Wednesday, December 30, 2009

காசியின் பெருமைகள்


மேற்கண்ட பழம்பெருமை வாய்ந்த புராண மற்றும் வரலாற்றுச் சிறப்புகள் மட்டுமல்லாமல், மேலும் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருமைகளும் இடங்களும் காசி நகரத்திற்கு உண்டு. காசி விஸ்வநாதர் கோவில், கால பைரவர் கோவில், அன்னபூர்ணேஸ்வரி கோவில், விசாலாக்‌ஷி கோவில், துர்கை கோவில், சங்கட் மோட்சன் ஹனுமான் கோவில், துளசிமனாஸ் மந்திர், பாரத மாதா கோவில், கிரி ஸ்வாமி பாஸ்கரானந்த் சமாதி, என்று பல ஆலயங்கள் உள்ளன. மேலும் புண்ணிய நதியாம் கங்கையும் அதன் கரையில் உள்ள ஹரிசந்திர கட்டம், சிந்தா கட்டம், தசாஸ்வமேத கட்டம், மணிகர்ணிகா கட்டம், பஞ்சகங்கா கட்டம், ஆகிய கட்டங்களும், கங்கை நதியைப் பூஜை செய்து வழிபடும் அற்புதமான ‘ஆரத்தி’ வழிபாடும் மிக முக்கியமானவை.

திருத்தசாங்கம் என்று ஒரு சிற்றிலக்கிய பிரபந்த வகை உண்டு.. ஒரு தலத்தின் இறைவனை (அல்லது ஒரு நாட்டின் மன்னனை/அரசியை) முன்வைத்து அவனது நாமம், நாடு, நகர், கொடி, மலை, ஆறு என்று பத்து அம்சங்களைச் சிறப்பித்து வெண்பாக்களாகப் பாடும் பாடல் வகை. இந்தப் பாடல் வகையில் பாரதமாதாவை முன்வைத்து மகாகவி பாரதி “பாரத தேவியின் திருத்தசாங்கம்” என்று பாடியிருக்கிறார். அதில், பாரத தேவியின் நகராகவும், ஆறாகவும் எவற்றைக் கூறுகிறார் தெரியுமா?

இன்மழலைப் பைங்கிளியே! எங்கள் உயிரானாள்
நன்மையுற வாழும் நகரெதுகொல்? - சின்மயமே
நானென் றறிந்த நனிபெரியோர்க் கின்னமுது
தானென்ற காசித் தலம்.

வண்ணக் கிளி! வந்தே மாதரமென் றோதுவரை
இன்னலறக் காப்பா ளியாறுரையாய்! - நன்னர்செயத்
தான்போம் வழியெலாம் தன்மமொடு பொன்விளைக்கும்
வான்போந்த கங்கையென வாழ்த்து.

மேலும், காசி மன்னரின் அரண்மனை, ஸம்ஸ்க்ருத பல்கலைக் கழகம், பனாரஸ் ஹிந்து பலகலைக் கழகம், பனாரஸ் பல்கலையில் உள்ள கோவில், சாரநாத் நகரம், சாரநாத் புத்தர் கோவில், தாமெக் ஸ்தூபி, அருங்காட்சியகம், இலங்கை ஆளுனர் ஜப்பானிய முறைப்படி கட்டிய முல்காஞ் குடி விஹார், அதனருகில் அசோகச் சக்ரவர்த்தி புத்த கயாவிலிருந்து அனுப்பிய போதி மரம், 23-வது தீர்த்தங்கரரான பர்ஸ்வனாத் பிறந்த இடத்தில் உள்ள ஜெயின் கோவில், சீனர் கோவில் மற்றும் சாரநாத் மஹாதேவர் கோவில் ஆகியவையும் இருக்கின்றன.

No comments:

Post a Comment