Tuesday, August 10, 2010

உலகெங்கும் வேகமாக உருகி வரும் பனிமலைகள்

திபெத், இமாலயம், கிளிமஞ்சாரோ, கென்யா, தென் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றில் உள்ள பனிமலைகள் மிக விரைவாக உருகிவருகின்றன என்று சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.



திபெத்தில் உள்ள மலைத்தொடர்களில் உள்ள பனிச் சிகரங்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக உருகி வருவதாக சீன சுற்றுச் சூழல் ஆய்வாளர்களும், இயக்கத்தினரும் கவலை வெளியிட்டதோடு, எவ்வளவு வேகமாக உருகி வருகின்றன என்பதை ஆவணப்படுத்தியுள்ளனர்.

புவி வெப்பமடைதலால் அதிகரித்து வரும் தினசரி வெப்ப நிலை குறித்த எச்சரிக்கைகளை இந்தியாவும் சீனாவும் இதுவரை வெறும் எச்சரிக்கைகளாக மட்டுமே எடுத்து‌க் கொண்டுள்ளன. ஆனால் கடந்த சில மாதங்களாக சீன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திபெத் பனிச் சிகரங்கள் வெகு வேகமாக உருகி வருவது நாம் நினைப்பது போல் சாதாரண விஷயமல்ல என்பதை கவலையுடன் ஆவணப்படுத்தி வருகின்றனர்.

இமாலய மலை உட்பட திபெத் பனி மலைகள் உருகுவதன் அளவு அதிகரித்திருபதாலும்தான் இமாலயத்திலிருந்து உறுபத்தியாகும் நதிகளில் அபாயகரமான வெள்ளம் ஏற்படுவதாக சீன ஆய்வு எச்சரித்துள்ளது.

குவிங்காய்-திபெத் மலைத்தொடர்களில் பனி உருகுவது அதிகரித்து வருவதால் ஏரிகள் பரப்பு விரிவடைவதும் புதிய ஏரிகள் உருவாவதும் நிகழ்கிறது. இதனால் நதிகளில் கடும் வெள்ளங்கள் ஏற்படுகின்றன. ஆனால் நீண்ட கால விளைவாக நதிகள் வற்றி விடும் அபாயம் உள்ளது. தற்போது ஜீவ நதிகளாக உள்ள கங்கை, சிந்து போன்ற வற்றாத ஜீவ நதிகள் ஒரு சில பருவ நிலைகளில் மட்டும் தண்ணீர் இருக்கும் நதிகளாக மாறி விடும் அபாயமும் உள்ளது.



தற்போதைய புவி வெப்பமடைதல் அளவுகளின் படி இமாலய பனி மலைகள் இன்னும் 30 ஆண்டுகளில் பனியற்ற ஒரு பிரதேசமாக மாறி விடும் என்று வானிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசுக் குழு தெரிவித்துள்ளது. திபெத் வானிலை மாற்ற கண்காணிப்பு சேவை அமைப்பு சமீபமாக வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பனிமலைகளில் ஆண்டொன்றிற்கு 131.4 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பிற்கு பனி உருகிவருவதாக தெரிவித்துள்ளது. பனிப் படலங்கள் ஒவ்வொரு ஆண்டும் 350 மீட்டர்கள் குறைந்து கொண்டே வருகின்றன என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தற்போது திபெத் பகுதியில் சீனாவின் எந்த ஒரு பகுதியைக் காட்டிலும் வெப்ப அளவு 4 மடங்கு அதிகரித்துள்ளது என்று ஆய்வாளர் குவின் தெரிவிக்கிறார். இதனால் இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வறட்சி ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

பொதுவாகவே பனிச் சிகரங்கள் கடந்த 40 ஆண்டுகளில் 7% குறைந்துள்ளதாக சீன விஞ்ஞான கழகம் தெரிவித்துள்ளது. செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இந்த விஞ்ஞானக் கழகத்தின் இயக்குனர் யாவோ டான்டாங் அளித்துள்ள பேட்டியில் "கடந்த 2000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு திபெத் பனிச் சிகரங்களில் வெப்பமடைதலின் தாக்கம் அதிகரித்துள்ளது" என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் குவிங்காய் பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.



வெள்ளை யானை போல் மலைகள் என்று ஒரு சிறுகதை மூலம் டான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ பனிமலைத் தொடரை வர்ணித்தார் அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே.

ஆனால் இந்த பனிமலை வெகு வேகமாக உருகி வருவதாக மற்றொரு ஆய்வு தெரிவித்துள்ளது.

1912ஆம் ஆண்டில் கிளிமஞ்சாரோ பனிச்சிகரங்களில் இருந்த பனியின் அளவு 2007ஆம் ஆண்டிற்குள் 85% குறைந்துள்ளது.

இதே போன்ற மாற்றங்கள் கென்யாவில் உள்ள பனிமலைகளிலும், ஆப்பிரிக்காவில் உள்ள ருவென்ஸோரி பனிச்சிகரங்களிலும் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் எச்சரித்துள்ளன. தென் அமெரிக்க நாடுகளில் உள்ள அடர்ந்த பனிச்சிகரங்களுக்கும் இதே கதி ஏற்பட்டுள்ளது.

கிளிமஞ்சாரோவை பொறுத்த வரை 2000ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை மலைப்பகுதியின் வடக்கில் உள்ள பனியின் அளவு 1.9 மீட்டர்களும், தெற்கு பகுதியில் 5.1 மீட்டர்களும் உருகியுள்ளது என்று ஒஹியோ பலகலைக் கழக ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment