Friday, January 29, 2010

தமிழர் வரலாறு

தமிழரின் தோற்றம், பரவல் பற்றியும், அரசியல், பண்பாட்டு, தொழில்நுட்ப வரலாறு பற்றியும் தமிழ் வரலாறு கட்டுரை விபரிக்கும்.


தமிழர் தோற்றம் பற்றி இரு கருதுகோள்கள் உண்டு. பழந்தமிழர் தென் இந்தியாவின் ஆதிக்குடிகள் என்பது ஒரு கருதுகோள். தமிழர் மத்திய ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். எப்படி இருப்பினும் தமிழர் இனம் தொன்மையான மக்கள் இனங்களில் ஒன்று.

தமிழர்களின் தோற்றம் மற்ற திராவிடர்களைப் போலவே இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் அவர்கள் கி. மு. 6000-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்று தொல்லியல் மற்றும் மரபியல் ஆய்வுகள் கருதுகின்றன. (கேட்கில் 1997). பண்டைய ஈரானின் இலாமைட் மக்களுடன் தமிழர்கள் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்டாலும் அதனை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லை. சிந்து சமவெளி நாகரிக மக்கள் தமிழர்களோ அல்லது திராவிடர்களோ தான் (உதா. பர்போலா 1974; 2003) என்னும் கருத்தும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.


தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் குறிப்பாக ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கி. மு. 1000-ஆம் ஆண்டு காலத்து புதைக்கப்பட்ட மண்பாண்டங்கள் தற்காலத் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்கு சான்றாக விளங்குகின்றன. அப்புதை பொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. இவ்விடங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் குறைந்தது கி. மு. 500 ஆண்டைச் சேர்ந்தவையாகும்.

(தி ஹிண்டு, 2005)

No comments:

Post a Comment