Monday, January 11, 2010

அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில்



மூலவர்:வடுகீஸ்வரர் (பஞ்சனதீஸ்வரர்)

உற்சவர்:பஞ்சமூர்த்தி

அம்மன்/தாயார்:திரிபுரசுந்தரி

தல விருட்சம்:வன்னி

தீர்த்தம்:வாமதேவ தீர்த்தம்

ஆகமம்/பூஜை :காமீகம்

பழமை :1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் :திருவடுகூர்

ஊர் :திருவண்டார்கோயில்

மாவட்டம் : புதுச்சேரி

மாநிலம் :புதுசேரி

பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்


தேவாரப்பதிகம்


தளரும் கொடியன்னாள் தன்னோடு உடனாகிக் கிளரும் அரவுஆர்த்துக் கிளரும் முடிமேலோர் வளரும் பிறைசூடி வரிவண்டு இசைபாட ஒளிரும் வடுகூரில் ஆடும் அடிகளே.
-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 16வது தலம்.




திருவிழா:

தமிழ்வருடப் பிறப்பின்போது திருக்கல்யாணம், வைகாசிவிசாகம், சிவராத்திரி, திருக்கார்த்திகை, கந்தசஷ்டி, தைப்பூசம்.

தல சிறப்பு:

வடுகீஸ்வரர் சுயம்புலிங்கமாக இடது பக்கம் சற்றே சாய்ந்தவாறு காட்சியளிக்கிறார். லிங்கத்தின் மீது வடுக்கள் உள்ளது. இவரை மரியாதை செய்யும்பொருட்டு தலையில் தலைப்பாகை அணிவித்துள்ளனர்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், கண்டமங்கலம் வழி, திருவாண்டார்கோயில் போஸ்ட், புதுச்சேரி- 605 102.

போன்: +91- 99941 90417.


பொது தகவல்:


கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்திக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி பூஜிக்கிறார்கள். பிரம்மா, சிவனை வழிபட்ட சிற்பம் இவருக்கு அருகில் இருக்கிறது.
பிரம்மாவிற்கு அருகில் ஆஞ்சநேயரும் இருப்பது விசேஷமான அமைப்பாகும். முன்மண்டபத்தில் இரண்டு நாகங்களின் மத்தியில் கிருஷ்ணர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
திருமண தோஷம் உள்ளவர்கள் இவருக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, தாலி கட்டி வழிபடுகிறார்கள். இதனால், தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.

பிரார்த்தனை:

பணிஉயர்வு கிடைக்க, ஆணவம் அழிய அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.


நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றிக்கொள்ளலாம்.




தலபெருமை:


சுவாமிக்கு முன்பு அர்த்த மண்டபத்தில் 8 தூண்கள் இருக்கிறது. அதன் அருகே நின்று தரிசனம் செய்தால் ராஜபலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருஞானசம்பந்தர் இவரை "வடுகூரில் ஆடும் அடிகளே!' என்று பதிகம் பாடியிருக்கிறார்.
அம்பாள் திரிபுரசுந்தரி லட்சுமி அம்சத்துடன் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளுக்கு "வடுகர் நாயகி' என்றும் பெயர் உண்டு. பைரவர் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். அஷ்டமி தினங்களில் சுவாமி மற்றும் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதனால் தோஷங்கள், பிணிகள் நீங்குவதாக நம்பிக்கை.
திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு சுவாமி, பைரவருக்கு தேன், கருப்பஞ்சாறு அபிஷேகம் செய்து பின் நாய்க்கு சாதம் படைத்து வழிபடுகின்றனர்.
இங்கு முருகன் இடது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் காட்சி தருகிறார். 6 முகம், 12 கரங்களில் ஆயுதங்களுடன் இருக்கும் இவரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என அருணகிரியார் திருப்புகழில் பதிகம் பாடியிருக்கிறார்.
கோஷ்டத்தில் உள்ள துர்க்கை 8 கைகளுடன், போர்க்கோலத்தில் இருக்கிறாள். வரப்பிரசாதியாக திகழும் இவளை வழிபட்டால் எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை.
இவளுக்கு இடப்புறத்தில் அர்த்தநாரீஸ்வரர், வலது புறம் பிரதோஷநாயனார் ஆகியோர் இருக்கின்றனர். இத்தலத்தின் தலவிநாயகரின் திருநாமம் வலம்புரி விநாயகர்.

தல வரலாறு:


படைப்புத்தொழிலுக்கு அதிபதியான பிரம்மா, சிவனை போலவே ஐந்து தலைகளை கொண்டவராக இருந்தார். இதனால், அவருக்கு மனதில் அகம்பாவம் உண்டானது. அவரது கர்வத்தை அழிக்க எண்ணினார் சிவன்.
ஒருசமயம் பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி, அவரை சிவன் என நினைத்து கணவனுக்கு செய்யும் மரியாதைகளைச் செய்தார். பிரம்மா மறுக்காமல் இருந்து விட்டார். இதைக்கண்டு கோபம் அடைந்த சிவன், பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கொய்து விட்டார்.
ஆணவம் அழியப்பெற்ற பிரம்மா, சிவனை வணங்கி தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். சிவன் அவருக்கு மன்னித்து அருள் செய்தார். இந்த வரலாறு இந்த தலத்தில் நிகழ்ந்ததாக கருதப்படுகிறது. பிரம்மாவின் தலையை எடுத்த சிவன் இங்கு, "வடுகீஸ்வரராக' அருளுகிறார்.

சிறப்பம்சம்:


அதிசயத்தின் அடிப்படையில்: வடுகீஸ்வரர் சுயம்புலிங்கமாக இடது பக்கம் சற்றே சாய்ந்தவாறு காட்சியளிக்கிறார். லிங்கத்தின் மீது வடுக்கள் உள்ளது. இவரை மரியாதை செய்யும்பொருட்டு தலையில் தலைப்பாகை அணிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment