Friday, October 1, 2010

தேனீர் பழக்கம் இருதயத்துக்கு பலம்

 
டீ கோப்பை
பால் விடாமலோ குறைவாக பால் விட்டோ டீ குடிப்பதில் கூடுதல் நன்மை இருக்கலாம் என்று தெரிகிறது

அடிக்கடி டீ காஃபி குடிப்பவர்களுக்கு இருதய நோய்கள் வருவதற்கான ஆபத்து குறைகிறது என்று குறிப்புணர்த்தும் புதிய அறிவியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பேரை பதிமூன்று ஆண்டுகளாக கண்காணித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக நெதர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கன் ஹார்ட் அஸ்ஸொஸியேஷன் என்ற அமைப்பின் சஞ்சிகையில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது.
டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் ஒரு நாளில் ஆறு தடவை டீ அருந்துபவர்களுக்கு இருதயக் கோளாறுகள் வருவதற்கான ஆபத்து மூன்றில் ஒரு பங்கு குறைவு என்று இந்த ஆராய்ச்சி கூறுகிறது.
காஃபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் நன்மை ஓரளவுக்கு இருக்கிறது. ஆனால் டீ குடிப்பவர்களுக்கு கிடைக்கும் அளவுக்கு நன்மை காஃபியில் இல்லை.
ஒரு நாளில் இரண்டு முதல் நான்கு கோப்பைகள் டீ அருந்துபவர்களுக்கு அதனை விட குறைவாக டீ அருந்துபவர்களைக் காட்டிலும் இருதய நோய் வருவதற்கான ஆபத்து இருபது சதவீதம் குறைவாக உள்ளது என்றும் இந்த ஆராய்ச்சி கூறுகிறது.
ஆனால் குடிக்கும் டீயின் அளவை அதிகரித்துக்கொண்டே போனால், ஆபத்தின் அளவு மென்மேலும் குறைகிறது என்றில்லை. ஒரு கட்டத்தில் இந்தப் பலன் நின்று போய்விடுகிறது.
நெதர்லாந்தில் மக்கள் டீ குடிக்கும்போது அதில் சில துளிகள்தான் பால் விடுவார்கள், ஆனால் இந்தியர்கள் இலங்கையர்கள் எல்லாம் மொத்தமாக பாலிலோ அல்லது தண்ணீருக்கு சமமான பாலிலோ டீ அருந்துபவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. அந்த அளவுக்கு பால் விட்டு டீ குடிக்கும்போது இப்படியான மருத்துவ பலன் கிடைக்குமா என்பது தெரியவில்லை.
டீயில் இருக்கும் ப்லவனாய்ட்ஸ் என்ற வஸ்துதான் இருதயக் கோளாறு ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பு தருகிறது என்று சொல்லப்படுகிறது.
டீயில் பால் சேர்க்கும்போது பலன் கிடைக்காமல் போய்விடுகிறதா என்பதை இனிமேல்தான் ஆராய்ச்சிகள் உறுதிசெய்ய வேண்டும். 

News by
B B C Tamil.com

No comments:

Post a Comment