புது டெல்லி: தொழில்நுட்ப பயன்பாடு அதிகம் உள்ள ஒரு புதிய செல்பேசியை வாங்கி பழைய செல்பேசியை தூக்கி எறிவது என்பது தற்போதைய நாகரீகத்தின் ஒரு ஆடம்பரமாக விளங்குகிறது. ஆனால் தூக்கி எறியப்பட்ட பயன்படாத செல்பேசிகள் சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் அடுத்த ஒரு பூதாகாரம் என்று ஆய்வு நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
2012ஆம் ஆண்டு 8,000 டன்கள் செல்பேசிக் குப்பைகள் சேரும் என்று டெலாய்ட் என்ற உலகளாவிய ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் எச்சரித்துள்ளது.
தூக்கி எறியப்படும் செல்பேசிகள் சுற்றுச்சூழலை நாசம் செய்யும் ஒரு அசுர சக்தியாக உருவெடுத்து வருகிறது என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
பழைய செல்பேசிகளை பழுது பார்த்து வைத்துக் கொள்ளும் வழக்கம் ஏறக்குறைய இல்லவேயில்லை என்றே கூறிவிடலாம். தொழில் நுட்ப நுணுக்கங்களை அதிகரித்து புதிய செல்பேசிகள் நாளுக்கு நாள் அறிமுகம் செய்யப்படும் வேளையில் பழைய செல்பேசிகள் குப்பையாக மாறுகின்றன.
"முறையான மறு சுழற்சி, மறு பயன்பாடு திட்டங்கள் இல்லாததால் நச்சுத் தன்மையுடைய 8000 டன் செல்பேசி குப்பைகள் 2012ஆம் ஆண்டு ஆங்காங்கே கொட்டப்பட்டு சுற்றுச்சூழலை கடும் பாதிப்பிற்குள்ளாக்கும்". என்று டெலாய்ட் ஆலோசனை நிறுவனந்தின் மண்டல நிர்வாக இயக்குனர் பராக் சய்கோங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பயனற்ற செல்பேசிகளை ஆங்காங்கே நாம் கொட்டும்போது அதிலிருந்து வெளிப்படும் நச்சு நிலத்தடி நீரினுள் ஊடுருவும் அபாயமுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
உலகிலேயே செல்பேசி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியா வெகு வேகமாக முன்னேறி வரும் நிலையில் செல்பேசிக் குப்பைகளை சரிவர அகற்றுவது குறித்த மேலாண்மை அரசு தரப்பிலிருந்து தேவைப்படுகிறது. இல்லையெனில் இது நாட்டின் சுற்றுச்சூழலை பாதிக்கும் என்று அவர் அபாய மணி ஒலித்துள்ளார்.
ஆசியா, ஐரோப்பா, தென் அமெரிக்க நாடுகளில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பழைய செல்பேசிகளை மாற்றுகின்றனர். இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 100 மில்லியன் செல்பேசிகள் பயனற்ற குப்பைகளாய் மாறுகின்றன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment