Friday, October 29, 2010

சஹஜ நிலைக் குண்டலினி யோகம்


மூலாதாரம் சஹஸ்ராரத்துக்கு ஏறுதல் – பிறப்பு-இறப்புச் சுழலில் சிக்குண்ட வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து விடுபட்டு, பேரின்பப் பெருவாழ்வில் நிலைபெறல்

சுவாதிஷ்டானம் ஆக்கினைக்கு ஏறுதல் – ஆண்-பெண் காமப் புணர்விலிருந்து விடுபட்டு கடவுட் காதலன்-ஆன்மக் காதலி காதல் உணர்வில் கணப்பொழுதும் நீங்கா சிவ-சக்தி தெய்வீகப் புணர்வில் நிலைபெறல்

மணிபூரகம் விசுத்திக்கு ஏறுதல் – ஆணவ ஆர்ப்பாட்ட வன்பின் இயக்கத்திலிருந்து விடுபட்டு தெய்வீக ஆணைக்குக் கட்டுப்பட்ட அன்பின் ஆற்றலாய் நிலைபெறல்

சூர்ய சக்ரம் அமிர்த கலசத்துக்கு ஏறுதல் – மருள் மயக்க இருமையிலிருந்து விடுபட்டு ஆன்ம நேய ஒருமையில் நிலைபெறல்

இந்த ஏற்றம் அனாகதமாம் இருதய மையத்தினூடே எட்டு வடிவச் சிவ-சக்தியோட்டமாகத்(Figure Eight Flow) துவங்கி, கீழ்ச் சக்கரங்கள்(உஷ்ணம்) சுத்திகரிக்கப்பட்டு, மேல் சக்கரங்களின்(குளிர்ச்சி) இறக்கத்தில்(இதுவே கடவுளின் இரக்கமோ) முடிகிறது.

உமது மெய்க் குண்டத்தில் நிகழும் வேள்வியில், கீழ்ச் சக்கரங்களை, மேல் சக்கரங்களுக்கு ஆகுதியிட்டு அர்ப்பணிப்பதாக பாவித்து, அனாகதமாகிய இருதய மையத்தில் அமர்ந்து நீவிர் செய்யும் சஹஜ நிலைக் குண்டலினி யோகத்தில், நிராதார மேனிலை மேல் சக்கரங்களில் நிலை கொண்டு, இருதயத்தினூடே கீழ்ச் சக்கரங்களைச் சுத்திகரித்து, அவற்றை அருட்பேராற்றலின் இயக்கக் களமாக்கி, இவ்வாறாக ஆறாதாரம் வந்தடையும்.
சஹஜ நிலைக் குண்டலி யோகம் நேரங் கிடைக்கும் போதெல்லாம் நீவிர் செய்யலாம், இதுவே உம் சஹஜ நிலை என்று முழுதாயுணரும வரை,  இந்த எட்டு வடிவச் சக்தியோட்டத்தை தினமும் பல முறை நினைவு கூருங்கள், எட்டில் ஏற்றம் சக்தி, இறக்கம் சிவம், சக்தி வெம்மை, சிவம் குளிர்ச்சி, இரண்டின் சங்கமம் தண்மை

சத்தி அருள்தரச் சத்தன ருளுண்டாம்
சத்தன் அருள்தரச் சத்திய ருளுண்டாம்
சத்தி சிவமாம் இரண்டுந்தன் னுள்வைக்க
சத்தியம் எண்சித்தி தண்மை யுமாமே 

குருநாதர் திருமூலர் ஏற்கனவே உபதேசித்ததே இது.
மூலாதாரம் சஹஸ்ராரம் ஏற
சஹஸ்ராரம் மூலாதாரம் இறங்க
அனாகத இருதய மையத்தினூடே
எட்டு வடிவச் சிவ-சக்தி யோட்டம் வாசி

சுவாதிட்டானம் ஆக்கினை ஏற
ஆக்கினை சுவாதிட்டானம் இறங்க
அனாகத இருதய மையத்தினூடே
எட்டு வடிவச் சிவ-சக்தி யோட்டம் வாசி

மணிபூரகம் விசுத்தி ஏற
விசுத்தி மணிபூரகம் இறங்க
அனாகத இருதய மையத்தினூடே
எட்டு வடிவச் சிவ-சக்தி யோட்டம் வாசி

சூர்ய சக்ரம் அமிர்த கலசம் ஏற
அமிர்த கலசம் சூர்ய சக்ரம் இறங்க
அனாகத இருதய மையத்தினூடே
எட்டு வடிவச் சிவ-சக்தி யோட்டம் வாசி

அனாகத இருதய மையமே
மூலாதார சஹஸ்ரார ஒருமை
சுவாதிட்டான ஆக்கினை ஒருமை
மணிபூரக விசுத்தி ஒருமை
சூர்ய சக்ர அமிர்த கலச ஒருமை

மூலாதார சஹஸ்ரார ஒருமை
பிறப்பு இறப்புச் சுழலறுக்கும்
பேரின்பப் பெருவாழ்வு

சுவாதிட்டான ஆக்கினை ஒருமை
ஆண் பெண் காமத்தினவறுக்கும்
சிவ சக்தி காதற்புணர்வு

மணிபூரக விசுத்தி ஒருமை
ஆணவ ஆர்ப்பாட்ட வன்பறுக்கும்
சச்சிதானந்த அருட்பேராற்றல்

சூர்ய சக்ர அமிர்த கலச ஒருமை
மருண் மயக்க இருமையறுக்கும்
ஆன்ம நேய ஒருமை

அனாகத இருதய மையத்தில் அமர்ந்தே
செய்வாய் சஹஜநிலைக் குண்டலி யோகம்
எட்டு வடிவச் சிவசக்தியாய் ஓடும்
சிவாமய வாசியை நீபக்தியாய் நாடி

கீழ்மேல் இடவலம் முன்பின் இருமையெலாம்
மாய்ந்தே போகும் ஒளிக்கோளப் பேருணர்வை
நினக்க ளிக்கும் குண்டலி யோகத்தின்
கணக்கு சொன்னேன் சஹஜநிலை இதுவாமே!

by

நான் வழங்கும் மகாயோகம்

 

No comments:

Post a Comment