Sunday, January 31, 2010

பகவத் கீதை

பகவத் கீதை என்பது இந்து சமயத்தினரின் முக்கிய நூல்களுள் ஒன்றாகும். மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அர்ஜூனன் அங்கே தன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தான். இதைக் கண்ட அவன் தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்திற்காக போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்றார். மேலும் அப்போது அவனுடன் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் உரையாடினார். இந்த உரையாடலே பகவத் கீதை ஆனது.

பொருளடக்கம்

1 அர்ச்சுனனின் மதிக்கலக்கம்
2 கண்ணனின் ஐந்து வாதங்கள்
3 வேதாந்த வாதம்
4 சுயதரும வாதம்
5 கருமயோகப்பார்வை
6 பக்தியோகம்
7 பிரகிருதி தான் செய்கிறது
8 சரணாகதி என்ற முத்தாய்ப்பு
9 மானிட சமூகத்திற்கு கீதையின் படிப்பினை
10 கீதைக்கு உரைகள் பல
11 இன்னும் மற்ற கீதைகள்

அர்ச்சுனனின் மதிக்கலக்கம்

18 அட்சௌகிணி சேனைகளும் போருக்கு ஆயத்த நிலையில் நிற்கும்போது பேடிபோல் பின்வாங்குகிறான் அர்ச்சுனன். எந்தப் போருக்காக பல ஆண்டுகளாக வானுலகம் வரை சென்று ஆயத்தம் செய்திருந்தானோ, எந்தப் போரை எதிர்பார்த்து தன் கோபத்தையும் துக்கத்தையும் கட்டுப்படுத்தி வைத்திருந்தானோ, அந்தப் போர் இதோ சங்கு ஊதவேண்டிய தருவாயில் போர் தொடங்கும் நிலையில் இருந்தபோது, கடைசித் தருணத்தில் அம்பையும் வில்லையும் கீழே எறிந்துவிட்டு ‘இந்தப்போர் எனக்கு வேண்டாம், மலர்களால் அர்ச்சிக்க வேண்டிய என் குருமார்களையும், மூத்தோர்களையும் அம்புகளால் அடிக்க மாட்டேன்’ என்று வாதம் பேசுகிறான் அர்ச்சுனன். அவனுடன் நீண்ட நேரம் வேதாந்தம் பேசி, பக்தியின் நெளிவு சுளுவுகளை அலசி, சுயதருமம் என்ற கடமைக்குப் பொருள் கூறி, அவனுடைய அறியாமையைப் போக்குகிறார் கண்ணன். முடிவில், ‘கண்ணா, உன் சொற்படி செய்கிறேன்’ என்று அர்ச்சுனன் போருக்கு ஒப்புக்கொள்கிறான், என்பதுடன் 18வது அத்தியாயத்தில் கீதை முடிகின்றது.


கண்ணனின் ஐந்து வாதங்கள்

அப்படி கண்ணன் என்ன சொல்லி அவனுக்குப் புரிய வைத்தார் என்பதுதான் கீதை. அர்ச்சுனனின் ஐயமென்ற சிடுக்கை அவிழ்த்து விடுவதற்காக் கண்ணன் எடுத்தாளும் வாதங்கள் ஐந்து. ஒவ்வொரு வாதமும் ஒரு குறிப்பிட்ட கோணத்திலிருந்து பார்க்கும் பார்வையோ அல்லது ஒரு குறிப்பிட்ட மனப்போக்கினால் ஏற்றுக்கொள்ளும் போர்வையையோ அடித்தளமாகக் கொண்டது. அவ்வைந்தாவன:

வேதாந்தப்பார்வை
சுயதருமப் பார்வை
கருமயோகப் பார்வை
எல்லாம் அவன் செயல் என்ற பக்திப்போர்வை
அவனும் செயலாளியல்ல, பிரகிருதி தான் செய்கிறது என்ற தத்துவப்போர்வை.

வேதாந்த வாதம்

“வருந்தப்பட வேண்டாததற்கு வருத்தப்படுவது அறிவாளிகளுடைய செயலல்ல. மூன்று காலத்திலும் எந்தப் பொருள் இல்லையோ அதற்கு ஒரு காலத்திலும் இருப்பு என்பதில்லை. இருப்பது போல் தோன்றினாலும் அது நிகழ்காலத் தோற்றம் மட்டும்தான். மூன்று காலத்திலும் எந்தப் பொருள் உள்ளதோ அதற்கு ஒரு காலத்திலும் இல்லாமை என்பதில்லை. புலன்களுக்கு அகப்படாததை இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆன்மா என்ற ஒன்றுதான் அழியாத நிரந்தரமான உட்பொருள். அதை யாராலும் அழிக்க முடியாது. அழிவதாக நமக்கு தெரிவதெல்லாம் உடம்பு தான். அர்ச்சுனா, எதிரிகளின் மீதுள்ள பாசத்தை விட்டுப் போர் புரி. அவர்கள் உடம்பில் குடிகொண்டிருக்கும் ஆன்மா யாரையும் கொல்லாது, அதை யாராலும் கொல்லவும் முடியாது. அதனால் நீ யாருக்காகவும் வருத்தப்பட வேண்டம்” இந்த வாதத்தின் அடிப்படையில் தான் முழு கீதையும் செயல்படுகிறது.

சுயதரும வாதம்

“அர்ச்சுனா, உன்னுடய சுயதருமம் க்ஷத்திரியனுக்குகந்த தருமப்போர் தான். இப்போருக்காக நீ பல ஆண்டுகள் தவமிருந்திருக்கிறாய். போரிலிருந்து பின்வாங்குவது உனக்கு ஒவ்வாத ஒன்று.” ‘சுயதருமமும் உன் சுபாவமும் விதிக்கும் க்ஷ்த்திரிய தருமத்தில் குறை இருந்தாலும் அதைக் கைவிடாதே. எந்தச் செய்கையிலும் நெருப்புக்குப் புகைபோல் ஏதாவதொரு குறை இருக்கத்தான் செய்கிறது’.(18-48)

(அடைப்புகளிலுள்ள குறியெண்கள் கீதையில் அத்தியாய எண்ணையும் சுலோக எண்ணையும் குறிக்கின்றன).

‘பிறிதொருவனுடைய கடமையை ஏற்று அதை நன்றாகச் செய்தாலும் அதைவிடச் சிறந்தது தன்னுடைய கடமையில் ஈடுபட்டிருப்பதே. அது முறையாக ஆற்றப்படாவிடினும் அதுவே சிறந்தது’ (3-35). ‘சுபாவத்தினால் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதில் பாவம் சம்பவிப்பதில்லை’ (18-47). இந்த சுயதருமப் பார்வை எப்படி மற்ற வாதங்களுடன் ஒழுங்காகவும் தர்க்க ரீதியாகவும் பிணைக்கப் படுகின்றது என்பது கீதையின் சிறந்த சாதனைகளில் ஒன்று.

கருமயோகப்பார்வை

இது கருமயோகம் என்று பெயர் கொண்ட புரட்சி மிகுந்த உபதேசம். எளிதில் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடியது. ‘ஒவ்வொரு மனிதனும் செய்யவேண்டிய கடமைகள் பல. அவைகளைச் செய்வதில் விருப்போ அல்லது வெறுப்போ ஒரு பிரச்சினை ஆகக்கூடாது. கடமையைக் கடமைக்காகவே செய்ய வேண்டும். கடமையைச் செய்வதற்குத் தான் உனக்கு அதிகாரம். அவை என்ன பயன் தருகிறதோ, தருமோ என்ற பிரச்சினை உன்னை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது. பயனுக்காகவோ அல்லது பயனை விரும்பியோ, வெறுத்தோ செயலில் ஈடுபடுவது உன்னை கட்டுப்படுத்தும். இந்தப்போர் உன்னுடைய கடமைகளில் ஒன்று. இதை ஆசையோ, நிராசையோ, கோபமோ தாபமோ இல்லாமல், ஆனால் அலட்சியமும் இல்லாமல், நன்றாகவே செய்யவேண்டும்’. ‘உனது செயல்களை யெல்லாம் எனக்கு அர்ப்பணித்து விட்டு என்னில் நிலைத்த மனதுடன், பயனில் பற்றற்று, அகங்காரத்தை விட்டு, மனக் கொதிப்பில்லாமல் போரிடு’ (3 – 30). கீதை 2வது அத்தியாயம் 39 வது சுலோகத்திலிருந்து 5வது அத்தியாயம் முடியும் வரை இதை கருமயோகம் என்ற ஒரு உயரிய யோக நூலாகவே விவரிக்கின்றான் கண்ணன்.

பக்தியோகம்

இதைப்பேசும்போது கண்ணன் தன்னை ஆண்டவனாகவே வைத்துப்பேசுகிறான். ‘எல்லாம் வல்ல இறைவன் நான். என்னை நம்பு. நீயாகச்செய்வது ஒன்றுமே இல்லை. என்னையன்றி ஓரணுவும் அசையாது.’ 11 வது அத்தியாயத்தில் தன் விசுவ ரூபத்தைக் காட்டிவிட்டு கண்ணன் சொல்கிறான்: ‘இவர்களெல்லாம் என்னால் ஏற்கனவே கொல்லப்பட்டவர்களே. நீ என் கருவி மட்டும் தான்.’ (11–33). ‘உன் செயல்களை யெல்லாம் எனக்காகச் செய். இவ்வுலகிலும் சரி, அவ்வுலகிலும் சரி. நான் உன்னுடன் இருப்பேன்.’. இப்படிப் போகிறது இந்த வாதம். இது எல்லாம் ஈசன் செயல் என்ற பக்திப் போர்வையை ஆதாரமாகக் கொண்டு எடுத்தாளப்பட்ட வாதம்.

பிரகிருதி தான் செய்கிறது

ஈசனும் செயலாளியல்ல. பிரகிருதி தான் செய்கிறது. ‘பிரகிருதி’ என்பது மனிதனின் கூடவே பிறந்த சுபாவம். ‘அகங்காரத்தினால் நீ செய்வதாக நினைத்துக்கொண்டு நான் சொல்வதைக் கேளாமல் செயற்படுவாயானால், அழிந்து போவாய்’ (18–58). ‘அகங்காரத்தின் மயக்கத்தினால் நீ போரிட மாட்டேன் என்று நினைப்பது வெற்றுத் தீர்மானம். அது நடக்காது. உன் பிரகிருதி உன்னை அப்படிச் செய்ய விடாது’ (18 – 59). ‘எந்தக் காரியத்தைச் செய்ய மாட்டேன் என்று நீ பின்வாங்குகிறயோ அதையே செய்யும்படி உன் பிரகிருதி (சுபாவம்) உன்னைக் கட்டாயப்படுத்தும்.’ (18-60). இதுதான் பிரகிருதியை ஆதாரமாகக்கொண்டு தத்துவ ரீதியில் எடுத்தாளப்பட்ட ஐந்தாவது வாதம்.

சரணாகதி என்ற முத்தாய்ப்பு

கண்ணன் கடைசியாக ‘உன் சுமையையெல்லாம் என்மேல் இறக்கி வை. தருமம், அதருமம் இரண்டுக்கும் பொறுப்பாளி நீயல்ல என்றறிந்து, என்னையே ஒரே புகலிடமாகக்கொண்டு, உன் கடமையைச்செய்.’ (18-66) என்று முத்தாய்ப்பு வைக்கிறார். இவ்வைந்து வாதங்களின் பலத்தால் தான் அர்ச்சுனன் போரிடத் தொடங்குகிறான்.

மானிட சமூகத்திற்கு கீதையின் படிப்பினை

போர் புரியமாட்டேன் என்ற அர்ச்சுனனை எப்படித் திருத்தினார் என்பதற்காக எடுத்தாளப்பட்ட ஐந்து வாதங்களைப் பிரித்துவிட்ட பின்பும் மானிடரனைவருக்கும் கண்ணனால் கூறப்பட்ட போதனைகளையும் ஐந்தாகச் சொல்லலாம். இவை ஆன்மிகத்தை நாடும் மக்களுக்கு வாழ்க்கைச் செயல் முறைகளாகவும் எக்காலத்திலும் நன்மை பயக்கும் வழிகாட்டிகளாகவும் கலங்கரை விளக்குகளாகவும் விளங்குகின்றன. இவ்வைந்தும் சேர்ந்து இந்து சமயத்தின் சாராம்சமாகவும் அமைகின்றன. அவையாவன:

பற்றுகளை அறு. அதற்காக புலனடக்கம் என்ற யோகசாதனையைச் செய்துகொண்டே இரு.
பலனில் பற்றற்று சுயதருமத்தை ஒழுகு.
ஈசனை மறக்காதே. அந்த இரண்டற்ற பரம்பொருளிடம் சுயநலமற்ற பக்தியைச் செலுத்து.
அம்மெய்ப் பொருளையே புகலிடமாகக் கொள்.
யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்கு அல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல். இதுதான் வேதங்களும் உபநிடதங்களும் இதிகாச புராணங்களும் எண்ணற்ற பெரியோர்களும் மனிதனுக்குப் புகட்டும் முடிந்த முடிவான படிப்பினை.

கீதைக்கு உரைகள் பல

ஆதி சங்கரர், இராமானுஜர், மத்வர் ஆகிய மூன்று மதாச்சாரியர்களும், மற்றும் நிம்பர்க்கர், வல்லபர், ஞானேசுவரர் ஆகியவர்களும் எழுதிய பண்டைய உரைகளே மற்ற பல உரைகளுக்கு வழிகாட்டிகளாக அமைந்தன. இருபதாவது நூற்றாண்டில் சுவாமி சின்மயானந்தா, பக்திவேதாந்த ஸ்வாமி, எஸ். ராதாகிருஷ்ணன், சுவாமி சிவானந்தர், சுவாமி அரவிந்தர், மகாத்மா காந்தி, ஆச்சார்யா வினோபாவே, அன்னி பெசண்ட் அம்மையார், சுவாமி சித்பவானந்தர் யாவரும் இன்னும் பலரும் சிறந்த உரை இயற்றியிருக்கின்றனர். அநேகமாக உலகத்திலுள்ள எல்லா மொழிகளிலும் கீதை மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.

இன்னும் மற்ற கீதைகள்

கீதை என்னும் சொல் பாடப்பட்டது அல்லது உபதேசிக்கப்பட்டது என்ற பொருள் கொண்டது. கண்ணன் அர்ஜுனனுக்கு போர்க்களத்தில் உபதேசித்த பகவத்கீதையைத் தவிர தத்துவத்தை எளிதில் எடுத்துக் கூறுகின்ற் இன்னும் பல கீதைகள் உள்ளன. அவையாவன:

அவதூத கீதை
உத்தர கீதை
பிக்ஷு கீதை
அஷ்டாவக்ர கீதை
ராம கீதை
சுருதி கீதை
குரு கீதை


No comments:

Post a Comment