Tuesday, August 10, 2010

உலகளாவிய ரீதியில் கொத்துக்குண்டுகளுக்கு தடை: உடன்படிக்கை அமல்

உலகளாவிய ரீதியில் கொத்துக் குண்டுகளை (கிளஸ்டர்) தடைசெய்யும் புதிய சர்வதேச உடன்படிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கொத்துக்குண்டுகளை சேமித்துவைத்தல், அவற்றை பயன்படுத்துதல் மற்றும் பரிமாற்றம் செய்தல் போன்றவை முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், ஏற்கனவே உலகளவிலுள்ள கொத்துக்குண்டுகள் அழிக்கப்படவேண்டுமெனவும் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டில் அயர்லாந்தில் இடம்பெற்ற மாநாடொன்றிலேயே கொத்து குண்டுகளை தடைசெய்வதற்குரிய அங்கீகாரம் நிறைவேற்றப்பட்டது.

இம்மாநாட்டில் கலந்துகொண்ட 108 நாடுகள், கொத்து குண்டுகளை தடைசெய்யும் உடன்படிக்கைக்கு ஆதரவாக வாக்களிததிருந்த நிலையில் அதில் 38 நாடுகள் கொத்துக் குண்டுகளை அழிக்க உறுதிதெரிவித்திருந்தன.

கொத்துக்குண்டுகளை தடைசெய்யும் உடன்படிக்கை அமல்படுத்தப்பட்டிருப்பதானது, மிகமுக்கியமான ஆயுதக் களைவு என்றும், கடந்த பத்தாண்டு காலத்தில் எட்டப்பட்டுள்ள மிக முக்கியமான மனிதாபிமான உடன்படிக்கை இது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நீதிக்குப் புறம்பானதும், கொடூரமானதுமான ஆயுதம் ஒன்றிற்கு எதிராக மனிதநேயத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி இது என கொத்துக் குண்டுகள் கூட்டமைப்பின் இணைப்பாளர் தாமஸ் நாஷ் தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கை அமல்படுத்தல்பட்டிருப்பதானது உலகளாவிய ஆயுதக் களைவிலும் மனித நேய, நிகழ்ச்சிநிரலிலும் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முன்னேற்றமென ஐ.நா.செயலாளர் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உலகளாவிய ரீதியில் பாதுகாப்பற்ற நிலைமையை ஒழிப்பதற்கும், இக்கொத்துக் குண்டுகளால் பாதிப்புக்குள்ளாகும், குறிப்பாக பொதுமக்களையும், சிறுவர்களையும் பாதுகாக்கவும் உதவுமெனவும் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்த உடன்படிக்கையில் உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment