Thursday, April 28, 2011

தியானத்தின் இல‌க்கு எவ்வடிவில் உருப்பெற வேண்டும் - ரமணர்


ரமணர்: தன் முயற்சியற்ற, விருப்பத்தேர்வற்ற தூய உணர்வே நமது உண்மையான இயல்பு. அந்த நிலைமை நாம் உணர்ந்து அவ்வனுபவத்தில் ஒன்றிவிடுவோமானால் அது சரியே. ஆயினும், ஒருவர் அந்நிலையை முயற்சி ஏதுமின்றி அடைவதற்கில்லை. அத்தகைய முயற்சியை முனைந்து மேற்கொள்வதே தியானம் எனப்படுவது.

ஜென்மாந்திர வாசனைகள் அனைத்தும் மனதை வெளிமுகமாய்ப் புறப் பொருள்கள் மீதே திருப்புகின்றன. அவ்வாறான எண்ணங்கள் யாவற்றையும் துறந்து, மனதை உள்முகமாகத் திருப்ப வேண்டும். இந்த அகமுக நாட்டத்திற்கு அநேகமாக எல்லோருக்குமே சுய முயற்சி தேவைப்படுகிறது. 'சிந்தையை அடக்கிச் சும்மா இரு' என்பதே சாதகர்களுக்கு எந்த ஒரு ஞானியின், எந்த ஒரு ஆன்மீக நூலின் போதனையாக அமைகிறது.

ஆனால் 'சும்மா இருத்தல்' அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஆகவேதான் அதற்கு முயற்சி அவசியப்படுகிறது. இந்த உச்ச ஆன்ம நிலையாம் மோன சாந்தியை முயற்சி ஏதுமின்றி எய்துவிட்ட யாரேனும் ஒருவரை நாம் காண முடிந்தாலும், அவர் போன ஜென்மத்தில் (முற்பிறவியில்) அதற்கான முயற்சி மேற்கொண்டதன் பயனே அது என்று நீங்கள் அனுமானிக்கலாம்.

முயற்சியற்ற, விருப்பத்தேர்வற்ற, பேரின்ப நிலையாம் தூய உணர்வைத் துய்க்க விடாமுயற்சி அவசியம். அந்த விடாமுயற்சியே 'தியானம்' ஆகும். அதற்கான தியானம் உங்களுக்குப் பிடித்தமான முறையில் அமையலாம். எவ்வகையான தியானம் எண்ண அலைகளையெல்லாம் ஓயச்செய்ய உடனடியாய் உதவுகிறது என்று பார்த்துத் தேர்ந்தெடுத்து அதனையே உமது தியான மார்க்கமாகக் கடைபிடிக்கலாம்.

'சிந்தையை அடக்கி சும்மாவிருக்கும்' திறமே ஜீவன்முக்தி. ஆயினும் இந்த உண்மையை எவ்வளவுதான் நீர் உமது மனத்திற்கு எடுத்துரைத்தாலும் சிந்தை சும்மா இருப்பதில்லை. ஏனெனில் மனம்தானே மனத்திற்கு அவ்வாறு கூறுகிறது! அந்த மனத்திற்கு அவ்வாறு அடங்கிவிடும் திறமோ அரிதினும் அரிது. மன நாசத்தையே சாத்திரங்கள் அனைத்தும் இயம்பியுள்ன. இதனையே சான்றோர்கள் திரும்பத் திரும்பத் கூறுவதை நாள்தோறும் கேட்கிறோம்.

நாம் குருவாக வரித்திருப்பவரும் இதையே கூறினாலும் மனத்தை அடக்கி நாம் சும்மா இருப்பதில்லை. மாயா உலகத்திலும், புலன்கள் உணர்த்தும் புறப் பொருட்கள் மீதும் மனத்தை மேய விட்டுவிடுகிறோம். இதன் காரணமாகவே முயற்சிகளற்ற பூரண சாந்தி நிலை எய்துவதற்கு நெஞ்சறிய, ஆன்மார்த்த அபார முயற்சி அவசியமாகிறது.

முயற்சி செய்யலாமல் உங்களால் வெறுமனே இருப்பது சாத்தியமே அல்ல. அவ்வாறு முயன்று மேன்மேலும் உள்ளாழ்ந்து ஆன்ம நிலைபேறு எய்தபின் முயற்சி ஏதும் செய்வதும் சாத்தியமே அல்ல. 
by
Webdunia.com (tamil)

1 comment:

  1. தீயொழுக்கம், தவறான நடத்தை, கயமை, பொய், கீழ்மை இவையெல்லாம் எந்தத் தொற்று நோயையும்விட மோசமான தொற்று நோய்களாகும், இவற்றை வெகு கவனமாகத் தவிர்க்க வேண்டும். //
    அருமையான பகிர்வு.பாராட்டுக்கள்.

    ReplyDelete