Wednesday, January 20, 2010

உயிரித் தொழில்நுட்பவியல் (Biotechnology) கல்வி



முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


மேல்நிலைக் கல்வி, மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் மேற்கொண்டு என்ன படிப்பது என்று திகைத்துக் கொண்டிருக்குக்கும் நேரமிது; மருத்துவம், தகவல் தொழில் நுட்பவியல், பொறியியல், வேளாண்மை, பட்ட மேற்படிப்பு இப்படி ஏதாவது ஒன்றுக்கு நுழைவுத் தேர்வு எழுத முயற்சி செய்து கொண்டுள்ளனர். மேற்கூறிய துறைகள் மட்டுமின்றி வேலைவாய்ப்பு மிகுந்த பல கல்வித் துறைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் உயிரித் தொழில்நுட்பவியல் கல்வி. இதனைப்பற்றிய விவரங்களையும், இத்துறையில் வேலை வாய்ப்பு எப்படி என்பது பற்றியும், இக்கல்வியை வழங்கும் கல்விக்கூடங்கள் எவை என்பது பற்றியும், இக்கட்டுரை சில தகவல்களை வழங்குகிறது.
உயிரித் தொழில்நுட்பவியல் என்பது மிக விரைந்து வளர்ந்து வருகிகிற ஒரு துறையாகும்; இதன் தாக்கம் வாழ்வின் அனைத்துப் பகுதியிலும் உணரப்படுகிறதெனில் மிகையன்று. வேளான்மைப் பொருள்களின் உற்பத்தி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு முறைகள், மருந்துப் பொருள்களின் தயாரிப்பு இப்படி அனைத்திலும் உயிரித் தொழில்நுட்பத்தின் பங்கு விரைவாக வளர்ந்து வருகிறதெனலாம். எனவே உலகம் முழுவதிலும் வேலைவாய்ப்பு, வாணிகம், மக்கள் நவாழ்வு, பொருள் உற்பத்தி, பொருளாதாரம், தரமான மற்றும் வசதியான வாழ்க்கை ஆகிய அனைத்தும் தற்போது உயிரித் தொழில்நுட்பத்துடன் பின்னிப் பிணைந்துள்ளன. இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளிலும் உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியும் பெருக்கமும், மேலும் இத்துறையில் அறிவியல் வல்லுநர்களின் ஈடுபாடும் இதனை உறுதிப்படுத்துகின்றன.
உலகச் சந்தையில் இன்று உயிரித்தொழில்நுட்பப் பொருள்களுக்கு மிகப்பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது; இந்நிலை ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வருகிறதெனலாம். இருபதாம் நூற்றாண்டு மின்னணு ஆண்டாக விளங்கியது போல, இருபத்தோராம் நூற்றாண்டு உயிரித் தொழில்நுட்ப ஆண்டாக விளங்கப்போகிறது என்பது அறிஞர்களின் கணிப்பு. ஸ்காட்லாந்து நாட்டு அறிவியல் மேதைகள் உயிரித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குளோனிங் முறையில் டாலி ஆட்டுக்குட்டியை உருவாக்கியபோது உலகமே வியப்பின் விளிம்பிற்குச் சென்றதை நாம் அறிவோம். மருத்துவ ஆராய்ச்சிக்காக மனிதக் கருவைக் குளோனிங் செய்வதற்கு, அண்மையில் இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளதனால் உயிரித் தொழில்நுட்பவியலுக்கு மேலும் வாய்ப்பு கூடியுள்ளதெனலாம்.
நம் நாட்டில் 1982 ஆம் ஆண்டு மைசூரில் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டில் உயிரித் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் பெரிதும் உணரப்பட்டது; இதன் விளைவாக இத்துறையில் மென்மேலும் ஆய்வுப் பணிகளை ஊக்குவிக்க, தேசிய உயிரித் தொழில்நுட்பவியல் வாரியம் (National Biotechnology Board - NBTB) ஒன்றினை நமது அரசு உருவாக்கியது. மேலும் 1986 ஆம் ஆண்டு அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ், உயிரித் தொழில்நுட்பவியல் என்ற பெயரில் ஒரு தனித் துறையே (Department of Biotechnology-DBT) தோற்றுவிக்கப்பட்டது.
உயிரித் தொழில்நுட்பவியல் என்பது பல்துறை சார்ந்த ஒரு கல்வி முறையாகும். தற்போது நம் நாட்டுக்குத் தேவைப்படும் உயிரித் தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகள், வேளாண்மை மற்றும் மருத்துவத் துறைகளில் தேவைப்படும் உயிரித்தொழில்நுட்ப அறிஞர்களை உருவாக்குவதற்கான கல்வித்திட்டமும், அதற்காக மாணவர்களைச் சேர்த்துப் பயிற்சியளிக்கும் பணியும் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உயிரித்தொழில்நுட்பக் கல்வி என்பது மனிதர்களின் மரபு வழி வந்த ஒழுக்க நெறியோடும் தொடர்புடையதெனலாம். மனித வாழ்க்கையின் இயற்கை நெறிகளுக்கு மாறாகச் செயல்பட வேண்டிய கட்டாயமும் இவ்வுயிரித்தொழில்நுட்பவியல் பயன்பாட்டின் காரணமாக ஏற்படக்கூடும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தாவரங்கள், விலங்குகள், மனித உயிர்கள் ஆகியவற்றில் உயர்ரக உயிரினங்களை உருவாக்குவதே உயிரித்தொழில்நுட்பத்தின் முக்கிய பணியாகும். உயர் ரக கோதுமை விளைச்சலைப் பெருக்கி, அதன்மூலம் பசுமைப் புரட்சியை உருவாக்கியது உயிரித்தொழில்நுட்பத்தின் பயன்பாடேயாகும்; இப்பசுமைப் புரட்சியினால் இயற்கையின் பல வேறுபாடுகளுக்கிடையில் இயற்கைச் சமநிலை குலையாது வாழும் உயிரினங்களின் உயிரிய வேற்றுமை (biodiversity) குலைந்துவிட்டதாக சுற்றுச்சூழல் வல்லுனர்கள் குற்றம் சாட்டினர். இருப்பினும் மனித குலத்துக்கு மிகுதியான நன்மை விளையும் என்கிற நிலைமையில் உயிரித்தொழில்நுட்பப் பயன்பாட்டைக் குறை கூறலாகாது என்ற கருத்தும் நிலவுகிறது. எது எப்படி இருப்பினும் மனித குலத்தின் வளர்ச்சிக்கு இத்துறையினால் அளவற்ற நன்மை உண்டாகும் என்பது மட்டும் உறுதி.
உயிரித்தொழில்நுட்பத் துறையின் முக்கிய குறிக்கோள் உறுதியான மனித குலத்தை உருவாக்குவதும், மனிதர்களின் நோயெதிர்ப்பு ஆற்றலை மிகுதிப்படுத்துவதுமேயாகும். மக்கள் நல்வாழ்வு, மருத்துவத்துறை, வேளாண்மை, உணவு, சுற்றுச்சூழல் ஆகிய பல்வேறு துறைகளிலும் உயிரித்தொழில்நுட்பத் துறையின் தாக்கம் அடுத்த இருபதாண்டுகளில் மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் புது வகையான மருந்துகளைக் கண்டுபிடித்தல், புதுவகையான நோய் அறியும் முறைகள், உகந்த வேளாண்மை முறைகள், பயிர் விளைச்சல்கள், தகுந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகள் ஆகிய அனைத்திலும் உயிரித்தொழில்நுட்பத்தின் தாக்கம் அமையவிருக்கிறது. இதன் விளைவாக மனித வாழ்க்கையின் தரம் உயர்வதோடு, மனித ஆயுளும் மிகுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நினைத்தாலே இனிக்கும் எதிர்பார்ப்புகள்தான்!
ஆனால் இத்துறைக்குத் தேவையான மனித வளத்தை, அதாவது நிபுணர்களையும், வல்லுனர்களையும் உருவாக்க வேண்டுமல்லவா ? உயிரித்தொழில்நுட்பத் துறை இதற்காகப் பல கல்வித்திட்டங்களைத் தீட்டியுள்ளது. உயிரித்தொழில்நுட்பத் துறையில் இரண்டாண்டு பட்ட மேற்படிப்பை (Two year M.Sc.) மேற்கொள்ள, புது தில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்களைத் தேர்வு செய்கிறது. இந்தப் பட்டமேற்படிப்பில் சேர்வதற்கு உயிரியல், இயற்பியல், வேதியியல், வேளாண்மை, பொறியியல், மருத்துவவியல், மருந்தாளுநரியல் ஆகிய ஏதேனும் ஒரு துறையில், குறைந்த அளவு 55% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்தியாவில் 20 பல்கலைக் கழகங்களில் இந்த இரண்டாண்டு M.Sc. பட்ட மேற்படிப்பு அளிக்கப்படுகிறது.
உயிரித்தொழில்நுட்பத் துறையில் மேலும் சில பட்டமேற்படிப்புகளும் அளிக்கப்படுகின்றன. அவற்றுள் சில பின்வருமாறு: எம்.டெக் (உயிரித் தொழிநுட்பவியல்), எம். எஸ்சி (வேளாண்மை உயிரித் தொழில்நுட்பவியல்), எம்.வி.எஸ்சி (விலங்கியல் உயிரித்தொழில்நுட்பவியல்). இவற்றில் சேர்வதற்கான அடிப்படைக் கல்வித்தகுதிகள், குறிப்பிட்ட பாடங்களில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்; அதாவது, வேளாண்மை, தோட்டக்கலையியல், வேளாண்மைப் பொறியியல், விலங்கியல் போன்றவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இவற்றிற்கான விளம்பரங்கள் மார்ச்சு/ஏப்பிரல் மாதங்களில் முக்கிய செய்திதாள்களில் வருகின்றன; நுழைவுத் தேர்வுகள் மே, ஜூன் மாதங்களில் நடைபெறும். மேலும் கரக்பூர், தில்லி, மும்பை ஆகிய நகரங்களிலுள்ள ஐ.ஐ.டி. நிறுவனங்களும், ஆக்ரா, ராஞ்சி, ஜாதவ்பூர், கொல்கொத்தா பல்கலைக்கழகங்களும் மேற்கூறிய உயிரித்தொழில்நுட்பப் பட்டமேற்படிப்பை வழங்குகின்றன. இந்நிறுவனங்கள் பாடத்திட்டங்கள், அனுமதி முறைகள், சேர்க்கை முறைகள் ஆகியவற்றில் தன்னுரிமை பெற்று விளங்குபவை.
அடுத்து பெரும்பாலான மாணவர்கள் பட்டமேற்படிப்பை முடித்தவுடன், உயிரித்தொழில்நுட்பத் துறையில் ஆய்வு மேற்கொண்டு பி.எச்டி. பட்டம் பெற விரும்புகின்றனர் என்பதும், இதற்காகப் பலர் வெளிநாடு செல்கின்றனர் என்பதும் உண்மையே. ஆனால் இப்போது இந்தியாவிலேயே ஆய்வு செய்வதற்குத் தேவையான எல்லா வசதிகளும் கிடைக்கின்றன என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்; சுமார் 7 இடங்களில் நிறுவப்பட்டுள்ள தாவர மூலக்கூறு உயிரியல் மையங்கள் (Centre for Plant Molecular Biology), இந்திய வேளாண்மை ஆய்வு நிறுவனம் (Indian Council for Agricultural Research), அறிவியல் மற்றும் தொழில் ஆய்வு நிறுவனம் (Council of Scientific and Industrial Research) ஆகியவற்றில் உயிரித் தொழில்நுட்பத் துறையில் ஆய்வு செய்வதற்குத் தேவையான வசதிகள் உலகத்தரத்திற்கு இணையாகக் கிடைக்கின்றன. இவற்றைத்தவிர, ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சார்பாக மரபுப் பொறியியல் மற்றும் உயிரித்தொழில்நுட்பவியலுக்கான பன்னாட்டு மையங்கள் (International Centre for Genetic Engineering and Biotechnology)இரு இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. ஒன்று இத்தாலி நாட்டிலும் மற்றொன்று புது தில்லியிலும் அமைந்துள்ளன; இங்கும் ஆய்வு செய்வதற்கான வசதிகள் உண்டு. இவை தவிர தனியார் நிறுவனங்கள் சிலவும் உயிரித்தொழில்நுட்ப ஆய்வுக்கான வசதிகளை அளிக்கின்றன. அடுத்து உயிரித்தொழில்நுட்பக் கல்வி கற்றோருக்கான வேலை வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறைகளிலும்,. மருந்து உற்பத்தி மற்றும் ஆராய்ச்சித் துறைகளிலும், வேளாண்மை, உணவு உற்பத்தி மற்றும் பதப்படுத்தல் ஆகிய துறைகளிலும் மிகுந்த வேலை வாய்ப்பு உள்ளது என்பது மிகைப்படுத்தப்படாத உண்மை. கிளாக்ஸோ, தாபர் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களில் ஏராளமான வேலை வாய்ப்பு, உயிரித்தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் காத்திருக்கிறது. உயிரித்தொழில் நுட்பம் பல்வேறு பரிமாணங்களில் வளர்ந்து வருகிற, சமுதாயத்திற்கு பல்வேறு வகைகளில் பயனளிக்கப்போகிற மிகப்பெரிய துறையாகும். உயிரித்தொழில்நுட்பத்துறையில் ஈடுபட விரும்புவோர்க்குத் தேவையான தகுதிகள் இரண்டு; ஒன்று தணியாத ஆர்வம், மற்றொன்று கூர்மையான நுண்ணறிவு. எனவே தகுதியும், திறமையும் வாய்ந்தவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு இத்துறையில் காத்திருக்கிறது என்பதில் எவ்வித ஐயமும் தேவையில்லை.
உயிரித்தொழில்நுட்ப பட்ட மேற்படிப்பை வழங்கும் சில நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்கள்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
ஜி.பி.பந்த் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், பந்த் நகர், நைனிடால்
எம்.எஸ்.பல்கலைக்கழகம், பரோடா
பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்
கோவா பல்கலைக்கழகம், கோவா
புதுவைப் பல்கலைக்கழகம், புதுவை
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
இந்திரா காந்தி வேளாண்மைப் பல்கலைக்கழகம், ராய்பூர்
குல்பர்கா பல்கலைக்கழகம், குல்பர்கா, கர்நாடகா
குஜராத் பல்கலைக்கழகம், அகமதாபாத்
பூனா பல்கலைக்கழகம், பூனே
அலகாபாத் பல்கலைக்கழகம், அலகாபாத்
ஹைதராபாத் பல்கலைக்கழகம், ஹைதராபாத்
மராத்வாடா வேளாண்மைப் பல்கலைக்கழகம், பர்பானி
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், புது தில்லி
பஞ்சாபி பல்கலைக்கழகம், பாட்டியாலா
ஜம்மு பல்கலைக்கழகம், ஜம்மு
கோழிக்கோடு பல்கலைக்கழகம், கேரளா
தேஜ்பூர் பல்கலைக்கழகம், தேஜ்பூர், அஸ்ஸாம்
குருநானக் பல்கலைக்கழகம், அமிதசரஸ்
***
முனைவர் இரா விஜயராகவன் Dr R Vijayaraghavan
பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி BTech MIE MA MEd PhD
மொழிக் கல்வித்துறை (தமிழ்) Dept. of Language Education (Tamil)
வட்டாரக் கல்வியியல் நிறுவனம் Regional Institute of Education (NCERT)
மைசூர் 570006 Mysore 570006


Copyright:Thinnai.com 

-

No comments:

Post a Comment