Friday, October 1, 2010

காலத்தை வென்ற கலைக்கோயில்தஞ்சைப் பெரியகோயில்
தஞ்சைப் பெரியகோயில்
பெருவுடையார் கோயில், ராஜ ராஜேஸ்வரம், பிரகதீஸ்வரர் ஆலயம் என்றெல்லாம் அழைக்கப்படும் தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன.
தென் இந்தியாவை ஆண்ட மிகவும் சக்தி வாய்ந்த அரசவம்சமான சோழர்களின் வலிமையையும், நாட்டின் வளத்தையும், கலை நயத்தையும் காலத்தை கடந்து பறைசாற்றும் சின்னமாக இருக்கிறது இந்தக் கற்கோயில்.

இந்தக் கோயில் 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது என்பது உறுதியாகத் தெரிந்தாலும் கோயிலை கட்டும் பணியை ராஜ ராஜன் எப்போது ஆரம்பித்தான் என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை என்று கூறுகிறார் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் ஆர் நாகசாமி.
இக் கோயில் முழுவதும் பாறங்கற்களால் கட்டப்பட்டது. கற்களை தேவைப்படும் அளவுக்கு செதுக்கி ஒன்றன் மேல் மற்றொன்றை பொருத்தி இக் கோபுரம் அமைக்கப்பட்டது. கம்பீரமாக 60 மீட்டர் உயரத்துக்கு எழுந்து நிற்கும் 13 அடுக்குகளைக் கொண்ட இக் கோபுரத்தின் உட் பகுதி வெற்றிடமாக விடப்பட்டுள்ளது. 240 மீட்டர் நீளமும் 120 மீட்டர் அகலமும் கொண்ட இக்கோயிலின் பிரதான தெய்வமாக இருக்கும் சிவலிங்கம் 5 மீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்டது, நந்தியும் மிகப் பெரியது.
அக்காலத்தில் இந்தியாவின் உயரமான கட்டிடமாக இது இருந்தது என்று கூறும் ஆய்வாளர்கள், கோபுரத்தின் சிகரம் உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே மட்டுப்பட்டுத்தப்பட்ட அளவில் சுண்ணாம்புப் பூச்சு பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.

கோயிலை கட்டப் பயன்படுத்தப்பட்ட கிரனைட் வகைக் கற்கள் மிகவும் கடினமானவை. தொழில் நுட்பம் வளர்ந்த தற்காலத்தே - கற்களை உடைத்து சிற்பம் வடிப்பது கடினமான பணி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இதை நம் முன்னோர்கள் எப்படி சாதித்தனர்? என்பது பெரிய கேள்வியாகவே இருந்து வருகிறது.
உளியையும் சம்மட்டியையும் வைத்தே இக் கோயிலை கட்டியதாகக் கூறுகிறார் குமரிக் கடலில் வள்ளுவருக்கு 133 அடி சிலை அமைத்த கணபதி ஸ்தபதி.
எகிப்திய பிரமிடுகளில் காணப்படும் அதே அடிப்படை தத்துவம் இங்கும் பின்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
இந்தக் கோயிலின் முதல் குடமுழுக்க நடந்த சில காலத்தே ராஜ ராஜன் இறந்து விட - அவர் மகன் முதலாம் ராஜேந்திரன் - பெரிய கோயிலுக்காக ராஜ ராஜன் வழங்கிய நில மான்யங்கள் பலவற்றை தான் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கு மாற்றி விட்டார்.
பெரிய கோயிலை விட பிரம்மாண்டமாக கட்ட வேண்டும் என்று நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோயிலை கட்டுவதற்கு கட்டிடக் கலைஞர்களையும் - சிற்ப வல்லுனர்களையும் ரஜேந்திரன் அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. எனவே ஒரு விதத்தில் பெரிய கோயில் முற்றுப் பெறாத ஒரு கோயில் என்றே சொல்ல வேண்டும்.
உச்சி காலப் பொழுதில் கோயில் கோபுரத்தின் நிழல் கோபுரத்துக்குள்ளேயே விழும்படி உச்சி குறுகலாகவும் அடி பரந்தும் இருப்பதால் இக் கோயில் கோபுரம் நிழல் விழாக் கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
சோழர் வரலாற்றை விளக்கும் ஏராளமான கல்வெட்டுக்களும் - அரிய ஒவியங்களும் இக் கோயிலுக்குள் உள்ளன. மலைகள் இல்லாத காவேரிப் படுகைப் பகுதியில் - இக் கோயிலை நிர்மாணிக்க - சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தொலையில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டதாகக் கூறுகிறார் அறிஞர் நாகசாமி. பிரதான கோபுரத்தின் உச்சியில் இருக்கும் சிகரம் போன்ற அமைப்பு ஒரு கல்லால் அமைந்ததில்லை என்கிறார் அவர்.
சாரப்பள்ளத்தில் இருந்து மண் மேடை அமைக்கப்பட்டு இந்தக் கல் கோபுரத்தின் உச்சியில் ஏற்றப்பட்டதாகக் கூறப்படுவது சரியல்ல என்றும் நாகசாமி கூறுகிறார்.
அதே நேரம் இந்தக் கோயில் ஆள்பவருக்கும் - அரசியல்வாதிகளுக்கும் ராசியில்லாத கோயில் என்ற கருத்தும் இருக்கிறது. பக்தர்கள் செல்லும் புனித ஸ்தலங்களின் பட்டியலில் இந்தக் கோயில் இல்லை. இருந்தும் இந்தக் கோயில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்கிறது. உள்ளூர் வாசிகள் ஊரின் பெருமை இது என சிலாகித்துப் பேசுகின்றனர்.
இந்தக் கோயிலின் உட்புறம் சுத்தமாக காட்சியளித்தாலும், கோயிலுக்கு அருகேயே குப்பை கூளங்கள் கொட்டப்பட்டிருப்பதை நம்மால் காணமுடிந்தது. யுனேஸ்கோவால் உலக பாரம்பர்ய சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்தக் கோயிலின் பிரதான கோபுரத்துக்கு சில அடி தூரத்திலேயே மேற்கொள்ளப்பட்ட ஆழ் குழாய் கிணறு அமைக்கும் பணி
நீதிமன்றத் தலையீட்டால்தான் சில வாரங்களுக்கு முன்பு தடுத்து நிறுத்தப்பட்டது.
பல புயல்களையும், 6 நில நடுக்கங்களையும், ஒரு பெரும் தீ விபத்தையும் சந்தித்த இத் திருக்கோயில் மனிதத் தலையீட்டை தாண்டி அடுத்த ஆயிரம் ஆண்டுகளை எப்படி சந்திக்கப் போகிறது என்ற கவலைகளும் இருக்கத்தான் செய்கின்றன. கோயில் விளக்கை ஏற்றுவதற்குத் தேவையான நெய்யை வழங்குவதற்காகவே ஆடுகளையும் மாடுகளையும் தானமளித்துள்ளான் ராஜ ராஜ சோழன். ஆனால் இன்றோ கோயிலில் மின்சாரத்தால் இயங்கும் மணியும் மேளமும் - மங்கல வாத்தியத்துக்கு பதிலாக ஒலிக்கின்றன

news by
BBCTamil.com

No comments:

Post a Comment