Friday, October 29, 2010

சஹஜ நிலைக் குண்டலினி யோகம்


மூலாதாரம் சஹஸ்ராரத்துக்கு ஏறுதல் – பிறப்பு-இறப்புச் சுழலில் சிக்குண்ட வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து விடுபட்டு, பேரின்பப் பெருவாழ்வில் நிலைபெறல்

சுவாதிஷ்டானம் ஆக்கினைக்கு ஏறுதல் – ஆண்-பெண் காமப் புணர்விலிருந்து விடுபட்டு கடவுட் காதலன்-ஆன்மக் காதலி காதல் உணர்வில் கணப்பொழுதும் நீங்கா சிவ-சக்தி தெய்வீகப் புணர்வில் நிலைபெறல்

மணிபூரகம் விசுத்திக்கு ஏறுதல் – ஆணவ ஆர்ப்பாட்ட வன்பின் இயக்கத்திலிருந்து விடுபட்டு தெய்வீக ஆணைக்குக் கட்டுப்பட்ட அன்பின் ஆற்றலாய் நிலைபெறல்

சூர்ய சக்ரம் அமிர்த கலசத்துக்கு ஏறுதல் – மருள் மயக்க இருமையிலிருந்து விடுபட்டு ஆன்ம நேய ஒருமையில் நிலைபெறல்

இந்த ஏற்றம் அனாகதமாம் இருதய மையத்தினூடே எட்டு வடிவச் சிவ-சக்தியோட்டமாகத்(Figure Eight Flow) துவங்கி, கீழ்ச் சக்கரங்கள்(உஷ்ணம்) சுத்திகரிக்கப்பட்டு, மேல் சக்கரங்களின்(குளிர்ச்சி) இறக்கத்தில்(இதுவே கடவுளின் இரக்கமோ) முடிகிறது.

உமது மெய்க் குண்டத்தில் நிகழும் வேள்வியில், கீழ்ச் சக்கரங்களை, மேல் சக்கரங்களுக்கு ஆகுதியிட்டு அர்ப்பணிப்பதாக பாவித்து, அனாகதமாகிய இருதய மையத்தில் அமர்ந்து நீவிர் செய்யும் சஹஜ நிலைக் குண்டலினி யோகத்தில், நிராதார மேனிலை மேல் சக்கரங்களில் நிலை கொண்டு, இருதயத்தினூடே கீழ்ச் சக்கரங்களைச் சுத்திகரித்து, அவற்றை அருட்பேராற்றலின் இயக்கக் களமாக்கி, இவ்வாறாக ஆறாதாரம் வந்தடையும்.
சஹஜ நிலைக் குண்டலி யோகம் நேரங் கிடைக்கும் போதெல்லாம் நீவிர் செய்யலாம், இதுவே உம் சஹஜ நிலை என்று முழுதாயுணரும வரை,  இந்த எட்டு வடிவச் சக்தியோட்டத்தை தினமும் பல முறை நினைவு கூருங்கள், எட்டில் ஏற்றம் சக்தி, இறக்கம் சிவம், சக்தி வெம்மை, சிவம் குளிர்ச்சி, இரண்டின் சங்கமம் தண்மை

சத்தி அருள்தரச் சத்தன ருளுண்டாம்
சத்தன் அருள்தரச் சத்திய ருளுண்டாம்
சத்தி சிவமாம் இரண்டுந்தன் னுள்வைக்க
சத்தியம் எண்சித்தி தண்மை யுமாமே 

குருநாதர் திருமூலர் ஏற்கனவே உபதேசித்ததே இது.
மூலாதாரம் சஹஸ்ராரம் ஏற
சஹஸ்ராரம் மூலாதாரம் இறங்க
அனாகத இருதய மையத்தினூடே
எட்டு வடிவச் சிவ-சக்தி யோட்டம் வாசி

சுவாதிட்டானம் ஆக்கினை ஏற
ஆக்கினை சுவாதிட்டானம் இறங்க
அனாகத இருதய மையத்தினூடே
எட்டு வடிவச் சிவ-சக்தி யோட்டம் வாசி

மணிபூரகம் விசுத்தி ஏற
விசுத்தி மணிபூரகம் இறங்க
அனாகத இருதய மையத்தினூடே
எட்டு வடிவச் சிவ-சக்தி யோட்டம் வாசி

சூர்ய சக்ரம் அமிர்த கலசம் ஏற
அமிர்த கலசம் சூர்ய சக்ரம் இறங்க
அனாகத இருதய மையத்தினூடே
எட்டு வடிவச் சிவ-சக்தி யோட்டம் வாசி

அனாகத இருதய மையமே
மூலாதார சஹஸ்ரார ஒருமை
சுவாதிட்டான ஆக்கினை ஒருமை
மணிபூரக விசுத்தி ஒருமை
சூர்ய சக்ர அமிர்த கலச ஒருமை

மூலாதார சஹஸ்ரார ஒருமை
பிறப்பு இறப்புச் சுழலறுக்கும்
பேரின்பப் பெருவாழ்வு

சுவாதிட்டான ஆக்கினை ஒருமை
ஆண் பெண் காமத்தினவறுக்கும்
சிவ சக்தி காதற்புணர்வு

மணிபூரக விசுத்தி ஒருமை
ஆணவ ஆர்ப்பாட்ட வன்பறுக்கும்
சச்சிதானந்த அருட்பேராற்றல்

சூர்ய சக்ர அமிர்த கலச ஒருமை
மருண் மயக்க இருமையறுக்கும்
ஆன்ம நேய ஒருமை

அனாகத இருதய மையத்தில் அமர்ந்தே
செய்வாய் சஹஜநிலைக் குண்டலி யோகம்
எட்டு வடிவச் சிவசக்தியாய் ஓடும்
சிவாமய வாசியை நீபக்தியாய் நாடி

கீழ்மேல் இடவலம் முன்பின் இருமையெலாம்
மாய்ந்தே போகும் ஒளிக்கோளப் பேருணர்வை
நினக்க ளிக்கும் குண்டலி யோகத்தின்
கணக்கு சொன்னேன் சஹஜநிலை இதுவாமே!

by

நான் வழங்கும் மகாயோகம்

 

அஷ்ட புஷ்பங்கள்



புஷ்பங்கள் பற்றி ஆகமங்களும் புஷ்பவிதி என்ற நூலும் விவரமாகச் சொல்லியிருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் இன்ன இன்ன புஷ்பங்களை சுவாமிக்குச் சார்த்த வேண்டிய காலம் பற்றியும் கூட சொல்லியிருப்பதைக் காணலாம். தோஷமில்லாத , அதாவது பூச்சி அரிக்காத, எச்சம் இடப்படாத விடியற்காலத்தில் பறிக்கப்பட்ட புஷ்பங்களால் பூஜை செய்வது விசேஷமாகச் சொல்லப்பட்டுள்ளது. இதைத்தான் "நன் மாமலர்" என்று ஞானசம்பந்தர் பாடுகிறார்.

இனி, அஷ்ட புஷ்பங்கள் எவை என்று பார்ப்போம்.புன்னை,சண்பகம்,பாதிரி, வெள்ளெருக்கு, நந்தியாவர்தம்,அரளி, நீலோத்பலம், தாமரை என்பனவே அஷ்டபுஷ்பங்களாக பூஜைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் நந்தியாவர்தம்,அரளி ஆகியவை வீடுகளிலேயே வளர்க்கப்படுகின்றன. இவற்றைத் தவிரவும், மல்லிகை,முல்லை,பாரிஜாதம், மயில் கொன்றை ,விருக்ஷி போன்ற புஷ்பச் செடிகளையும், வில்வ மரத்தையும் வீடுகளில் பூஜைக்காக வளர்ப்பது உண்டு.

புன்னை: இம்மரம் பெரும்பாலும் கடற்கரைப் பகுதிகளில் காணப்படுவது. மயிலாப்பூரில் புன்னை மரத்தின் நீழலில் கபாலீச்வரர் வீற்றிருப்பதை , "மட்டிட்ட புன்னையங்கானல்" என்று துவங்கியபடி பதிகம் பாடுகிறார் சம்பந்தர். இக்கோயிலில் புன்னை மரம் ஸ்தல விருக்ஷமாக இருக்கிறது. பசுமையான இலைகளையும் வெள்ளை நிறம் கொண்ட பூக்களையும் கொண்டது இம்மரம். இதில் கோடைக்காலத்தில் பூக்கள் அதிகமாக இருக்கும்.






சண்பகம்: வாசனை மிக்க இம்மலர்கள் சித்திரை முதல் புரட்டாசி வரை பூக்கக் கூடியவை. இம்மரத்தின் இலைகளும் பசுமையாக இருப்பவை. செண்பகவல்லி என்று அம்பாளுக்கும் சென்பகாரன்யேச்வரர் என்று சுவாமிக்கும் பெயர்கள் வழங்குவதைப் பார்க்கலாம்.





பாதிரி: நீண்ட மலர்களைக் கொண்ட பாதிரி மரம் உயரமாக வளரக்கூடியது. இம் மலர்கள் வாசனையானவை. இதனைத் தல விருக்ஷமாகக்கொண்ட ஸ்தலம் திருப்பாதிரிப்புலியூர் ஆகும்.

வெள்ளெருக்கு:
வெள்ளெருக்கும் பாம்பும் சுவாமியின் ஜடையில் விளங்குவதை, "வெள்ளெருக்கு அரவம் விரவும் சடை" என்று அப்பர் தேவாரம் குறிப்பிடுகிறது. முதலில் சிறிய செடியாக விளங்கி , சிறிய மரமாகவும் வெள்ளெருக்கு வளர்ச்சி பெறுகிறது. வெண்மை நிறம் கொண்ட இம்மலர்கள் ஆண்டின் பல மாதங்களில் பூக்கக் கூடியவை. எருக்கத்தம்புலியூர் என்ற சிவ ஸ்தலத்தில் இம்மரம் விருக்ஷமாக விளங்குகிறது.

நந்தியாவர்தம்: நந்தியாவட்டை என்று பேச்சு வழக்கில் சொல்லப்படுவது. வருடம் முழுவதும் பூக்கக்கூடியது. வெள்ளை நிறம் கொண்ட இம்மலர்களை மாலையாகவும் அர்ச்சனைக்கும் பயன் படுத்துவர்.


அரளி:

இதுவும் மாலைகளில் பயன்படுத்தப்படுவது. அர்ச்சனைக்கும் பயன்படுத்துவர். அநேகமாக ஆண்டு முழுவதும் பூப்பதால் நந்தவனங்கள் மற்றும் வீடுகளில் இச்செடியை வளர்க்கிறார்கள்.

நீலோத்பலம்:

நீர்நிலைகளில் வளரக்கூடியது. இதைக் குவளை என்றும் சொல்வர். கண்களுக்கு இதை உதாரணம் காட்டுவார்கள். "குவளைக்கண்ணி " என்று அம்பாளைத் திருவாசகம் குறிப்பிடுகிறது. திருவாரூரில் அம்பாளுக்கு, நீலோத்பலாம்பிகை என்று பெயர்.

தாமரை: தாமரையில் மகா லக்ஷ்மி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. இத் தாமரை மலர் குளங்களிலும் நீர் நிலைகளிலும் வளர்வதைக் காணலாம். ஆயிரம் தாமரை மலர்களால் திருவீழிமிழலையில் மகாவிஷ்ணு சிவ பூஜை செய்து சக்கரம் பெற்றதாக அந்த ஊர்ப் புராணம் சொல்கிறது. அதற்காகவே பஞ்சாக்ஷர சஹஸ்ரநாமம் சொல்லி அர்ச்சனை செய்தாராம் விஷ்ணு.

ஊமத்தை ,மந்தாரை, மகிழம்பூ,போன்ற புஷ்பங்களையும் ஈச்வரன் ஏற்றுக்கொள்கிறான். இருந்தாலும் மேலே சொன்ன அஷ்ட புஷ்பங்களே மிகவும் உயர்வாகக் கூறப்படுகின்றன. இந்த "எட்டு நாண்மலர் " கொண்டு ஈசனது பாதார விந்தங்களுக்கு அர்ச்சித்தால் எல்லாப் பாவங்களும் நீங்கும் என்று அப்பர் தேவாரம் நமக்கு உணர்த்துகிறது.

ஸ்ரீ பரமேச்வரனது பாதங்களோ இயற்கையிலேயே வாசனை மிக்கவை. அம மலர்ப்பாதங்களுக்கு மலர்களால் அர்ச்சிக்கிறோம். "நறுமலராய் நாறும் மலர்ச் சேவடி " என்று இதைக் குறிப்பிடுவார் அப்பர் ஸ்வாமிகள். இப்படி இயற்கையிலேயே மணம்மிக்க பாதங்களைச் சுற்றி ரீங்காரம் செய்கின்றனவாம் வண்டுகள். ஆகவே, "வண்டினங்கள் சூழ்ந்த அடி" என்பார் அப்பர் பெருமான்.

முருக நாயனார் திருப்புகலூர் வர்தமாநீச்சரத்தில் புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தவர்.பக்தியையும் கூடவே பகவானுக்கு மாலையாகச் சார்த்தி மகிழ்ந்தவர்.அந்த ஊர்ப் பதிகத்தில் முருக நாயனாரது இத்தொண்டு திருஞான சம்பந்தரால் போற்றப்படுகிறது.


அத்தகைய மலர்ப்பாதங்களை நாமும் அஷ்ட புஷ்பங்களால் அர்ச்சித்து சஞ்சித வினைகள் நீங்கி , பிறப்பு இறப்பு இல்லாத நிலையை அடைவோமாக.


by
அகத்தியர்அடிமை வலைப்பூ

சில பயனுள்ள சிவ மந்திரங்கள்


மனதைத் திடப்படுத்துவது எதுவோ அதுவே மந்திரம் எனப்படும். உரு(எண்ணிக்கை) ஏற திரு ஏறும் என திருமூலர் மந்திரத்தை ஜபிப்பதால் கிடைக்கும் நன்மையைப் பற்றிக் கூறுகிறார்.
திரு என்றால் பிரகாசமான என்று அர்த்தம். எல்லோரையும் கவரும் காந்தசக்தி என்றும் கூறலாம். வாழ்க வளமுடன் என்பதும் ஒரு சக்திவாய்ந்த மந்திரமே! நாம் சாதாரணமாக பேசும் வார்த்தைகளுக்கு சக்தி உண்டு; அதை விட திருமந்திரம், பெரிய புராணம், கந்த சஷ்டிகவசம், கந்தரலங்காரம், திருப்பாவை முதலான தமிழ் ஆன்மீகப் படைப்புகளுக்கு நாம் அவற்றை பாடும் போதும் மனதிற்குள் ஜபிக்கும் போதும் சக்தி அதிகம்.இதற்குச் சம்மான சக்தி கொண்டவையே சமஸ்கிருத மந்திரங்கள்.அவற்றில் பெரும்பாலான மந்திரங்களுக்கு அர்த்தம் கிடையாது.ஆனால், அவற்றை முறையாக உச்சரிக்கும்போது அது மனிதநலத்தை அதிகப்படுத்துகிறது.இது தொடர்பாக ஒலியியல் விஞ்ஞானம் என்ற புதிய அறிவியல்துறை உருவாக்கப்பட்டு இந்துக்களின் வேதமந்திரங்களுக்கு மனித கஷ்டங்களை நீக்கும் அல்லது மாற்றும் வலிமை உண்டு என கண்டறியப்பட்டுவிட்டது.மேலும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.இத்தகு ஆராய்ச்சிகள் ஜெர்மனி,சுவிட்சர்லாந்து,இங்கிலாந்து நாடுகளில் நடைபெறுகின்றன.
வேதிக் ரிசர்ச் ரிசல்ட்ஸ் என்ற பெயரில் கூகுளில் தேடிப்பார்க்கவும்.சில சிவ மந்திரங்களைப் பார்ப்போம்:ஓம் ஜகங் என தினமும் 108 முறை ஜபித்தால் கணபதியின் அருள் கிட்டும்.ஓம் நமசிவாய என்று ஜெபித்தால் காலனை வெல்லலாம்.ஓம் நமசிவாய நமா என ஜெபித்தால் பூதக்கூட்டங்கள் வசமாகும்.துஷ்ட தேவதைகள் அழியும். மன்னர்கள் அருள் கிடைக்கும். ஓம் நூம் பயப்யுஞ் சிவாய நமா என்ற மந்திரத்தை ஜபித்தால் துன்பங்கள் விலகும்.ஆறு சாஸ்திரங்களையும், நான்கு வேதங்களையும் அறிய உதவும்.சிவாய ஓம் என்று சொன்னால் திருமாலின் ஆற்றல் கிட்டும். மய நசிவ சுவாகா என ஓதினால் ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்கள் கீழிறங்கிவந்து சுமனக்குளிகை தருவார்கள்.இங் சிங் ச்ங் ஓம் என்ற ஈசான மந்திரத்தை தனக்கு ஆபத்தான வேளைகளில் சூரியனுக்கு எதிராக நின்று கைகளை மேலே உயர்த்தி ஜபிப்பவன் எல்லா பாவங்களிலிருந்து முழுமையாக நீங்குவான்.சிங் சிங் சிவாய ஓ என ஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும்.லீங் க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள் வசியம் உண்டாகும்.சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால் அரச போகம் கிட்டும்.மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் கூறியிருப்பது:மசிவயந ஜபித்தாலும்,நயவசிம ஜபித்தாலும் மோகனம் உண்டாகும்-அகத்திய மகரிஷிசிவாயநம ஜபித்தால் மோகனம் உண்டாகும்-நந்தீசர் மகரிஷி


by

அகத்தியர்அடிமை வலைப்பூ



Wednesday, October 20, 2010

வீட்டு மூலிகை தோட்டக் கையேடு


மிக எளிதாக நம்மை சுற்றி கிடைக்கும் மூலிகை செடிகள் குறித்து அவை மூலிகை செடிகள் என்பதையே நாம் அறியாமல் இருக்கிறோம். அவற்றுள் சிலவற்றையே பாட்டி கை வைத்தியம் வழியாக நாம் அறிந்திருக்கிறோம். எனவே தமிழ் மக்கள் வீடுகளில் நிற்கும் இத்தகைய 14 மூலிகை செடிகளை கண்டறிந்து அவற்றின் எளிய வீட்டு மருத்துவ குறிப்புகளையும் கொண்டு ஒரு கையேட்டினை தந்துள்ளது விவேகானந்த கேந்திரம். மனையடி மூலிகை மருத்துவம் எனும் இக்கையேட்டில் நெல்லை சீமையின் புகழ்பெற்ற சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் கணபதி அவர்கள் இந்த 14 மூலிகை செடிகளின் விவரங்களை அளித்துள்ளார்கள். இம்மூலிகைகளை வீடுகளில் மட்டுமன்றி பொது இடங்கள் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோவில்களில் வளர்க்க வேண்டும் என்ற நோக்குடனேயே இக்கையேடு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எவரும் எளிய மருந்துகளை தயார் செய்ய இயலும். இம்மூலிகைகள் அதிக இடம் , அதிக பொருட்செலவு, அதிக நீர் வசதி ஆகியவை கேட்காதவை ஆகும். பாரதம் ஆரோக்கியமான தேசமாக உருவாக இந்த கையேடு பயனளிக்கும் என நம்பலாம்.

இக்கையேட்டில் 14 மூலிகை செடிகளின் கறுப்பு-வெள்ளை படங்களை அளித்துள்ளார்கள். அத்துடன் மூலிகையின்
  • வழங்கு பெயர்,
  • அறிவியல் பெயர்
  • மருந்துக்கு உதவும் பாகங்கள்
  • கட்டுப்படுத்தும் நோய்கள்
  • சுத்தி செய்தல்
  • பயன்படும் முறை
  • வளர்க்கும் விதம்

ஆகியவை ஒவ்வொன்றிற்கும் சுருக்கமாக கூறப்பட்டுள்ளது.

உதாரணமாக மாதுளையை எடுத்துக்கொள்வோம்.
  • Punica granatum
  • இனம் : செடி
  • மருந்துக்கு உதவும் பாகங்கள்: பழம், பழவோடு, பிஞ்சு
  • கட்டுப்படுத்தும் நோய்கள்: பேதி, இரத்தக் கிராணி, பாண்டு (வெளுப்பு) மேகநோய் ஆகிய பிணிகள் நீங்கி உடற்பலம் உண்டாகும்.
  • பயன்படுத்தும் விதம்:
    • 1. 15 கிராம் அளவு மாதுளம் பிஞ்சை எடுத்து அரைத்து 200 மிலி மோரில் மூன்று வேளை வீதம் பருகிவர பேதி இரத்தப்பேதி நிற்கும்.
    • 2. பழச்சாற்றை தேவைக்கேற்ப பருகிவர பாண்டு நீங்கி உடற்பலம் தரும்.
    • 3. இதன் பழஓட்டை நிழலில் காயவைத்து பொடியாக்கி 5-10 கிராம் வீதம் 3 வேளை பொடித்துண்ண பேதி வயிற்றுப்புண் நீங்கும்.
    • 4. மாதுளம் பிஞ்சு தளிர் இவைகளை 20 கிராம் அளவு எடுத்து நன்கு அரைத்து பாலில் மூன்று வேளை வீதம் உண்டுவர மேகநோய், வெள்ளைப்போக்கு நிற்கும்.
    • 5. வாய்ப்புண் குணமாக இதன் தளிரை தேவைக்கேற்ப மென்று தின்ன குணமாகும்.
    • 6. இதன் பழ-ஓட்டைப் பொடித்து அதனுடன் வெந்தயம் பொடி சமபங்கு சேர்த்து 5-8 கிராம் வரை தினமும் 3 வேளை வீதம் உண்டுவர மேகநோய், பாண்டு அடிக்கடி சிறுநீர் செல்லுதல் ஆகியவை குணமாகும்.
  • வளர்க்கும் விதம்: விதை, குச்சி.


இவ்விதமாக கீழ்கண்ட 14 மூலிகைச்செடிகள் குறித்து கூறப்பட்டுள்ளது:

  • 1. சோற்றுக்கற்றாழை : Aloe vera

  • 2. நெல்லி : Emblica officinalis

  • 3. செம்பரத்தை : Hibiscus rosasinensis

  • 4. துளசி : Ocimum sanctum

  • 5.தூதுவளை:Solanum trilobatum

  • 6.கற்பூரவள்ளி: Plectranthus ambonicus

  • 7.நிலவேம்பு: Andrographis paniculata

  • 8.மாதுளை:Punica granatum

  • 9.மஞ்சள் கரிசாலை: Wedelia calendulacea

  • 10. ஆடாதோடை: Adhatoda vasica

  • 11. பப்பாளி: Carrica papaya

  • 12. முருங்கை: Moringa indica (Moringa oleifera)

  • 13. நொச்சி : Vitex negundo

  • 14. மணத்தக்காளி : Solanum nigrum
by

வளங்குன்றா வளர்ச்சி

Friday, October 8, 2010

நவராத்திரி பற்றி பாரதியார்

நவராத்திரி பற்றி பாரதியார்

சக்திதாசன் என்று தம்மை அழைத்துக் கொண்ட மகாகவி பாரதியார் அன்னை பராசக்தியைப் போற்றும் உன்னதத் திருவிழாவான நவராத்திரியைக் கொண்டாடுவதில் மிகவும் விருப்பமுடையவராக இருந்தார்.

நவராத்திரித் திருநாளின் மகத்துவம் பற்றிய அவரது சிறு கட்டுரை –

ஒன்பதிரவு பராசக்தியைப் பூஜை செய்கிறோம். லக்ஷ்மி என்றும், சரஸ்வதி என்றும், பார்வதி என்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி. இவ்வுலகத்தை ஆக்கல், அழித்தல், காத்தல் என மூன்று தொழில் நடத்துவது.

ஹிமாசலம் தொடங்கி குமரி முனை வரை வேதத்தை நம்பும் கூட்டத்தார் எல்லாம் இந்தப் பூஜை செய்கிறோம். ஏழைகளாக இருப்போர் பராசக்திக்கு மலரையும், நீரையும், உள்ளத்தையும் கொடுத்து வலிமை பெறுகிறார்கள். செல்வமுடையோர் விருந்துகளும், விழாக்களும் செய்கின்றனர்.

மஹாளய அமாவாசை கழிந்தது.

இருளும், ஒளியும் மாறிவருவது இவ்வுலக இயற்கை. பகலிலே பெரும்பாலும் ஒளியுண்டு, மேகங்கள் வந்து சூரியனை மறைத்தாலொழிய. சில சமயங்களில் கிரகணம் பிடிக்கும். அதையும் தவிர்த்து விட்டால், இரவிலே தான் ஒளியின் வேறுபாடுகளும் மறைவுகளும் அதிகப்படுகின்றன. பகல் தெளிந்த அறிவு. இரவென்பது மயக்கம். பகலாவது விழிப்பு. இரவு என்பது தூக்கம். பகலாவது நல்லுயிர் கொண்டு வாழ்தல். இரவு லயம்.

சக்தி. நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி. விக்ரமாதித்யனும், காளிதாஸனும் வணங்கிய தெய்வம். உலகத்தார் இந்தப் பராசக்தியை நல்ல மழையருள் புரியும் சரத்காலத்தின் முதல் ஒன்பதிரவும் வணங்கி பூஜைகள் செய்யவேண்டும் என்பது பூர்வீகர் ஏற்பாடு. மிகப் பயனுடைய காரியம். மேலான வழி.

ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற முத்தொழிலும் எப்போதும் நடக்கின்றன. லோக சம்ரக்ஷணை எப்போதும் செய்யப் படுகிறது. எப்போதுமே ஆராதனை செய்யவேண்டும். சரத்காலத் தொடக்கத்திலே பேரருளைக் கண்டு விசேஷ விழா நடத்துகிறோம். தவம், கல்வி, தெய்வத்தைச் சரண்புகுதல் இம்மூன்றும் கர்மயோகம் என்று பதஞ்சலி முனிவர் சொல்லுகின்றார். லௌகீகக் கவலைகளிலே இம்மூன்று தொழிலையும் எப்போதும் செய்துகொண்டிருக்க முடியாமல் தடுக்கப் படும் சாமான்ய ஜனங்கள் நவராத்திரி ஒன்பது நாள் இரவும் பகலும் மேற்கூறிய மூவகை நெறியில் நிலை பெறும் வண்ணமான விதிகள் ஆகமங்களிலே கூறப்பட்டன. ஒன்பது நாளும் தியானம், தவம், கல்வி இவற்றிலே செலவிடத் திறமையில்லாதோர் கடைசி ஒன்பதாம் நாள் மாத்திரமேனும் விரதம் காக்கவேண்டும். இந்தப் பூஜையின் பொருள் மிகவும் தெளிந்தது.

சக்தியால் உலகம் வாழ்கிறது.
நாம் வாழ்வை விரும்புகிறோம்.
ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம்.

(நன்றி: பாரதியார் சிந்தனைச் செல்வம் (தொகுப்பு: கங்கா ராமமூர்த்தி, பாரதி காவலர் கே ராமமூர்த்தி), ஸ்ரீராம் டிரஸ்ட் வெளியீடு, 1988.

ஒருமுறை நவராத்திரியின்போது, தன் மகள் தங்கம்மாவும், அவள் தோழிகளும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அன்னை பராசக்தியின் பேரில் “நவராத்திரிப் பாட்டு” என்ற அழகிய பாடலை எழுதிக் கொடுத்தார். அந்தப் பாடல் -

உஜ்ஜயினீ நித்ய கல்யாணீ
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி (உஜ்ஜயினீ)

உஜ்ஜய காரண சங்கர தேவி
உமா ஸரஸ்வதி ஸ்ரீமாதா ஸா (உஜ்ஜயினீ)

வாழி புனைந்து மஹேசுர தேவன்
தோழி, பதங்கள் பணிந்து துணிந்தனம் (உஜ்ஜயினீ)

சத்ய யுகத்தை அகத்திலிருத்தி
திறத்தை நமக்கருளிச் செய்யும் உத்தமி (உஜ்ஜயினீ)

“உஜ்ஜயினீ” என்ற தேவியின் திருப்பெயரின் பொருள் “மேன்மேலும் வெற்றி பெறுபவள்” என்பது. வெற்றி தருபவள் என்றும் கொள்ளலாம். அன்னை காளீயின் அருள் பெற்ற விக்கிரமாதித்தன் (குப்த வம்சத்து அரசன்), தான் புதிதாக அமைத்த தலைநகரத்திற்கு அன்னையின் இப்பெயரைச் சூட்டினான். மத்தியப் பிரதேசத்தில் க்ஷிப்ரா நதிக்கரையில் இருக்கும் பழம்பெருமை வாய்ந்த “”உஜ்ஜைன்” என்ற இந்த நகரம் 52 சக்தி பீடங்களிலும், 12 ஜ்யோதிர்லிங்கத் தலங்களிலும் ஒன்றாக வைத்து எண்ணப் படும் பெருமை வாய்ந்தது.

இரண்டாம் அடியில் வரும் “உஜ்ஜய” என்ற சொல்லுக்கு உத்பத்தி, சிருஷ்டி என்றும் பொருள் கொள்ளலாம். எல்லா சிருஷ்டிக்கும் காரணனான சங்கரனின் தேவி என்று தேவியைப் புகழ்கிறார்.

“ஸா” என்பதன் பொருள் “அவள்” (சம்ஸ்க்ருதத்தில்). இப்படி எழுவாய்ச் சொல்லிலேயே சம்ஸ்க்ருதத்தைப் பயன்படுத்தி இருப்பது சிறப்பு, தமிழ் மணிப்ரவாள நடையில் அபூர்வம். அது மட்டுமல்ல “ஸா” என்பது பரதேவதையின் பெயர்களில் ஒன்றான மந்த்ர அக்ஷரமும் கூட.

“மஹேசுர தேவன் தோழி” என்பதும் அழகிய சொல்லாட்சி. சத்ய யுகத்தை நிலைநிறுத்தும் திறன் வேண்டி பாடல் முடிகிறது.

அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.



by

Author ஜடாயு

www.tamilhindu.com