மும்பை : "அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகள், தங்கள் தாய் நாட்டுக்கு திரும்பிச் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், எதிர்கால விண்வெளி திட்டப் பணிகளுக்கு வெளிநாட்டு விஞ்ஞானிகளை சார்ந்து இருக்காத சூழ்நிலையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்'என, "நாசா' அதிகாரி சார்லஸ் போல்டன் கூறியுள்ளார்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான "நாசா'வில், இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். செவ்வாய் கிரக ஆராய்ச்சி உள்ளிட்ட அமெரிக்காவின் பல முக்கியமான விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களில், இவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சமீபகாலமாக இவர்கள், நாசாவில் இருந்து வெளியேறி, இந்தியாவுக்கு திரும்புவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, அமெரிக் காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின், இந்திய விஞ்ஞானிகள் "நாசா'வில் பணியாற்ற தயக்கம் காட்டுகின்றனர்.
இது தொடர்பாக "நாசா'நிர்வாக அதிகாரி சார்லஸ் போல்டன் சமீபத்தில் கூறியதாவது:
நாசாவில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகள்,தற்போது அமெரிக்காவில் இருந்து வெளியேற விரும்புகின்றனர். அமெரிக்க விண்வெளி திட்டம் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஏராளமான இந்திய விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர். இந்திய விஞ்ஞானிகள் வெளியேறுவதால், அமெரிக்க திட்டங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம். இதனால், எதிர்காலத்தில் அமெரிக்காவின் விண்வெளி திட்டங்களுக்கு வெளிநாட்டு விஞ்ஞானிகளை சார்ந்திருக்காத சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கிறோம். அமெரிக்காவிலேயே அதிக விஞ்ஞானிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.இந்திய விண்வெளி மையமான "இஸ்ரோ'சமீபகாலமாக அபார முன்னேற்றம் அடைந்துள்ளது.
சந்திரயான் திட்டத்தில் கிடைத்த வெற்றி காரணமாக, நாசாவில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகள், தங்கள் சொந்த நாட்டுக்கு சென்று, இஸ்ரோவில் பணியாற்ற விரும்புகின்றனர். மேலும், அமெரிக்காவின் பரபரப்பான வாழ்க்கையும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் தங்கள் நாட்டின் மதிப்பை உயர்த்த வேண்டும் என, அவர்கள் விரும்புகின்றனர்.இவ்வாறு சார்லஸ் போல்டன் கூறினார்.
Dinamalar Publications
No comments:
Post a Comment