Friday, January 29, 2010

ஆப்ரிக்காவிலிருந்து பரவிய ஆதிமனிதன்

ஆதி மனிதன் ஆப்பிரிக்காவிலிருந்து பிற கண்டங்களுக்கு பரவியது எப்போது, எப்படி?



ஆதிமனிதன் ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் தோன்றினான் என்பது அனைத்து ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்ளும் விடயம். ஆனால், அந்த ஆதிமனிதன் பிற கண்டங்களுக்கு முதன்முதலில் பரவியது எவ்வாறு, எப்போது என்பதில்தான் சர்ச்சை.

ஆப்பிரிக்காவிலிருந்து மனித இனம் முதலில் சென்றது நிலவழியிலா, கடல்வழியிலா என்ற கேள்விக்கு இந்திய விஞ்ஞானிகள் கடல்வழிதான் என்ற பதிலை முன்வைத்திருக்கிறார்கள்.

அதாவது, சுமார் 70,000 ஆண்டுகள் முன்பாக, மனித இனத்தவர், ஆப்பிரிக்காவிலிருந்து கடல்வழியாகப் புறப்பட்டு, இந்தியாவின் மேற்குக் கடற்கரை வழியாகச் சென்று, பிறகு வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் தீவுக்கூட்டத்தை இவர்கள் அடைந்தார்கள் என்று இந்திய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

தற்போது அந்தமான் தீவுகளில் வசித்துவரும் பழங்குடியினரின் மரபணுக்களை ஆய்வு செய்ததில் இந்த முடிவை உறுதிசெய்திருப்பதாக இந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.




இந்த முடிவை எட்ட, இந்த அந்தமான் பழங்குடியினரின் மரபணுக்களை ஆய்வு செய்திருக்கிறார்கள், அதாவது, இதே காலகட்டத்தில் ஆசியக்கண்டத்தில் உள்ள மற்ற இனத்தவரின் மரபணுக்கள் அடைந்த மாற்றங்களை விட, அந்தமான் தீவுக்கூட்டத்தில் தனித்தே வசித்துவரும் பழங்குடியினரின் மரபணுக்கள் குறைந்த அளவு மாற்றங்களைப் பெற்றிருக்கிறது என்பது இங்கே முக்கியம்.

எனவேதான் இவர்களின் மரபணுக்கள் – அவற்றில் உள்ள எக்ஸ் மற்றும் ஒய் குரோமசோம் பகுதிகள், பிறகு மிட்டோகோண்ட்ரியா என்று அழைக்கப்படும் மரபணுத் தொடர் மைய மாற்றங்கள் ஆகியவற்றை ஆராய்ந்திருக்கிறார்கள், இந்திய விஞ்ஞானிகள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த முடிவை ஒரு யூகமாக
எட்டியவர்கள், ஹைதராபாதில் இயங்கிவரும் இந்திய மூலக்கூற்று உயிரியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள். அப்போதே, இந்த விஞ்ஞானிகள் குழுவில் ஒருவராக இயங்கிவருகிற தங்கராஜ் அவர்களைத் தமிழோசை செவ்வி கண்டிருந்தது.

இப்போது மேலதிக ஆராய்ச்சியின் மூலம் இந்த முடிவு உறுதியாகியிருக்கிறது, அது மட்டுமல்ல, இங்கே ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் வின்சன்ட் மக்காலே என்ற விஞ்ஞானியும் தம்முடைய ஆராய்ச்சியின் மூலம் இதைப்போன்ற ஒரு முடிவை எட்டியிருக்கிறார். அவர் ஆய்வு செய்தது, ஆஸ்திரேலியா, மலேசியாவில் உள்ள பழங்குடியினர் பற்றி.

இந்த இரண்டு ஆராய்ச்சி முடிவுகளும் ஸயன்ஸ் என்ற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியாகி இருக்கின்றன. இதுபற்றி ஹைதாரபாத் மரபணு விஞ்ஞானி தங்கராஜ் அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் விளக்குகிறார்.

No comments:

Post a Comment