Wednesday, December 30, 2009

காசி மஹாத்மியம்


வடக்கே இமயம், தெற்கே ராமேஸ்வரம், கிழக்கே புரி, மேற்கே துவாரகை என்று நம் பாரத தேசமே ஒரு புண்ணிய பூமியாக இருக்கிறது. இந்தப் புண்ணிய பூமியின் நடுவே இருக்கிறது புண்ணிய நதியாம் கங்கை பிரவாஹமாக ஒட்டிக்கொண்டிருக்கும் காசி மாநகரம்.

“ஸாதாரணமாக எந்த க்ஷேத்ரத்தின் ஸ்தல புராணத்தைப் பார்த்தாலும் ‘இது காசிக்குச் சமமானது; அல்லது காசியை விட உசந்தது’ என்றே இருக்கும். இப்படி ஒரு க்ஷேத்ரத்தை மற்ற எந்த க்ஷேத்ரத்தோடும் ‘கம்பேர்’ பண்ணாமல் காசியோடேயே எல்லா க்ஷேத்ரங்களையும் ஒப்பிட்டிருப்பதாலேயே காசி தான் க்ஷேத்ர ராஜா என்று தெரிகிறது. இப்படியே மற்ற புண்ய தீர்த்தங்களைப் பற்றிய புராணங்களிலும் அவற்றை ஒன்றோடொன்று ஒப்பிட்டு உசத்தி சொல்லாமால், அந்தந்த நதியைப் பற்றி ‘இது கங்கா துல்யமானது’ அல்லது ‘கங்கையை விட விசேஷமானது’ என்று தான் சொல்லியிருக்கும். இதனாலேயே கங்கை தான் தீர்த்தங்களில் தலைசிறந்தது என்று ‘ப்ரூவ்’ ஆகிறது”. (காஞ்சி மஹாஸ்வாமிகள்- தெய்வத்தின் குரல் – ஏழாம் பகுதி – பக்கம் 832)

வடமாநிலங்களில் உள்ளவர்கள் தென் பகுதிகளுக்கும், தென்மாநிலங்களில் உள்ளவர்கள் வடப் பகுதிகளுக்கும் க்ஷேத்ராடனம் போவது நம் தேசத்தில் தொன்று தொட்டு வரும் ஆன்மீகக் மரபு. இந்த கலாசாரமே பல மொழிகள் பேசும், பல பழக்க வழக்கங்கள் கடைபிடிக்கும் நம் தேச மக்களின் ஒருமைப்பாட்டிற்கு இலக்கணமாக விளங்குகிறது. உதாரணமாக ராமேஸ்வரத்தின் அக்னி தீர்த்த (கடல்)மண்ணை எடுத்துச் சென்று பிரயாகையில் (அலகாபாத்) கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கரைத்து, பின்னர் அங்கிருந்து கங்கை நீரை எடுத்து வந்து ராமேஸ்வரத்தில் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, காசி ராமேஸ்வரம் ஆகிய இரண்டு தலங்களிலும் பித்ருக்களுக்கு சிராத்தம், தர்ப்பணம் ஆகியவை செய்து முடித்த பின்னரே காசி-ராமேஸ்வர க்ஷேத்ராடனம் பூர்த்தியடைகிறது. இவ்வாறு ஆன்மீகத்திலும் கலாசாரத்திலும் பின்னிப்பிணைந்து மக்களை ஒற்றுமையாக வைத்திருப்பதே இந்து மதம் என்கிற சனாதன தர்மம்.

பாவலரும் நாவலரும் பண் மலரக் கண்மலரும்
காவலரும் ஏடவிழ்க்கும் காசியே - தீ வளரும்
கஞ்சக் கரத்தான் கலைமறைக்கு நாயகமாம்
அஞ்சக் கரத்தான் அகம்

- குமரகுருபரர் (காசிக் கலம்பகம்)

முதல் இரண்டு அடிகளில், ஏடவிழ்க்கும் (இதழ் விரிக்கும்) அலர்களையும் (பூக்களையும்), தங்கள் ஏடவிழ்க்கும் (சுவடிகளைத் திறக்கும்) நாவலர்களையும் குறிக்குமாறு இரு பொருள்பட அமைந்த அழகிய பாடல் இது. தென் தமிழ் நாட்டில் பிறந்த குமரகுருபரர் காசி சென்று சைவ மடம் அமைத்தார்.

காசித் தலத்தின் பெருமைகளைக் கூறும் காசிக் கலம்பகம் என்ற அழகிய நூலையும் எழுதினார்.

காசி க்ஷேத்திரத்தின் பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். காசி நகரத்தின் வடக்கு திசையிலிருந்து வரும் “வருணா” நதியும், தெற்கு திசையிலிருந்து வரும் “அசி” நதியும் கங்கை நதியில் கலக்கின்றதால் “வாரணாசி” என்றும் அழைக்கபடுகிறது. பகவான் மஹாதேவர் தன்னுடைய திரிசூலத்தின் மேல் கால்களை வைத்து நின்று இந்தக் காசி நகரத்தைப் படைத்தார் என்று நம்பப் படுகிறது. ஆகையால் எந்த ஜந்துவும் தன்னுடைய சரீரத்தை இங்கு தியாகம் செய்தால் மோட்சம் அடைந்து சிவலோகம் செல்வதாக ஐதீகம்.

மேலும் பகவான் ஆதி சங்கரர் தன் அத்வைத ஸ்தாபனத்தை இங்கிருந்தே ஆரம்பிக்கிறார் என்று சொல்லலாம். அன்றைய சமூக அடுக்கில் தாழ்ந்திருந்த சண்டாளனிலும் பிரம்மத்தைக் காண வேண்டும் என்ற நடைமுறை அத்வைதம் சங்கரரின் மெய்யுணர்வில் உருவானது இந்தத் தலத்தில் தான்! அந்த உபதேசத்தைத் தனக்கு நல்கிய சண்டாளனையே குருவாகப் போற்றி அவர் “மனிஷா பஞ்சகம்” என்ற துதியை அருளியதும் காசியில் தான்!

பார்க்க: மனிஷா பஞ்சகத்தின் தமிழ் வடிவம் : சாதி வெறியருக்கு சங்கரர் எழுதியது

ஆன்மீகத்தின் மூலமாகவும், கலாசாரத்தின் மூலமாகவும் நம் தேசத்தின் ஒருமைப்பாடு காக்கப் படுவதற்கு காசி-காஞ்சி நகரங்களின் தொடர்பும், கங்கை-காவிரி நதிகளின் தொடர்பும் சிறந்த ஆதாரங்களாக இருக்கின்றன.

“காசிக்கும் காஞ்சிக்கும் நடுவே ஆயிரம் மைலுக்கு மேல் இருக்கிறது. காசியில் அன்னபூரணி விசேஷம். காஞ்சீபுரத்திலும் ஜகன்மாதா 32 தர்மங்களைப் பண்ணும் போது அன்னதானம் பண்ணியிருக்கிறாள். காமாக்‌ஷி ஆலயத்தில் கர்ப்ப கிருஹத்தின் நுழைவாசலுக்கு நேரே அன்னபூர்ணேச்வரிக்கு ஸந்நிதி இருக்கிறது. அதன் விமானத்தில் தக்ஷிண தேசத்தில் வேறே எங்கேயும் இல்லாத விதத்தில் ஆறு சிகரங்கள் இருக்கின்றன. ஏன் இப்படி இருக்கிறது என்பதற்குப் பதில் காசியில் கிடைக்கிறது! காசியில் அன்னபூரணி விமானத்தில் இதே மாதிரி ஆறு சிகரங்கள் இருக்கின்றன. அதன் அச்சாகத்தான் இங்கே ஆயிரம் மைல் தாண்டிக் காஞ்சியிலும் இப்படி இருக்கிறது! சின்ன விஷயங்களில் கூட இவ்விதம் தேசத்தின் வெவ்வேறு கோடிகளில் உள்ள ஸ்தலங்களில் ஒற்றுமையிருப்பதால் க்ஷேத்ர ஐதிஹ்யங்களை லேசாகத் தள்ளி விடுவதற்கில்லை என்று தெரிகிறதல்லவா?” - (காஞ்சி மஹாஸ்வாமிகள்- தெய்வத்தின் குரல் – இரண்டாம் பகுதி – பக்கம் 745-746)

No comments:

Post a Comment