலச் சிற்பங்களின் பொருள் என்ன?
கடந்த டிசம்பர் மாதம் நிகழ்ந்த சுனாமிப் பேரழிவுக்குப் பிறகு தமிழகத்தின் பெயர்பெற்ற கடற்கரைக்கோயில் மற்றும் குடைவரைச் சிற்பங்கள் கொண்ட மாமல்லபுரத்தில், இவ்வளவு காலம் கடல்மணலுக்குள் மறைந்திருந்த இரண்டு பாறைச்சிற்பங்கள், முழுமையாக வெளித்தெரிகின்றன.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரண்டு பல்லவர் காலப் பாறைச் சிற்பங்களை அர்த்தப்படுத்தும் முயற்சியில் இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் தென்னகக் கண்காணிப்பாளர் கே டி நரசிம்மன் இறங்கி, அதில் வெற்றி கண்டிருப்பதாகக் கூறுகிறார்.

அவற்றில், சிறிய பாறையில் இருப்பவை, திருமாலின் அவதாரங்களாக அமைந்த சிற்பங்கள், மாமல்லன் என்று தமிழக வரலாற்றில் பெயர்பெற்ற முதலாம் நரசிம்மவர்மன் அமைத்தவை அவை என்கிறார் நரசிம்மன்.

அதே போல பெரிய பாறையில் இருப்பவை மாமல்லனின் பேரன் இரண்டாம் நரசிம்மவர்மன் சிவபெருமானுக்காக அமைத்த சிற்பங்கள் என்று ஆய்வாளர் நரசிம்மன் கூறுகிறார்

புராதன முருகன் ஆலயம் கண்டுபிடிப்பு

தமிழகத்தில் சங்க காலத்தில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் முருகன் கோயில் ஒன்றின் இடிபாடுகளை இந்திய அகழ்வாரய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.மகாபலிபுரத்துக்கு வடக்கே சாலாவான் குப்பம் என்னும் இடத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்த ஆய்வாளர்கள் அங்கு சுனாமி தாக்குதலுக்கு பின்னர் மண்ணின் அடியில் இருந்து வெளிவந்து காணப்பட்ட ஒரு கல்வெட்டை கண்டுள்ளனர்.அதில் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு படையெடுத்து வந்து, ஆட்சி செய்த இராஷ்டிரகூடர்கள் அங்கிருந்த ஒரு கோயிலுக்கு மானியங்கள் வழங்கியதாகக் கூறப்பட்டிருந்தது.

அதனை அடுத்து அங்கு ஆய்வு நடத்திய போது, அந்தப் பகுதிக்கு அருகிலே மண்ணில் புதைந்த நிலையில் ஒரு முருகன் ஆலயத்தைக் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.ஆனால் ஆய்வுகளை அவர்கள் தொடர்ந்த போது, அந்த கோயிலின் அடியில் மேலும் மண்ணில் புதைந்த நிலையில் மற்றொமொரு கோயிலும் காணப்பட்டுள்ளது.

அதாவது முதலில் பல்லவர்களால் சங்க காலத்தில் கட்டப்பட்ட ஒரு கோயில், சுனாமி அலைகளால் சேதமடையவே, அதன் மீது மீண்டும் மற்றுமொரு கோயில் பின்னர் ஆண்ட மன்னர்களால் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று கூறுகிறார் சென்னை அகழ்வாராய்ச்சித் துறையைச் சேர்ந்த டி. சத்யமூர்த்தி அவர்கள்.பின்னர் இரண்டாவது கோயிலும்(மேலே இருந்த கோயில்) சுனாமியால் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தக் கோயில் கி.மு 2வது நூற்றாண்டுக்கும் கி.பி முதலாவது நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கருதப்படுவதாகவும் ஆய்வுகள் தொடர்வதாகவும் சத்யமூர்த்தி கூறினார்.

தமிழர் வரலாறு

தமிழரின் தோற்றம், பரவல் பற்றியும், அரசியல், பண்பாட்டு, தொழில்நுட்ப வரலாறு பற்றியும் தமிழ் வரலாறு கட்டுரை விபரிக்கும்.


தமிழர் தோற்றம் பற்றி இரு கருதுகோள்கள் உண்டு. பழந்தமிழர் தென் இந்தியாவின் ஆதிக்குடிகள் என்பது ஒரு கருதுகோள். தமிழர் மத்திய ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். எப்படி இருப்பினும் தமிழர் இனம் தொன்மையான மக்கள் இனங்களில் ஒன்று.

தமிழர்களின் தோற்றம் மற்ற திராவிடர்களைப் போலவே இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் அவர்கள் கி. மு. 6000-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்று தொல்லியல் மற்றும் மரபியல் ஆய்வுகள் கருதுகின்றன. (கேட்கில் 1997). பண்டைய ஈரானின் இலாமைட் மக்களுடன் தமிழர்கள் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்டாலும் அதனை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லை. சிந்து சமவெளி நாகரிக மக்கள் தமிழர்களோ அல்லது திராவிடர்களோ தான் (உதா. பர்போலா 1974; 2003) என்னும் கருத்தும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.


தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் குறிப்பாக ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கி. மு. 1000-ஆம் ஆண்டு காலத்து புதைக்கப்பட்ட மண்பாண்டங்கள் தற்காலத் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்கு சான்றாக விளங்குகின்றன. அப்புதை பொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. இவ்விடங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் குறைந்தது கி. மு. 500 ஆண்டைச் சேர்ந்தவையாகும்.

(தி ஹிண்டு, 2005)

Friday, January 22, 2010

தமிழ்நாடு


தமிழ்நாடு (Tamil Nadu) ஓர் இந்திய மாநிலமாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. மதராசு மாநிலம் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.

தலைநகரம்--சென்னை
மிகப்பெரிய நகரம்--சென்னை
ஆட்சி மொழி--தமிழ்

ஆக்கப்பட்ட நாள்--1640
பரப்பளவு--130,058 கி.மீ²
மக்கள் தொகை (2001)--62,110,839
அடர்த்தி--478/கி.மீ²
மாவட்டங்கள்--32
பொருளடக்கம்


1 புவியமைப்பு
2 வரலாறு
2.1 கிபி 1 தொடக்கம் 4 ஆம் நூற்றாண்டு வரை
2.2 கிபி 4 தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டு வரை
2.3 9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டு வரை
2.4 14ஆம் நூற்றாண்டு
2.5 17 ஆம் நூற்றாண்டு
2.6 20 ஆம் நூற்றாண்டு
3 பாரம்பரியம்
4 அரசியல்
5 மாவட்டங்கள்
6 மக்கள்
6.1 பழங்குடிகள்
6.2 சமயம்
7 பொருளாதாரம்
7.1 தமிழ்நாட்டின் ஏழ்மை நிலை
8 சமூக வளர்ச்சி
8.1 கல்வி அறிவு வீதம்
9 தமிழ்நாடு அரசு குறியீடுகள்10 விழாக்கள்
11 சுற்றுலாத்துறை
12 தமிழ்நாட்டு ஓவியக் கலை
13 வெளி இணைப்புகள்

புவியமைப்பு


தமிழ்நாடு இந்திய தீபகற்பத்தின் தெற்குக் கோடியில் அமைந்துள்ளது. வடக்கில் கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும், மேற்கில் கேரளாவும் உள்ளன. யூனியன் பிரதேசமாகிய புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது) தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் இலங்கைத் தீவு உள்ளது.
நாட்டின் ஏனைய பல பகுதிகளைப் போலன்றி, தமிழ்நாடு, அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் "வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று" மூலமே மழை பெறுகிறது. இக்கால கட்டத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயற்சின்னங்களின் மூலம் பெய்யும் மழையை உழவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.
இம்மாநிலத்தின் முக்கிய ஆறான காவிரி ஆறு வடக்கே கர்நாடக மாநிலத்தில் உருவாகித் தமிழ்நாட்டில் பாய்கிறது. வைகை, தாமிரபரணி ஆகியவை பிற முக்கிய ஆறுகளாகும்.
மதராஸ் என்று 1996 வரை அழைக்கப்பட்டு வந்த சென்னையே மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் தலைநகரமுமாகும். உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரீனா கடற்கரை சென்னையிலேயே உள்ளது. கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, சேலம், ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி மற்றும் வேலூர் தமிழ் நாட்டின் ஏனைய பெரிய நகரங்களாகும்.


வரலாறு


முதன்மைக் கட்டுரை: தமிழ்நாட்டு வரலாறு
சோழ,சேர,பாண்டிய மன்னர்களால் ஆளப்பெற்று பல கோயில்களையும்,சிற்பங்களயும் பெற்ற கலை அம்சம் கொண்ட பகுதியாக விளங்குகிறது. "வட வேங்கடம் தென் குமரி தமிழ் கூறு நல்லுலகு" என்கிறது தொல்காப்பியப் பாடல்.
தமிழ்நாடு, ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற திராவிட இன மக்களின் தோற்றம் (origin) தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருத்த திராவிடர், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்பு படுத்தப் படுகின்றது. இக் கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு திராவிடர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம். மதுரை மீனாட்சியம்மன் கோயில்
இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய திராவிட நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள், பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் என்போராவர்.


பாண்டியர்களுடைய காலம் கிமு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குவதாகச் சொல்லப்படுகின்றது. மதுரை முதற் பாண்டிய மன்னனான குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. இவர்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப் பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் பலம் மிக்க அரச வம்சங்களில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்.


கிபி 1 தொடக்கம் 4 ஆம் நூற்றாண்டு வரை


முற்காலச் சோழர் கிபி முதலாம் நூற்றாண்டு தொடக்கம் நான்காம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் மிகப் புகழ் பெற்றவனாக கரிகால் சோழன் விளங்கினான். தற்காலத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய இவர்கள், யுத்த நடவடிக்கைகளில் சிறந்து விளங்கினர்.


கிபி 4 தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டு வரை


கி.பி நான்காம் நூற்றாண்டின் பிற்பாதியில், சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகின்றது. முதலாம் மகேந்திரவர்மனும், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். திராவிடக் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் அபராஜிதன் ஆவான். இவன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது.
இக்காலகட்ட பகுதியில் (கிபி 300 - கிபி 600) பெளத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டு வரை


கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராஜராஜ சோழன் மற்றும் அவனது மகனான இராஜேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஒரு பலம் மிக்க சக்தியாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மத்திய இந்தியா, ஒரிஸ்ஸா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது.
இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சுமத்ரா, ஜாவா, மலேயா மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது.

14ஆம் நூற்றாண்டு


14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316 இல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்ஜி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இஸ்லாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் பலவீனப்படுத்தி இஸ்லாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது. இஸ்லாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விஜயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப் பட்டனர். ஹம்பியை தலை நகராகக் கொண்டிருந்த விஜய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது.
ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விஜயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டது. நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாடு அமைதியுடனும் செழிப்புடனும் விளங்கியது.தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு பழங்கால கோயில்களை புதுப்பிக்கவும் செய்தனர்.
இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.

17 ஆம் நூற்றாண்டு


1639 இல் ஆங்கிலேயர்கள் மதராஸில் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவிய பிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பகுதி தொடங்கியது. தமிழ் நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு , அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தை செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தை தம் வசப்படுத்திய இந்த காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர்.மாவீரன் அழகுமுத்துக்கோன், மருதநாயகம், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர், பூலித்தேவன்.
வீரன் சுந்தரலிங்கம், வெள்ளையன், கந்தன் பகடை, ஒண்டி வீரன், வெண்ணி காலடி தீரன் சின்னமலை, கட்டன கருப்பணன் போன்றோர் ஆட்சியாளர்களுக்கு வெள்ளையரை எதிர்த்து போரிட படைகளை தலைமையேற்று நடத்தினர். --

20 ஆம் நூற்றாண்டு


1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராஸ் மாகாணம் மதராஸ் மாநிலம் ஆனது. தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராஸ் மாநிலத்தின் கீழ் வந்தது. 1953இல் மதராஸ் மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராஸ் மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது. 1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராஸ் மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்னாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. 1968இல், மதராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பாரம்பரியம்


தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இது இந்தியாவின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்று.
சுப்பிரமணிய பாரதி, வ. உ. சிதம்பரம்பிள்ளை, சி. வி. இராமன், பெருந்தலைவர் காமராசர், சுப்பிரமணியன் சந்திரசேகர், ஆர். கே. நாராயண், சி. என். அண்ணாதுரை , ஈ.வெ.ராமசாமி (பெரியார்), சீனிவாச ராமானுஜன், அப்துல் கலாம், ஆகியோர் மாநிலத்தின் பிரபலமானவர்களுடள் சிலராவர். இவர்களோடு, கண்ணகி, திருவள்ளுவர்,தொல்காப்பியர் , ஔவையார், கம்பர், கரிகால்சோழன், இராஜராஜ சோழன் போன்ற முற்காலத்தவரும் இன்றும் நினைவில் இருப்பவர்களாகும்.

அரசியல்


முதன்மைக் கட்டுரை: தமிழக அரசியல்
தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிகள் தேர்ந்து எடுக்கப் படுகின்றனர்.
தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன.காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, மார்க்சிய கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் மற்றும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் ஆகியவையும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.
ஈ.வெ.ராமசாமி (தந்தை பெரியார் என்று அறியப்படுகிகிறார்) 1916இல் தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து, 1949இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை (தி.மு.க, D.M.K) சி. என். அண்ணாதுரை தோற்றுவித்தார். 1947 இல் இந்திய விடுதலைக்குப் பிறகு 1967 வரை தமிழ் நாட்டை காங்கிரஸ் கட்சி ஆண்டது.1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. 1972இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அ.தி.மு.க) எம்.ஜி.ராமச்சந்திரன் தோற்றுவித்தார். 1977இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது.
1967 முதல் 2001இல் கடைசியாக நடந்த சட்ட மன்ற தேர்தல் வரை தி.மு.க அல்லது அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று (அல்லது அக்கட்சிகள் தலைமை வகிக்கும் கூட்டணிகள்) பெரும்பான்மை தொகுதிகளை வென்று வருகின்றன.தமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தல்களில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உண்டு என்றாலும், இது வரை தனிக் கட்சி ஆட்சியே நடை பெறுகிறது. இருப்பினும், தமிழக கட்சிகள் நடுவண் அரசில் கூட்டணி ஆட்சி அமைக்க உதவவும் பங்கேற்கவும் செய்கின்றன.
தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு,தாழ்த்தப்பட்டோர் மற்றூம் சிறுபான்மை சமூகத்தின் நலன்,இட ஒதுக்கீடு, காவிரி நதி நீர்ப் பங்கீடு பிரச்சினை, விவாசாயிகள், பாமரர் மற்றும் நலிவடைந்த பிரிவினர் நலன், ஊழல் ஆகியவை தமிழ் நாட்டு அரசியலில் முக்கியத்துவம் உள்ளவை.
பார்க்கவும்: தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்

மாவட்டங்கள்

தமிழ் நாட்டில் 32 மாவட்டங்கள் உள்ளன.


1. அரியலூர் மாவட்டம்
2. இராமநாதபுரம் மாவட்டம்
3. ஈரோடு மாவட்டம்
4. கடலூர் மாவட்டம்
5. கரூர் மாவட்டம்
6. கன்னியாகுமரி மாவட்டம்
7. காஞ்சிபுரம் மாவட்டம்
8. கிருஷ்ணகிரி மாவட்டம்
9. கோயம்புத்தூர் மாவட்டம்
10. சிவகங்கை மாவட்டம்
11. சென்னை மாவட்டம்
12. சேலம் மாவட்டம்
13. தஞ்சாவூர் மாவட்டம்
14. தர்மபுரி மாவட்டம்
15. திண்டுக்கல் மாவட்டம்
16. திருச்சிராப்பள்ளி மாவட்டம்
17. திருநெல்வேலி மாவட்டம்
18. திருப்பூர் மாவட்டம்
19. திருவண்ணாமலை மாவட்டம்
20. திருவள்ளூர் மாவட்டம்
21. திருவாரூர் மாவட்டம்
22. தூத்துக்குடி மாவட்டம்
23. தேனி மாவட்டம்
24. நாகப்பட்டினம் மாவட்டம்
25. நாமக்கல் மாவட்டம்
26. நீலகிரி மாவட்டம்
27. புதுக்கோட்டை மாவட்டம்
28. பெரம்பலூர் மாவட்டம்
29. மதுரை மாவட்டம்
30. விருதுநகர் மாவட்டம்
31. விழுப்புரம் மாவட்டம்
32. வேலூர் மாவட்டம்

மக்கள்


தமிழ்நாடு இந்தியாவின் ஏழாவது மக்கட்தொகை மிகுந்த மாநிலமாகும். சூலை 1, 2008-இல் மக்கட்தொகை 66,396,000. இந்தியாவிலேயே அதிகப்படியாக 44% மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர். 89 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தமிழை தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். தெலுங்கு (5.65%), கன்னடம் (1.68%), உருது (1.51%), மலையாளம் (0.89%) ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன.

பழங்குடிகள்


முதன்மைக் கட்டுரை: தமிழகப் பழங்குடிகள்
தமிழகத்தன் மக்கட்தொகையில் 3.5% மக்கள் பழங்குடிகள்(2001 கணக்கெடுப்பு). மாநிலத்தில் 40-க்கும் மேற்பட்ட பழங்குடிகள் உள்ளனர். நீலகிரி, ஆனைமலை, கொல்லிமலை ஆகிய பகுதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தோடர், காடர், குறும்பர், காணிக்காரர், மலமலசர், பணியர், பழியர் முதலிய பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர்.

சமயம்


சமயவாரியாக மக்கள் தொகை
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு

மொத்தம் - 62,405,679 - 100%
இந்துகள் - 54,985,079 - 88.11%
இசுலாமியர் - 3,470,647 - 5.56%
கிறித்தவர் - 3,785,060 - 6.07%
சீக்கியர் - 9,545 - 0.02%
பௌத்தர் - 5,393 - 0.01%
சமணர - 83,359 - 0.13%
ஏனைய - 7,252 - 0.01%
குறிப்பிடாதோர் - 59,344 - 0.10%

பொருளாதாரம்


முதன்மைக் கட்டுரை: தமிழ்நாட்டுப் பொருளாதாரம்
தமிழ்நாடு, நல்ல தொழில் வளர்ச்சி கண்டுள்ள ஒருசில இந்திய மாநிலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. தமிழக மக்கள் தொகையில் குறிப்பிடத் தகுந்த பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் நெசவாலைகளுக்கும், ஈரோடு மஞ்சள் சாகுபடி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கும், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கும், சேலம் இரும்பு உருக்கு ஆலைகளுக்காகவும், நாமக்கல் கோழிப் பண்ணைகள், குழாய்க் கிணறுஆழ் குழாய்க் கிணறு அமைக்கும் தொழில், பண்டங்களை போக்குவரவு செய்யும் கனரக வாகனங்களை இயக்கும் தொழிலுக்காகவும், சிவகாசி அச்சுத் தொழில், பட்டாசு உற்பத்திக்கும், காவிரி பாசன பகுதியில் அமைந்துள்ள திருச்சி, வேலூர் தோல் தொழிலுக்கும், தஞ்சை போன்ற பகுதிகள் விவசாயத்திற்கும், சென்னை வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களுக்கும் பெயர் பெற்றுள்ளன.பாலிவுட் என அழைக்கப்படும் மும்பை திரைப்படத் துறைக்கு அடுத்ததாக, தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படத் தொழில் மையமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், பெருமளவில் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் சினிமாப் படங்கள் தமிழ் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டின் ஏழ்மை நிலை


முதன்மைக் கட்டுரை: தமிழ்நாட்டின் ஏழ்மை நிலை
தமிழ்நாடு பலமுனைகளில் வளர்ச்சியடைந்து வந்தாலும் கணிசமான மக்கள் ஏழ்மைக் கோட்டுக்கு கீழேயே வாழ்கின்றார்கள். 1999/00 கணிப்பீட்டின் படி 12-17 மில்லியன் மக்கள் அல்லது 21 விழுக்காடு மக்கள் ஏழ்மைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றார்கள்

சமூக வளர்ச்சி


சமூக முன்னேற்றத்தின் குறியீடுகளான பரவலான கல்வியறிவு, ஆண் - பெண் சமத்துவம், மேம்பட்ட பொது சுகாதாரம், நீண்ட சராசரி மனித ஆயுள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு , வேலை வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி அகியவற்றில் இந்தியாவின் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது.

கல்வி அறிவு வீதம்


மொத்தம்: 73.47%
ஆண்கள்: 82.33%
பெண்கள்: 64.56%


தமிழ்நாடு அரசு குறியீடுகள்


மொழி - தமிழ்
சின்னம் - திருவில்லிபுத்தூர் கோபுரம்
பாட்டு - தமிழ்த்தாய் வாழ்த்து
விலங்கு - வரையாடு
பறவை - மரகதப் புறா - en:Emerald Dove
மரம் - பனை
பூ - செங்காந்தள் - en:Gloriosa lily
விளையாட்டு - கபடி
ஆடல் - பரதநாட்டியம்

விழாக்கள்


பொங்கல் திருநாள் (தமிழர் திருநாள் அல்லது உழவர் திருநாள் என்றும்அழைகப்படுகிறது), தமிழர்கள் கொண்டாடும் முக்கிய திருநாள் ஆகும். தமிழ் மாதமான தை முதல் நாள் (ஜனவரி 14 அல்லது 15) இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
நோன்பு பெருநாள், பக்ரீத், முகரம் இஸ்லாமியப் புத்தாண்டு
பொங்கல் தவிர தீபாவளி, தைப்பூசம், வினாயகர் பிறந்த நாள், சரஸ்வதி (கல்விக் கடவுள்) பூஜை, ஆயுத பூஜை , கிறிஸ்துமஸ், புனித வெள்ளி போன்ற சமயம் சார்ந்த திருநாட்களும் கொடைக்கொண்டாட்டமாம் சித்திரைத்திருநாளும் (சித்திரை மாதம் முதல் நாள் - ஏப்ரல் 14 அல்லது 15) மற்றும் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் நடைபெறுகின்றன.


சுற்றுலாத்துறை


முதன்மைக் கட்டுரை: தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை
தமிழ்நாடு அழகிய நிலப் பகுதிகள், பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த சுற்றுலா முக்கியத்துவம் உள்ள மாநிலமாகும். தமிழ்நாடு, திராவிட கட்டிடக் கலை பாணியைப் பிரதிபலிக்கும் கோயில்களுக்குப் புகழ் பெற்றது.இக்கோயில்களுக்கு வியக்க வைக்கும் கோபுரங்களும் ரதங்களும் அழகு சேர்க்கின்றன.சோழர் கால தஞ்சை பெரிய கோவிலும் பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும் கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன. தஞ்சை, மதுரை, சுவாமிதோப்பு மற்றும் காஞ்சி ஆகியவை கோயில் நகரங்களாகத் திகழ்கின்றன.கன்னியாகுமரி கடல் முனையில் அமைந்துள்ள வள்ளூவர் சிலையும் காண வேண்டிய இடமாகும். எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்கு கடற்கரை பகுதிகள் போன்ற மனம் கவரும் தலங்களும் உண்டு.


தமிழ்நாட்டு ஓவியக் கலைதமிழ்நாட்டு ஓவியக்கலை தொன்மையான வரலாற்றைக் கொண்டதாகும். அத்துடன் பல்வேறு காலகட்டங்களையும் சேர்ந்த ஓவியங்கள் முழுதாகவும், சிதைந்த நிலையிலும் குகைகளிலும், பழைய அரண்மனைகளிலும், கோயில்களிலும், வேறு கட்டிடங்களிலும் காணப்படுகின்றன.
பொருளடக்கம்[மறை]
1 இலக்கியத்தில் ஓவியம்
2 பாண்டியர் கால ஓவியங்கள்
3 பல்லவர் கால ஓவியங்கள்
4 சோழர் கால ஓவியங்கள்
5 பிற்கால ஓவியங்கள்
6 தமிழகக் கோயில்களும் ஓவியங்களும்
7 உசாத்துணை

வெளி இணைப்புகள்

தமிழகம் தமிழகம் குறித்த இணையத் தளம்
தமிழ்நாடு அரசு - அதிகாரப்பூர்வ இணையத் தளம்
தமிழ்நாடு நிலப்படங்கள் - நிலப்படங்களுக்கான அரசு இணையத் தளம்
தமிழ்நாடு சுற்றுலாத்துறை - அரசு சுற்றுலாத்துறை இணையத் தளம்
டிட்கோ - தமிழ்நாடு அரசின் தொழில் வள மேம்பாட்டு நிறுவனம்
தமிழகத்தைப் பற்றிய தளம் - தமிழ்நாடு பற்றிய விவரங்களுடன் கூடிய இணையத் தளம்
தமிழ்நாடு செய்திகள்
Chennai IQ - தமிழ்நாடு மாவட்டங்கள், தாலூக்காகள் மற்றும் ஊர்கள்
http://www.tnpsc.org/
http://passport.tn.nic.in/
http://www.tneb.org/
http://www.tamilnadunri.com/
Asian Region of the Future

ராணுவத்தினர் பயன்படுத்த மிகச் சிறிய ரீசார்ஜ் பேட்டரி கண்டுபிடிப்பு


கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக உயிரியல் ஆராய்ச்சி மையத்தில், மிகச் சிறிய ரீசார்ஜ் செய்யத் தகுந்த பேட்டரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லித்தியம் உலோகத்திலான இந்த பேட்டரி 2 முதல் 4 வோல்டேஜ் சேமிப்பு திறன் கொண்டது. மலை சிகரங்கள், பனிக்குன்றுகள், அடர்ந்த காடுகளில் இருக்கும்போது ராணுவ வீரர்கள் வயர்லெஸ், சிறிய ரக ஏவுகணைகளில் இதை பயன்படுத்த முடியும்.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 3 மாதங்களுக்கு பயன்படுத்தலாம். 3 ஆண்டு ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பேட்டரி, மத்திய ராணுவ ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நானோ தொழில்நுட்பம் மூலம் சட்டை பட்டனை விட சிறிய அளவில் இந்த பேட்டரியை உருவாக்கும் திட்டமும் உள்ளது.

Thursday, January 21, 2010

தாமிரபரணி கரையோரம் 39 இடங்களில் அகழாய்வு செய்ய வேண்டும்

தமிழர்களின் தொன்மையை வெளிஉலகுக்கு எடுத்துக்கூற ஆதிச்சநல்லூர் மற்றும் தாமிரபரணி கரையோரம் ​ உள்ள 38 இடங்களில் அகழாய்வு செய்ய வேண்டும் என ​ பெரியார் ஈ.வெ.​ ராமசாமி-நாகம்மை கல்வி,​​ ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் வே.​ ஆனைமுத்து கேட்டுக் கொண்டுள்ளார்.
​ பாளையங்கோட்டையில் உள்ள தமிழ் வளர்ச்சி பண்பாட்டு ​ மையத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெற உள்ள ""தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள்:​ ஆதிச்சநல்லூர் சிறப்பும் எதிர்காலத் திட்டமும்'' என்ற தேசியக் கருத்தரங்க நிகழ்வுகள் குறித்து நிருபர்களுக்கு புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:
​ தமிழர்களின் ஆதி எச்ச நல்லூர்தான் ஆதிச்சநல்லூர்.​ சுமார் பத்தாயிரம் ஆண்டு வரலாற்றைப் பொதிந்து வைத்திருக்கிறது இந்த ஊர்.​ சங்க இலக்கியப் புரவலர் நல்லூர் நத்தத்தனார் இந்த ஊரைச் சேர்ந்தவர்தான்.
​ பொருநை நாகரிகம் என்று அழைக்கப்படும் பாண்டி நாட்டு நாகரிகம் பழம்பெரும் நாகரிகம் என்பதை பறைசாற்றும் ​ ஆதிச்சநல்லூர் 1876 இலேயே அடையாளப்படுத்தப்பட்டது.​ முனைவர் ஜாகோர் என்னும் ஜெர்மனியரால் அப்போது அகழாய்வு செய்யப்பட்டது.​ சிந்துவெளியில் மொகஞ்சதரோ,​​ ஹரப்பா முதலிய இடங்களில் நடந்த அகழாய்வுக்கு முன்பே இங்கே அகழாய்வு செய்யப்பட்டிருந்தும் மத்திய அரசு இதில் உண்மையான அக்கறை கொள்ளவில்லை.​ போதிய அளவு விளம்பரமும் இóல்லை.​ இதனால் இவ்வூரின் சிறப்பு வெளியுலகுக்கு தெரியாமல் போய்விட்டது.​ ஜாகோர் ஆய்வில் கண்டறியப்பட்ட தடயங்களை அவர் ஜெர்மன் நாட்டுக்கு எடுத்துச் சென்று ​ விட்டார்.​ பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் லெபிக் கண்டெடுத்த தடையங்கள் பாரிஸ் அருங்காட்சியகத்தில் உள்ளன.
​ பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியில் தென்மண்டல தொல்லியல் ​ கண்காணிப்பாளராக இருந்த அலெக்ஸôண்டர் ரியா 1899 முதல் ​ 1905 வரை அகழாய்வு நடத்திக் கண்டெடுத்த பொருள்கள் ​ சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.​ தங்கம்,​​ இரும்பு,​​ வெண்கலம் முதலிய உலோகக் கருவிகளும்,​​ பாண்டங்கள்,​​ அணிகலன்கள்,​​ தாழிகள் ​ முதலியவையும் இதில் அடங்கும்.
​ அதன் பின்பு சுமார் ஒரு நூற்றாண்டுக்கு பிறகு இந்திய ​ தொல்லியல் துறைக் கண்காணிப்பாளர் தியாக.​ சத்தியமூர்த்தி ​ தலைமையில் கடந்த 2003-05ல் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.​ அப்போது,​​ மிகப் பழமையான புதிய தடயங்கள் ​ கிடைத்தன.​ அதில்,​​ உலகில் வேறெங்கும் கிடைக்காத மூன்று ​ அடுக்குகளாய் அமைந்த முதுமக்கள் தாழிகள் குறிப்பிடத்தக்கவை.
​ சிந்துவெளியில் கிடைத்தது போன்ற ஒட்டு மாலை இங்கு ​ மட்டுமே கிடைத்தது.​ இதிலிருந்து இந்த நாகரிகம்,​​ சிந்துவெளி ​ நாகரிகத்திற்கு முந்தைய தனித்த நாகரிகம் ஆகும்.​ இந்த ​ சிறப்பை தமிழர்களும்,​​ உலக மக்களும் அறியாமல் உள்ளனர்.​ இவற்றை உலகம் அறியச் செய்யவே இங்கே இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

Wednesday, January 20, 2010

தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம்

தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம்

திட்ட வியூகம்
இந்த முழு திட்டமும் பெரும் பணிகள் மற்றும் நிகழ்ச்சிகளின் தன்மையைப் பொருத்து கீழ்க்கண்டவாறு பல உட்கூறுகளாகப் பிரிக்கப்பட்டு அல்லது உடைக்கப்பட்டு பின்வரும் வகையில் இத்திட்டத்தின் வியூகமானது விவரிக்கப்பட்டுள்ளது :
இந்திய அரசியல் சாசனத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து இந்திய மொழிகளிலும் உள்ள தொழில்நுட்ப மற்றும் அறிவியல் சொல்லாக்கத்திற்குத் தேவையான உதவிகள் மற்றும் ஆலோசனைகளை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கலைச்சொல்லாக்க ஆணையத்திற்கு வழங்குதல்.இவ்விலக்கை அடையத் தேவையான முயற்சிகளை அறிவியல், தொழில்நுட்பக் கலைச்சொல்லாக்க ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனம், இந்தி மற்றும் நவீன இந்திய மொழிகளில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் சொற்களைக் கண்டறிந்து, அவற்றை வரையறுத்து, தரப்படுத்திச் செம்மைப்படுத்தும் உரிமையைப் பெற்றுள்ளது. இச்சொல்லாக்கங்கள் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் மொழிபெயர்ப்புகளில் உள்ளீடு செய்யப்படும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கலைச்சொல்லாக்க ஆணையத்தின் முயற்சிகளை வலுபடுத்தும் வகையில், பட்டியலிடப்பட்டுள்ள 22 இந்திய மொழிகளிலும் புதிதாக சொல்லாக்கங்களை உருவாக்கி அறிவுசார் நூல்களை விரைந்து மொழிபெயர்க்கத் தேவையான உதவிகளைத் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் மேற்கொள்ளும். இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் மற்றும் உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம் (C-DAC) போன்ற நிறுவனங்களுடன் இணைந்து 22 மொழிகளிலும் உருவாக்கப்பட்ட கலைச்சொற்களை இணையத்தில் பயன்படுத்தத் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்க தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் பாடுபடும்.
மின்னணு அகராதிகள், பொருளியைபுச் சொற்களஞ்சியங்கள் போன்றவற்றைத் தாமே உருவாக்குதல் அல்லது பணிகளை வெளித்திறன் அடிப்படையில் பெறுதல்.
நமது பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் முக்கியமான துறைகளில் உள்ள அறிவுசார் நூல்களின் மொழிபெயர்ப்புகளை வெளியிடுதல் வேண்டும். இத்திட்டம், 11 வது திட்டக்காலத்தில், 65 முதல் 70 வேறுபட்ட பிரிவுகளில் (தொடக்கத்தில் 42 பிரிவுகள்) உள்ள 1760 அறிவுசார் நூல்கள் மற்றும் 200 பாடநூல்களை மொழிபெயர்த்து வெளியிடுவதை இலக்காகக் கொண்டுள்ளது. (இந்தி, உருது முதலான பட்டியலிடப்பட்ட இரு மொழிகளில் மட்டும் தற்போது தேசியக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NCERT) 12ஆம் வகுப்பு வரையிலான பாடநூல்கள் மொழிபெயர்க்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது). இத்திட்டத்தைச் செயலாக்கத் துவங்கினால் மொழிபெயர்ப்புகள் மற்றும் பதிப்புக்களின் எண்ணிக்கை அடுத்துவரும் திட்டக்காலங்களில் மென்மேலும் அதிகரிக்கும் என்றும் ஒவ்வொரு திட்டக்காலத்திற்கான நன்னம்பிக்கை மதிப்பீடு சுமார் 8800க்கும் மேற்பட்ட நூல்கள் என்பதாகும்.
மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்புத் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் பகுப்பாய்வுகள் போன்றவற்றை வெளியிடும் இதழ்களுக்கு மானியங்களை வழங்குதல்.
நூலாசிரியர்கள்/ மொழிபெயர்ப்பாளர்கள் முதலானோருக்கு அறிவுசார் சொத்து /பதிப்புரிமைக் கட்டணங்கள் (வழங்க நிதியுதவிகளை அளித்தல்.
பல்வேறு நிலைகளில் மொழிபெயர்ப்பு பயிற்சிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குதல் போன்றவற்றிற்கு தேவையான நிதியுதவிகளை வழங்குதல்.
இயற்கை மொழியாய்வுச் செயலாக்கம், அல்லது NLP தொடர்பான ஆய்வுகளுக்குத் தேவையான நிதியுதவிகளை வழங்குதல்.
பல்கலைக்கழகங்களில் உள்ள துறைகளுக்கு மொழிபெயர்ப்பில் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்புகளை நடத்துவதற்காக (மொழிபெயர்ப்புச் கையேடுகள் தயாரித்தல் போன்ற குறிப்பிட்ட திட்டங்களுக்காக) நிதியுதவிகளை வழங்குதல். முடிவாக, மேற்குறிப்பிட்ட பணிகளை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல் முன்மொழியப்பட்ட தேசிய மொழிபெயர்ப்புத் திட்டமானது பின்வரும் அடிப்படை நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளும்:
பல்வேறு துறைகளில் இருந்து வேறுபட்ட செயல்திறன் மற்றும் கல்வித்தகுதி பெற்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கான தரவுக் களஞ்சியம் ஒன்றை உருவாக்குதல். இக் களஞ்சியமானது குறிப்பிட்ட பணிகளுக்காக இணையத்திலும் மற்றும் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தினையும் தொடர்பு கொண்டு பெறும்வகையில் அமைக்கப்படும்.
தரவுக் களஞ்சியங்கள் மற்றும் ஏற்கெனவே காணப்பெறும் பல்வேறு வகை மொழிபெயர்ப்புகளின் குறிப்புரை விவரப்பட்டி புலங்களின் அடிப்படையில் புதுப்பித்த பட்டியல்களாகப் வகைப்படுத்தப்பட்டுக் கல்வி நிலையங்களுக்கும் நூலக வலையமைப்புகளுக்கும் தொடர்ந்து அனுப்பிவைக்கப்படும்.
மொழிபெயர்ப்பாளர்களுக்கான குறுகிய காலப் பயிற்சிவகுப்புகள் நடத்துதல்.
தரம்வாய்ந்த மொழிபெயர்ப்புகளை அனைவரும் அறியும்வகையில் பரப்புதல் மற்றும் ஊக்குவித்தல்.
எந்திர மொழிபெயர்ப்பை ஊக்குவித்தல்.திட்டத்தின் மூலம் உதவிபெறுவதற்காக தேர்தெடுக்கும் வகையில் கண்டறியப்பட்டுள்ள இதழ்களின் தற்காலிகப் பட்டியல் ஒன்று பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது. திட்டமானது ஏற்பளிக்கப்பட்ட பின்பு இதழ்களின் முடிவான பட்டியல் உருவாக்கப்படும். மொழிபெயர்ப்பிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இதழ்கள்(முன்மொழியப்பட்டுள்ள தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின்கீழ் உதவிபெற தகுதியானவை)
அஸ்ஸாமி
1. கரியாஷி (Gariyasi) (தொகுப்பாளர் ஹரே கிருஷ்ண தேகா)
2. பிராந்திக் (Prantik- தொகுப்பாளர் பி.ஜி. பருஹா)
3. அனுராத் பாரம்பர் (Anuraadh Parampar)( தொகுப்பாளர் பி. தாகூர்)
வங்காளி
4. அனுபாத் பத்திரிக்கை (Anubad Patrika)
5. பாஷாநகர் (Bhashanagar -தற்போது அரிதாகவே வெளிவருகின்றது)
6. பாஷாபந்தன் (Bhashabandhan)
7. எபாங்க் முஷாரியா (Ebang Mushaira) (அறிவுசார் நூல்களில் இருந்து தொகுக்கப்பட்ட கட்டுரைகளைத் தாங்கி வெளிவருகின்றது)
8. பிக்யாபன் பர்வா (Bigyapan parva) (மொழிபெயர்ப்புக் கலை மற்றும் திறனாய்வு)
9. அந்தர்ஜாடிக் அஞ்சிக் (Antarjatik angik) (வட்டார மற்றும் உலகலாவிய மூலங்களில் கவனம் செழுத்துகிறது)
10. பர்பன்டார் (Parbantar) (வட்டார மொழிபெயர்ப்புக்கள்-ஆசிரியர் மற்றும் நூல்களில் கவனம் செழுத்துகிறது)
போடோ
11. போடோ சாகித்திய சபா பத்திரிக்கை (Bodo Sahitya Sabha Patrika)
12. இந்தியன் லிட்ரேட்சர் (Indian Literature) (சாகித்திய அகாதமி)
13. ட்ரான்ஸ்லேஷன் டுடே (Translation Today,CIIL)
14. யாத்ரா (Yatra) (அஸ்ஸோமிய மொழிபெயர்ப்புகள்)
15. அனிகேதனா (Aniketana) (கன்னட மொழியில் )
16. மலையாள லிட்ரேட்சர் சர்வே (Malayalam Literary Survey) (மலையாள மொழியில்)
17. உருது அலைவ் (Urdu Alive) (உருது மொழியில்)
18. கோபிதா ரிவியூ (Kobita Review) (இருமோழி-வங்காளி, ஆங்கிலம்)
19. இன்டர்நேஷனல் ஜர்னல் இன் டிரான்ஸ்லேஷன் (International Journal in Translation)
குஜராத்தி
20. வி (Vi) பல மொழிபெயர்ப்புக்களைத் தாங்கி வெளிவருகின்றது
21. கத்யபர்வா (Gadyaparva)
இந்தி
22. தானவ் (Tanav) (பல்வேறு இந்திய மற்றும் அயல்நாட்டு மொழிகளில்)
23. அனுவாத் (Anuvad) (பிற மொழிகளில் உள்ள மொழிபெயர்ப்புத் தொடர்பான கட்டுரைகள்)
24. பாஹல் (Pahal) (மொழிபெயர்ப்பிற்கான பத்திரிக்கை இல்லையெனினும் பல்வேறு மொழிபெயர்ப்புகளை வெளியிடுகிறது)
25. சாமாகாலின் பாரதிய சாகித்யா (Samakaalin Bharatiya Sahitya) (சாகித்திய அகாதமி)
26. வகார்த் (Vagarth)
27. நயா ஞானோதய் (Naya Gyanoday)28. பாரதிய அவுவாத் பரிஷத் பத்திரிக்கை (Bharatiya Avuvad Parishad Parika)
கன்னடம்
29. அனிகேதனா (Aniketana) (மற்ற இந்திய மொழிகளில் இருந்து,ஆங்கிலத்தில் வெளிவரக்கூடிய அனிகேதனா நாழிதளில் இருந்து மொழிபெயர்க்கப்படுகிறது)30.தேசகலா(Desa-kala)(பெருமளவிலான மொழிபெயர்ப்புக்களை வெளியிடுகிறது)
31. சங்கரமானா (Sankramana) (பெருமளவிலான மொழிபெயர்ப்புக்களை வெளியிடுகிறது)
32. சம்வாதா (Samvada) (பெருமளவிலான மொழிபெயர்ப்புகளை வெளியிடுகின்றது)
33. சங்கல்னா (Sankalana) மொழிபெயர்ப்புக்களையும் வெளியிடுகின்றது)காஷ்மீரி
34. ஷீராஜா காஷ்மீரி (Sheeraza-kashmiri) (பண்பாட்டுத் துறை)
35. ஆலவ் (Aalav) (தகவல் தொழில்நுட்பத் துறை)கொங்கனி
36. ஜாக் (Jaag- மொழிபெயர்ப்புகள் தொடர்பான அட்டவணையுடன்)மலையாளம்
37. கேரளக் கவிதா (Kerala Kavita) ஏராளமான மொழிபெயர்ப்புகளுடன், முக்கியமாக இலக்கிய மொழிபெயர்ப்புகள்)
38. மாத்ருபூமி (Matribhumi) (மொழிபெயர்ப்புத் தொடர்பான சிறப்புச் செய்திகளுடன்)
39. கலா கௌமுடி (Kala-Kaumudi)
40. மத்தியமம் (Madhyamam) மராத்தி
41. கெல்யான பஷந்தர் (Kelyane Bhashantar)
42. பாஷா அனி ஜீவன் (Bhasha ani Jeevan)
43. பிரதிஷ்டான் (Pratishtan)
44. பஞ்சதந்திரம் (Panchdhara) மராத்திய மூல நூல்களும் இந்தி, உருது, தெலுங்கு மற்றும் கன்னட மொழிபெயர்ப்புகளும்)
45. சக்ஷத் (Sakshat) (மொழிபெயர்ப்புத் தொடர்பான சிறப்புச் செய்திகளை வெளியிடுகிறது)
மைதிலி
46. மைதிலி அகாதமி பத்திரிக்கை (Maithili Academy Patrika) (அறிவுசார் நூல்களைத் தாங்கிவருகின்றது)
47. கர் பஹார் (Ghar-Bahar) (மொழிபெயர்ப்புக்களை தாங்கி வெளிவருகின்றது)ஒரியா
48. சப்தபிக்ஷா (Saptabhiksha)
பஞ்சாபி
49. சம்தர்ஷி (Samdarshi பஞ்சாபி அகாதமி வெளியீடான இவ்விதழ் சில நேரங்களில் மொழிபெயர்ப்புக்களைத் தாங்கி வெளிவருகின்றது)
50. அக்கார் (Akkhar)(அம்ரிஷ்டர், படைப்புத் திறன்மிக்க )
சந்தாலி
51. சர் சகுன் (Sar-Sagun)
52. லோகந்திப் பத்திரிக்கை (Lohanti Patrika)
தமிழ்
53. திசைகள் எட்டும் (Disaikal Ettum) இந்திய (மொழிகளில் இருந்து)
தெலுங்கு
54. விபுலா (Vipula) (பொதுவாக அனைத்து மொழிகளிலும் உள்ள மொழிபெயர்ப்புகள்)
55. தெலுங்கு வாய்ஜ்னகியப் பத்திரிக்கை (Telugu Vaijnakia Patrika) (தெலுங்கு அகாதமி)

உயிரித் தொழில்நுட்பவியல் (Biotechnology) கல்விமுனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


மேல்நிலைக் கல்வி, மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் மேற்கொண்டு என்ன படிப்பது என்று திகைத்துக் கொண்டிருக்குக்கும் நேரமிது; மருத்துவம், தகவல் தொழில் நுட்பவியல், பொறியியல், வேளாண்மை, பட்ட மேற்படிப்பு இப்படி ஏதாவது ஒன்றுக்கு நுழைவுத் தேர்வு எழுத முயற்சி செய்து கொண்டுள்ளனர். மேற்கூறிய துறைகள் மட்டுமின்றி வேலைவாய்ப்பு மிகுந்த பல கல்வித் துறைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் உயிரித் தொழில்நுட்பவியல் கல்வி. இதனைப்பற்றிய விவரங்களையும், இத்துறையில் வேலை வாய்ப்பு எப்படி என்பது பற்றியும், இக்கல்வியை வழங்கும் கல்விக்கூடங்கள் எவை என்பது பற்றியும், இக்கட்டுரை சில தகவல்களை வழங்குகிறது.
உயிரித் தொழில்நுட்பவியல் என்பது மிக விரைந்து வளர்ந்து வருகிகிற ஒரு துறையாகும்; இதன் தாக்கம் வாழ்வின் அனைத்துப் பகுதியிலும் உணரப்படுகிறதெனில் மிகையன்று. வேளான்மைப் பொருள்களின் உற்பத்தி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு முறைகள், மருந்துப் பொருள்களின் தயாரிப்பு இப்படி அனைத்திலும் உயிரித் தொழில்நுட்பத்தின் பங்கு விரைவாக வளர்ந்து வருகிறதெனலாம். எனவே உலகம் முழுவதிலும் வேலைவாய்ப்பு, வாணிகம், மக்கள் நவாழ்வு, பொருள் உற்பத்தி, பொருளாதாரம், தரமான மற்றும் வசதியான வாழ்க்கை ஆகிய அனைத்தும் தற்போது உயிரித் தொழில்நுட்பத்துடன் பின்னிப் பிணைந்துள்ளன. இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளிலும் உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியும் பெருக்கமும், மேலும் இத்துறையில் அறிவியல் வல்லுநர்களின் ஈடுபாடும் இதனை உறுதிப்படுத்துகின்றன.
உலகச் சந்தையில் இன்று உயிரித்தொழில்நுட்பப் பொருள்களுக்கு மிகப்பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது; இந்நிலை ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வருகிறதெனலாம். இருபதாம் நூற்றாண்டு மின்னணு ஆண்டாக விளங்கியது போல, இருபத்தோராம் நூற்றாண்டு உயிரித் தொழில்நுட்ப ஆண்டாக விளங்கப்போகிறது என்பது அறிஞர்களின் கணிப்பு. ஸ்காட்லாந்து நாட்டு அறிவியல் மேதைகள் உயிரித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குளோனிங் முறையில் டாலி ஆட்டுக்குட்டியை உருவாக்கியபோது உலகமே வியப்பின் விளிம்பிற்குச் சென்றதை நாம் அறிவோம். மருத்துவ ஆராய்ச்சிக்காக மனிதக் கருவைக் குளோனிங் செய்வதற்கு, அண்மையில் இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளதனால் உயிரித் தொழில்நுட்பவியலுக்கு மேலும் வாய்ப்பு கூடியுள்ளதெனலாம்.
நம் நாட்டில் 1982 ஆம் ஆண்டு மைசூரில் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டில் உயிரித் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் பெரிதும் உணரப்பட்டது; இதன் விளைவாக இத்துறையில் மென்மேலும் ஆய்வுப் பணிகளை ஊக்குவிக்க, தேசிய உயிரித் தொழில்நுட்பவியல் வாரியம் (National Biotechnology Board - NBTB) ஒன்றினை நமது அரசு உருவாக்கியது. மேலும் 1986 ஆம் ஆண்டு அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ், உயிரித் தொழில்நுட்பவியல் என்ற பெயரில் ஒரு தனித் துறையே (Department of Biotechnology-DBT) தோற்றுவிக்கப்பட்டது.
உயிரித் தொழில்நுட்பவியல் என்பது பல்துறை சார்ந்த ஒரு கல்வி முறையாகும். தற்போது நம் நாட்டுக்குத் தேவைப்படும் உயிரித் தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகள், வேளாண்மை மற்றும் மருத்துவத் துறைகளில் தேவைப்படும் உயிரித்தொழில்நுட்ப அறிஞர்களை உருவாக்குவதற்கான கல்வித்திட்டமும், அதற்காக மாணவர்களைச் சேர்த்துப் பயிற்சியளிக்கும் பணியும் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உயிரித்தொழில்நுட்பக் கல்வி என்பது மனிதர்களின் மரபு வழி வந்த ஒழுக்க நெறியோடும் தொடர்புடையதெனலாம். மனித வாழ்க்கையின் இயற்கை நெறிகளுக்கு மாறாகச் செயல்பட வேண்டிய கட்டாயமும் இவ்வுயிரித்தொழில்நுட்பவியல் பயன்பாட்டின் காரணமாக ஏற்படக்கூடும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தாவரங்கள், விலங்குகள், மனித உயிர்கள் ஆகியவற்றில் உயர்ரக உயிரினங்களை உருவாக்குவதே உயிரித்தொழில்நுட்பத்தின் முக்கிய பணியாகும். உயர் ரக கோதுமை விளைச்சலைப் பெருக்கி, அதன்மூலம் பசுமைப் புரட்சியை உருவாக்கியது உயிரித்தொழில்நுட்பத்தின் பயன்பாடேயாகும்; இப்பசுமைப் புரட்சியினால் இயற்கையின் பல வேறுபாடுகளுக்கிடையில் இயற்கைச் சமநிலை குலையாது வாழும் உயிரினங்களின் உயிரிய வேற்றுமை (biodiversity) குலைந்துவிட்டதாக சுற்றுச்சூழல் வல்லுனர்கள் குற்றம் சாட்டினர். இருப்பினும் மனித குலத்துக்கு மிகுதியான நன்மை விளையும் என்கிற நிலைமையில் உயிரித்தொழில்நுட்பப் பயன்பாட்டைக் குறை கூறலாகாது என்ற கருத்தும் நிலவுகிறது. எது எப்படி இருப்பினும் மனித குலத்தின் வளர்ச்சிக்கு இத்துறையினால் அளவற்ற நன்மை உண்டாகும் என்பது மட்டும் உறுதி.
உயிரித்தொழில்நுட்பத் துறையின் முக்கிய குறிக்கோள் உறுதியான மனித குலத்தை உருவாக்குவதும், மனிதர்களின் நோயெதிர்ப்பு ஆற்றலை மிகுதிப்படுத்துவதுமேயாகும். மக்கள் நல்வாழ்வு, மருத்துவத்துறை, வேளாண்மை, உணவு, சுற்றுச்சூழல் ஆகிய பல்வேறு துறைகளிலும் உயிரித்தொழில்நுட்பத் துறையின் தாக்கம் அடுத்த இருபதாண்டுகளில் மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் புது வகையான மருந்துகளைக் கண்டுபிடித்தல், புதுவகையான நோய் அறியும் முறைகள், உகந்த வேளாண்மை முறைகள், பயிர் விளைச்சல்கள், தகுந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகள் ஆகிய அனைத்திலும் உயிரித்தொழில்நுட்பத்தின் தாக்கம் அமையவிருக்கிறது. இதன் விளைவாக மனித வாழ்க்கையின் தரம் உயர்வதோடு, மனித ஆயுளும் மிகுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நினைத்தாலே இனிக்கும் எதிர்பார்ப்புகள்தான்!
ஆனால் இத்துறைக்குத் தேவையான மனித வளத்தை, அதாவது நிபுணர்களையும், வல்லுனர்களையும் உருவாக்க வேண்டுமல்லவா ? உயிரித்தொழில்நுட்பத் துறை இதற்காகப் பல கல்வித்திட்டங்களைத் தீட்டியுள்ளது. உயிரித்தொழில்நுட்பத் துறையில் இரண்டாண்டு பட்ட மேற்படிப்பை (Two year M.Sc.) மேற்கொள்ள, புது தில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்களைத் தேர்வு செய்கிறது. இந்தப் பட்டமேற்படிப்பில் சேர்வதற்கு உயிரியல், இயற்பியல், வேதியியல், வேளாண்மை, பொறியியல், மருத்துவவியல், மருந்தாளுநரியல் ஆகிய ஏதேனும் ஒரு துறையில், குறைந்த அளவு 55% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்தியாவில் 20 பல்கலைக் கழகங்களில் இந்த இரண்டாண்டு M.Sc. பட்ட மேற்படிப்பு அளிக்கப்படுகிறது.
உயிரித்தொழில்நுட்பத் துறையில் மேலும் சில பட்டமேற்படிப்புகளும் அளிக்கப்படுகின்றன. அவற்றுள் சில பின்வருமாறு: எம்.டெக் (உயிரித் தொழிநுட்பவியல்), எம். எஸ்சி (வேளாண்மை உயிரித் தொழில்நுட்பவியல்), எம்.வி.எஸ்சி (விலங்கியல் உயிரித்தொழில்நுட்பவியல்). இவற்றில் சேர்வதற்கான அடிப்படைக் கல்வித்தகுதிகள், குறிப்பிட்ட பாடங்களில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்; அதாவது, வேளாண்மை, தோட்டக்கலையியல், வேளாண்மைப் பொறியியல், விலங்கியல் போன்றவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இவற்றிற்கான விளம்பரங்கள் மார்ச்சு/ஏப்பிரல் மாதங்களில் முக்கிய செய்திதாள்களில் வருகின்றன; நுழைவுத் தேர்வுகள் மே, ஜூன் மாதங்களில் நடைபெறும். மேலும் கரக்பூர், தில்லி, மும்பை ஆகிய நகரங்களிலுள்ள ஐ.ஐ.டி. நிறுவனங்களும், ஆக்ரா, ராஞ்சி, ஜாதவ்பூர், கொல்கொத்தா பல்கலைக்கழகங்களும் மேற்கூறிய உயிரித்தொழில்நுட்பப் பட்டமேற்படிப்பை வழங்குகின்றன. இந்நிறுவனங்கள் பாடத்திட்டங்கள், அனுமதி முறைகள், சேர்க்கை முறைகள் ஆகியவற்றில் தன்னுரிமை பெற்று விளங்குபவை.
அடுத்து பெரும்பாலான மாணவர்கள் பட்டமேற்படிப்பை முடித்தவுடன், உயிரித்தொழில்நுட்பத் துறையில் ஆய்வு மேற்கொண்டு பி.எச்டி. பட்டம் பெற விரும்புகின்றனர் என்பதும், இதற்காகப் பலர் வெளிநாடு செல்கின்றனர் என்பதும் உண்மையே. ஆனால் இப்போது இந்தியாவிலேயே ஆய்வு செய்வதற்குத் தேவையான எல்லா வசதிகளும் கிடைக்கின்றன என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்; சுமார் 7 இடங்களில் நிறுவப்பட்டுள்ள தாவர மூலக்கூறு உயிரியல் மையங்கள் (Centre for Plant Molecular Biology), இந்திய வேளாண்மை ஆய்வு நிறுவனம் (Indian Council for Agricultural Research), அறிவியல் மற்றும் தொழில் ஆய்வு நிறுவனம் (Council of Scientific and Industrial Research) ஆகியவற்றில் உயிரித் தொழில்நுட்பத் துறையில் ஆய்வு செய்வதற்குத் தேவையான வசதிகள் உலகத்தரத்திற்கு இணையாகக் கிடைக்கின்றன. இவற்றைத்தவிர, ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சார்பாக மரபுப் பொறியியல் மற்றும் உயிரித்தொழில்நுட்பவியலுக்கான பன்னாட்டு மையங்கள் (International Centre for Genetic Engineering and Biotechnology)இரு இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. ஒன்று இத்தாலி நாட்டிலும் மற்றொன்று புது தில்லியிலும் அமைந்துள்ளன; இங்கும் ஆய்வு செய்வதற்கான வசதிகள் உண்டு. இவை தவிர தனியார் நிறுவனங்கள் சிலவும் உயிரித்தொழில்நுட்ப ஆய்வுக்கான வசதிகளை அளிக்கின்றன. அடுத்து உயிரித்தொழில்நுட்பக் கல்வி கற்றோருக்கான வேலை வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறைகளிலும்,. மருந்து உற்பத்தி மற்றும் ஆராய்ச்சித் துறைகளிலும், வேளாண்மை, உணவு உற்பத்தி மற்றும் பதப்படுத்தல் ஆகிய துறைகளிலும் மிகுந்த வேலை வாய்ப்பு உள்ளது என்பது மிகைப்படுத்தப்படாத உண்மை. கிளாக்ஸோ, தாபர் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களில் ஏராளமான வேலை வாய்ப்பு, உயிரித்தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் காத்திருக்கிறது. உயிரித்தொழில் நுட்பம் பல்வேறு பரிமாணங்களில் வளர்ந்து வருகிற, சமுதாயத்திற்கு பல்வேறு வகைகளில் பயனளிக்கப்போகிற மிகப்பெரிய துறையாகும். உயிரித்தொழில்நுட்பத்துறையில் ஈடுபட விரும்புவோர்க்குத் தேவையான தகுதிகள் இரண்டு; ஒன்று தணியாத ஆர்வம், மற்றொன்று கூர்மையான நுண்ணறிவு. எனவே தகுதியும், திறமையும் வாய்ந்தவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு இத்துறையில் காத்திருக்கிறது என்பதில் எவ்வித ஐயமும் தேவையில்லை.
உயிரித்தொழில்நுட்ப பட்ட மேற்படிப்பை வழங்கும் சில நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்கள்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
ஜி.பி.பந்த் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், பந்த் நகர், நைனிடால்
எம்.எஸ்.பல்கலைக்கழகம், பரோடா
பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்
கோவா பல்கலைக்கழகம், கோவா
புதுவைப் பல்கலைக்கழகம், புதுவை
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
இந்திரா காந்தி வேளாண்மைப் பல்கலைக்கழகம், ராய்பூர்
குல்பர்கா பல்கலைக்கழகம், குல்பர்கா, கர்நாடகா
குஜராத் பல்கலைக்கழகம், அகமதாபாத்
பூனா பல்கலைக்கழகம், பூனே
அலகாபாத் பல்கலைக்கழகம், அலகாபாத்
ஹைதராபாத் பல்கலைக்கழகம், ஹைதராபாத்
மராத்வாடா வேளாண்மைப் பல்கலைக்கழகம், பர்பானி
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், புது தில்லி
பஞ்சாபி பல்கலைக்கழகம், பாட்டியாலா
ஜம்மு பல்கலைக்கழகம், ஜம்மு
கோழிக்கோடு பல்கலைக்கழகம், கேரளா
தேஜ்பூர் பல்கலைக்கழகம், தேஜ்பூர், அஸ்ஸாம்
குருநானக் பல்கலைக்கழகம், அமிதசரஸ்
***
முனைவர் இரா விஜயராகவன் Dr R Vijayaraghavan
பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி BTech MIE MA MEd PhD
மொழிக் கல்வித்துறை (தமிழ்) Dept. of Language Education (Tamil)
வட்டாரக் கல்வியியல் நிறுவனம் Regional Institute of Education (NCERT)
மைசூர் 570006 Mysore 570006


Copyright:Thinnai.com 

-