Friday, January 1, 2010

திருக்குறள்


திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. இது அடிப்படையில் ஒரு ஒப்பரிய வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழத் தேவையான மாறா அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்கும் பேரழகுடைய இலக்கியப் படைப்பு.திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.


பழந்தமிழ் நூல்வரிசையில் திருக்குறள்


பழந்தமிழ் நூல்களில் நான்கு பெரும் பகுப்புக்கள் உள்ளன.1. எட்டுத்தொகை,பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல்கணக்கு 2. பதினெண்கீழ்க்கணக்கு 3. ஐம்பெருங்காப்பியங்கள் 4. ஐஞ்சிறு காப்பியங்கள் ஆகியவை அவை. அவற்றில், பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு திருக்குறள் விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களை தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது."பாயிரம்" என்னும் பகுதியுடன் முதலில் "அறத்துப்பால்" வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்" ஆகிய அதிகாரங்கள். அடுத்துவரும் "இல்லறவியல்" என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது. அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலி"ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.


"அகர முதல வெழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே யுலகு...." என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,"ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம்கூடி முயங்கப்பெறின்" என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார் திருவள்ளுவர்.வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவுது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது.பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப் படுவது டாக்டர் மு.வரதராசனார் அவர்களது உரை. உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறளின் பால்களும், இயல்களும், அதிகாரங்களும்
திருக்குறளின் 1330 குறள்களும் மூன்று பால்களின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. அவை,


அறத்துப்பால் :


பாயிரம்
இல்லறவியல்
துறவறவியல்
ஊழியல்


பொருட்பால் :


அரசியல்
அமைச்சியல்
அரணியல்
கூழியல்
படையியல்
நட்பியல்
குடியியல்


காமத்துப்பால் :


களவியல்
கற்பியல்

No comments:

Post a Comment