Sunday, August 11, 2013

திருமந்திரம்


 அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதும் ஒன்று இல்லை
முயலும் முயலின் முடிவும் மற்று ஆங்கே
பெயலும் மழைமுகில் பேர் நந்தி தானே.

  கண்ணுதலான் ஒரு காதலின் நிற்கவும்
எண் இலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண் உறுவார்களும் வான் உறுவார்களும்
அண்ணல் இவன் என்று அறியகிலார்களே.

  மண் அளந்தான் மலரோன் முதல் தேவர்கள்
எண் அளந்து இன்னம் நினைக்கிலார் ஈசனை
விண் அளந்தான் தன்னை மேல் அளந்தார் இல்லை
கண் அளந்து எங்கும் கடந்து நின்றானே.


  கடந்துநின்றான் கமலம் மலர் ஆதி
கடந்துநின்றான் கடல் வண்ணம் எம் மாயன்
கடந்துநின்றான் அவர்க்கு அப்புறம் ஈசன்
கடந்துநின்றான் எங்கும் கண்டு நின்றானே.

  ஆதியுமாய் அரனாய் உடலுள் நின்ற
வேதியுமாய் விரிந்து ஆர்ந்து இருந்தான் அருள்
சோதியுமாய்ச் சுருங்காதது ஓர் தன்மையுள்
நீதியுமாய் நித்தம் ஆகி நின்றானே.